திருத்தப்பட்டவாறான, 2000ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க நிதிக் குத்தகைக்குவிடும் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட நிதிக் குத்தகைக்குவிடும் நிறுவனமான கோப்பரேட்டிவ் லீசிங் கம்பனி லிமிடெட், 2010ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க நிதிக் குத்தகைக்குவிடும் (அறிக்கையிடல் தேவைப்பாடுகள்) சட்டப் பணிப்புரையுடன் இணங்கியொழுகுவதற்கு மீண்டும் மீண்டும் தவறியதன் மூலம் இலங்கை மத்திய வங்கியின் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களப் பணிப்பாளரினால் வழங்கப்பட்ட பணிப்புரைகளுக்கு முரணாகச் செயற்பட்டுள்ளதுடன் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களினை ஒருங்கிணைப்பதற்கான முதன்மைத்திட்டம் தொடர்பாக இலங்கை மத்திய வங்கியினால் பரிந்துரைக்கப்பட்ட தேவைப்பாடுகளை நிறைவேற்றுதவற்கு பல கால நீடிப்புக்கள் வழங்கப்பட்டபோதிலும் கம்பனி தவறியிருந்தது. முதன்மைத் திட்டத்தைக் கடைப்பிடிப்பதற்கு கோப்பரேட்டிவ் லீசிங் கம்பனி லிமிடெட்டினால் திருப்திகரமான முன்னேற்றம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன் குறிப்பாக, தமது வியாபாரத் தொழிற்பாடுகளின் நீடித்துநிலைத்திருக்கும் தன்மையை உறுதிப்படுத்துவதற்கான சாத்தியமான திட்டமொன்றை உருவாக்குவதற்கு கோப்பரேட்டிவ் லீசிங் கம்பனி லிமிடெட் தவறியுள்ளது.
மேற்கூறியவற்றைக் கருத்திற்கொண்டு, நிதிக் குத்தகைக்குவிடும் சட்டத்தின் 9(1)(ஊ)ஆம் பிரிவின் நிதியதிகளின் பிரகாரம், நிதிக் குத்தகைக்குவிடும் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட நிதிக் குத்தகைக்குவிடும் நிறுவனமான கோப்பரேட்டிவ் லீசிங் கம்பனி லிமிடெட்டிற்கு வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களப் பணிப்பாளரினால் வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழ் 2026.06.10 அன்று தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் இரத்துச்செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, இரத்துச்செய்தலானது எத்திகதியில் நடைமுறைக்குவருகின்றதோ அத்திகதிக்கு முன்னர் கோப்பரேட்டிவ் லீசிங் கம்பனி லிமிடெட் கைச்சாத்திட்டிருந்த தொழிலைத் தவிர ஏதேனும் வேறு புதிய நிதிக் குத்தகைக்குவிடும் தொழிலை கொண்டுநடாத்துவதற்கு அந்நிறுவனம் அதிகாரத்தைக் கொண்டிருக்காது என பொதுமக்களுக்கு இத்தால் அறிவிக்கப்படுகின்றது.








