மத்திய கிழக்கில் காணப்படுகின்ற உயர்ந்தளவிலான பதற்றம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்றதன்மைகள் என்பவற்றிலிருந்து தோற்றம்பெறுகின்ற சவால்மிக்க உலகளாவிய மற்றும் உள்நாட்டு நிலைமைகள் என்பவற்றிற்கு மத்தியில் நிதியியல் முறைமையானது 2026இன் முதலாம் காலாண்டுப்பகுதியில் தாக்குப்பிடிக்குந்தன்மையுடன் தொடர்ந்தும் காணப்பட்டது. உலகளாவிய நிச்சயமற்றதன்மைகள் மற்றும் வெளிநாட்டுத் துறை அழுத்தங்கள் என்பன காணப்பட்ட போதிலும் உள்நாட்டுப் பேரண்டநிதியியல் நிலைமைகள் 2026இன் முதலாம் காலாண்டுப்பகுதியில் பரந்தளவில் ஆதரவாக தொடர்ந்தும் காணப்பட்டன. கொடுகடன் வளர்ச்சியானது காலப்பகுதியில் வலுவான தனியார் துறைக் கடன்வழங்கலினால் முக்கியமாக ஆதரவளிக்கப்பட்ட, வளர்ச்சியடைந்துவருகின்ற உரிமம்பெற்ற வங்கிகள் மற்றும் நிதிக் கம்பனிகள் என்பவற்றினால் வழங்கப்பட்ட மொத்த கொடுகடனுடன் காலப்பகுதியில் மேலும் துரிதமடைந்தது. ஆதலால், கொடுகடன் வெளிப்படுத்துகைகள் தனியார் துறையினை நோக்கி அதிகரித்தளவில் நகர்வடைந்துள்ள வேளையில், அரசாங்க மற்றும் பொதுக் கூட்டுத்தாபனங்களிற்கான வெளிப்படுத்துகைகள் சிறிதளவு மிதமடைந்தன. அரசு மற்றும் வங்கித்தொழில் துறைகளிற்கிடையிலான நிலைபெற்ற இடையிணைப்புக்களானவை அரசு மற்றும் வங்கி இடைத்தொடர்புகளினால் தொடர்ந்தும் பிரதிபலிக்கப்பட்டது.
கடந்த மூன்று ஆண்டுகளில் முதல் தடவையாக 70 சதவீதத்தினை கடந்த வங்கித்தொழில் துறையின் வைப்பிற்கான கொடுகடன் விகிதத்துடன் காலாண்டுப்பகுதியில் நிதியியல் இடையீடானது மேலும் மேம்பட்டமையானது கடன்வழங்கலில் காணப்பட்ட தொடர்ச்சியான மீட்சியினைக் குறித்துக்காட்டியது. இருப்பினும், மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான கொடுகடன் இடைவெளியானது நேர்மறையான புலத்தில் மேலும் விரிவடைந்தமையானது நிதியியல் துறையினுள் முறைமைசார்ந்த இடர்நேர்வின் சாத்தியமான கட்டியெழுப்பலினை எடுத்துக்காட்டியது. முன்னோக்கிச் செல்கையில், உயர்வடைந்த வலு விலைகள் உள்ளடங்கலாக உயர்வடைந்த உலகளாவிய சவால்கள் செலாவணி வீதத் தளம்பலுடன் இணைந்து பண்ட விலைத் தளம்பல், பாதகமான வானிலை நிலைமைகள் மற்றும் அதிகரித்துச் செல்கின்ற பணவீக்கம் என்பன பேரண்டநிதியியல் நிலைமைகள் மீது அழுத்தங்களினை ஏற்படுத்தலாம். எனவே, நீடித்துநிலைத்திருக்கின்ற இறைத் திரட்சி, வலுவான வெளிநாட்டுத் தாங்கியிருப்புக்கள் மற்றும் தோற்றம்பெற்றுவருகின்ற பேரண்டநிதியியல் இடர்நேர்வுகளின் மீதான விழிப்பான கண்காணிப்பு என்பன நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினைப் பாதுகாப்பதற்குத் தொடர்ந்தும் இன்றியமையாதவையாகக் காணப்படுகின்றன.
வங்கித்தொழில் துறையின் கொடுகடன் வளர்ச்சியானது 2026இன் முதலாவது காலாண்டுப் பகுதியில் தொடர்ந்தும் துரிதமடைந்த வேளையில், இலாபத்தன்மையில் சிறியளவிலான மெதுவடைதலொன்றுடன் இணைந்து திரவத்தன்மை மற்றும் மூலதனத் தாங்கியிருப்புக்கள் சொற்பளவிலான மிதமடைதலினைக் காட்டின. வங்கித்தொழில் துறையினால் வழங்கப்பட்ட கொடுகடனானது 2025இன் முதலாம் காலாண்டு இறுதியில் அறிக்கையிடப்பட்ட 7.9 சதவீத ஆண்டிற்காண்டு வளர்ச்சியொன்றுடன் ஒப்பிடுகையில் 2026இன் முதலாம் காலாண்டு இறுதியில் 24.4 சதவீதத்தினால் ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சியடைந்தது. கொடுகடன் விரிவாக்கம் மற்றும் கட்டம் 3 கடன்களில் ஏற்பட்ட சிறியளவிலானதொரு சரிவு என்பவற்றினால் ஆதரவளிக்கப்பட்டு, துறையின் கட்டம் 3 கடன்கள் விகிதமானது 2025இன் முதலாம் காலாண்டு இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 12.7 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2026இன் முதலாம் காலாண்டு இறுதியில் 9.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. மேலும், கட்டம் 3 கடன்களிற்கான பெறுமதியிழப்புக் காப்பு விகிதமானது 2025இன் முதலாம் காலாண்டு இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 54.1 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2026இன் முதலாம் காலாண்டு இறுதியில் 59.5 சதவீதத்திற்கு அதிகரித்தது. ரூபா மற்றும் அனைத்து நாணயத் திரவத்தன்மைக் காப்பு விகிதங்கள் 2025இன் முதலாம் காலாண்டு இறுதியில் பதிவுசெய்யப்பட்ட முறையே 342.4 சதவீதத்திலிருந்தும் 310.6 சதவீதத்திலிருந்தும் 2026இன் முதலாம் காலாண்டு இறுதியில் முறையே 267.9 சதவீதத்திற்கும் 234.7 சதவீதத்திற்கும் வீழ்ச்சியடைந்தமையினால், திரவத்தன்மைத் தாங்கியிருப்புக்களில் ஏற்பட்ட வீழ்ச்சியின் ஊடாக அதிகரித்தளவிலான கொடுகடன் வளர்ச்சியானது மேலும் பிரதிபலிக்கப்பட்டது. இருப்பினும், இத்திரவத்தன்மைத் தாங்கியிருப்புக்கள் 100 சதவீத குறைந்தபட்ச ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாட்டிற்கு நன்கு மேலாகத் தொடர்ந்தும் காணப்பட்டன. அதேவேளை, முக்கியமாக அதிகரித்தளவிலான தொழிற்பாட்டுச் செலவினங்களின் காரணமாக துறையின் வரிக்குப் பின்னரான இலாபமானது 2026இன் முதலாம் காலாண்டில் 7.1 சதவீத ஆண்டிற்காண்டு ரீதியிலான சிறியளவிலான வீழ்ச்சியொன்றினைப் பதிவுசெய்தது. வீழ்ச்சியடைந்த இலாபங்களை பிரதிபலித்து, வங்கித்தொழில் துறையின் பங்குரிமை மூலதனம் மீதான வருவாய் மற்றும் சொத்துக்கள் மீதான வருவாய் என்பன 2025இன் முதலாம் காலாண்டு இறுதியில் பதிவுசெய்யப்பட்ட முறையே 18.7 சதவீதம் மற்றும் 2.6 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2026இன் முதலாம் காலாண்டு இறுதியில் முறையே 14.8 சதவீதம் மற்றும் 2.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. மேலும், மொத்த மூலதனப் போதுமாந்தன்மை விகிதமானது கொடுகடன் விரிவாக்கத்தினால் பிரதானமாகத் தூண்டப்பட்டு உயர்வடைந்த இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்துக்களை முதன்மையாகப் பிரதிபலித்து, முன்னைய வருடத்தின் 19.4 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2026இன் முதலாம் காலாண்டு இறுதியில் 18.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. எனினும், மூலதனத் தாங்கிருப்புக்கள் குறைந்தபட்ச ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாடுகளுக்கு நன்கு மேலாக காணப்பட்டன. மேலும், அதிகரித்த இரண்டாந்தரச் சந்தை விளைவு வீதங்களுடன் இலங்கை ரூபாவின் அண்மைய தேய்வானது சொத்துக்கள் மீதான மீள்மதிப்பீடு தாக்கத்தினூடாக துறையின் மூலதனத் தாங்கிருப்புக்களை மேலும் மிதப்படுத்தக்கூடும். மேலும், மோசடிகள் மற்றும் இணையப்பாதுகாப்பு தொடர்பான நிகழ்வுகளுக்கு சாத்தியமான வெளிப்படுத்துகை கரிசனையொன்;றாகக் காணப்பட்டு, டிஜிட்டல் கொடுக்கல்வாங்கல்களில் உன்னிப்பான கண்காணிப்பினையும் சிறந்த விழிப்பினையும் தேவைப்படுத்துகின்றது.
நிதிக் கம்பனிகள் துறை 2026இன் முதலாம் காலாண்டின் போது அதன் குறிப்பிடத்தக்க கொடுகடன் வளர்ச்சி உத்வேகத்தினை தொடர்ந்த அதேவேளை, மூலதனப் போதுமாந்தன்மையில் சிறிதளவிலான மிதமடைதலொன்றுக்கு மத்தியில் திரவத்தன்மை மற்றும் இலாபத்தன்மை என்பவற்றை திருப்திகரமான மட்டங்களில் பேணியது. நிதிக் கம்பனிகள் துறையினால் வழங்கப்பட்ட கொடுகடன், வாகன மற்றும் தங்கத்தினால் பிணையுறுதியளிக்கப்பட்ட கடன்வழங்கலினால் பிரதானமாக தூண்டப்பட்டு, 2025இன் முதலாம் காலாண்டு இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 26.9 சதவீத ஆண்டிற்காண்டு வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், 2026இன் முதலாம் காலாண்டு இறுதியில் 52.4 சதவீதத்தினால் உயர்வடைந்தது. அதற்கமைய, வாகனத்தினால் பிணையுறுதியளிக்கப்பட்ட கடன்வழங்கல் ஆண்டிற்காண்டு 52.8 சதவீதத்தினால்; அதிகரித்த அதேவேளை தங்கத்தினால் பிணையுறுதியளிக்கப்பட்ட கடன்வழங்கல் 2026இன் முதலாம் காலாண்டு இறுதியில் 69.2 சதவீத வலுவான ஆண்டிற்காண்டு வளர்ச்சியொன்றை எடுத்துக்காட்டியது. எனினும், இறுக்கமடைந்த நாணயக் கொள்கை மற்றும் பேரண்ட முன்மதியுடைய வழிமுறைகளுடன் உயர்ந்தளவிலான ஏற்றுமதி வரிகள் மற்றும் செலாவணி வீதத்தின் தேய்வினால் தூண்டப்பட்ட, வாகன விலைகளின் அதிகரிப்பானது நிதிக்கம்பனிகள் துறையின் எதிர்கால கொடுகடன் வளர்ச்சி உத்வேகத்தினை மிதப்படுத்தக்கூடும். துரித கொடுகடன் விரிவாக்கத்துடன், 3ஆம் கட்ட கடன்களில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்களவிலான வீழ்ச்சியினால் ஆதரவளிக்கப்பட்டு, துறையின் மொத்த 3ஆம் கட்ட கடன்கள் விகிதமானது 2025இன் முதலாம் காலாண்டு இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 8.6 சதவீதத்திலிருந்து 2026இன் முதலாம் காலாண்டு இறுதியில் 4.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. 3ஆம் கட்ட கடன்களில் இவ்வீழ்ச்சியிற்கிடையிலும், துறையின் 3ஆம் கட்ட கடன்களுக்கான பெறுமதியிழப்பு காப்பு விகிதமானது 2025இன் முதலாம் காலாண்டு இறுதியில் 47.4 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2026இன் முதலாம் காலாண்டு இறுதியில் 45.1 சதவீதத்திற்கு குறைவடைந்தது. மேலும், நிதிக் கம்பனிகள் துறையின் திரவத்தன்மை மட்டமானது 2026இன் முதலாம் காலாண்டு இறுதியில் மொத்த திரவச் சொத்துக்களில் 9.7 சதவீத ஆண்டிற்காண்டு அதிகரிப்பொன்றுடன் குறைந்தபட்ச ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாடுகளுக்கு நன்கு மேலாக காணப்பட்டது. அதேவேளை, வரிக்குப் பின்னரான துறையின் இலாபமானது 2025ஃ26 நிதியாண்டில் ஆண்டிற்காண்டு 28.8 சதவீத குறிப்பிடத்தக்களவிலான அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்தது. மேலும், நிதிக் கம்பனிகள் துறையின் பங்குரிமை மூலதனம் மீதான வருவாயானது 2025இன் முதலாம் காலாண்டு இறுதியில் 15.2 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2026இன் முதலாம் காலாண்டு இறுதியில் 17.2 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை சொத்துக்கள் மீதான வருவாயானது அதே காலப்பகுதியில் 6.6 சதவீதத்திலிருந்து 6.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. மேலும், இக்காலப்பகுதியில் கணிசமானளவிலான கொடுகடன் விரிவாக்கத்தின் விளைவாக, துறையின் மொத்த மூலதனப் போதுமாந்தன்மை விகிதமானது 2025இன் முதலாம் காலாண்டு இறுதியில் 20.9 சதவீதத்திலிருந்து 2026இன் முதலாம் காலாண்டு இறுதியில் 18.4 சதவீதத்திற்கு மிதமடைந்தது.
2026இன் முதல் ஐந்து மாதகாலப்பகுதியில் சந்தைப் பங்கேற்பாளர்களின் ஊக நடவடிக்கைகளுடன் இணைந்து, மத்திய கிழக்கில் தீவிரமடைந்த பதற்றநிலை அத்துடன் அதிகரிக்கும் வெளிநாட்டுத் துறை பாதிக்கப்படும்தன்மைகள் என்பவற்றுக்கு மத்தியில் உள்நாட்டு நிதியியல் சந்தைகள் சில அழுத்தங்களை எதிர்கொண்டன. அனைத்து பங்கு விலைச் சுட்டெண், 1.4 சதவீதத்தினால் சிறிதளவு வீழ்ச்சியடைந்த அதேவேளை ஸ்ரான்டட் மற்றும் புவர்ஸ் எஸ்எல்20 சுட்டெண், 2026 மே இறுதியில் உள்ளவாறு 0.03 சதவீத மிதமான ஈட்டலுடன் அநேகமாக மாற்றமின்றிக் காணப்பட்டமை மூலம் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை அதிகரித்த தளம்பலையும் பலவீனமான சந்தை எண்ணப்பாங்கையும் வெளிப்படுத்தியது. உயர்வடைந்த தளம்பல், ஒழுங்கற்ற திரவத்தன்மை நிலைமைகள் மற்றும் தொடர்ச்சியான வெளிநாட்டு முதலீட்டாளர் மீளெடுப்புக்கள் ஆகிய பண்புகளைச் சந்தை நிலைமைகள் கொண்டிருந்து, உலகளாவிய இடர்நேர்வு எண்ணப்பாங்கிற்கும் அதிகரிக்கும் உள்நாட்டு பணவீக்க எதிர்பார்க்கைகளுக்கும் வெளிநாட்டு அதிர்வுகளுக்கும் அதிகரித்த உணர்திறனை பெருமளவில் எடுத்துக்காட்டியது. பங்குச் சந்தையிலிருந்தான தேறிய வெளிநாட்டு வெளிப்பாய்ச்சல்கள் 2025 மற்றும் 2024இல் பதிவாகிய திரண்ட முதலீட்டு உரிமைமாற்றங்களின் கூட்டானதொகையாகவிருந்ததுடன் ஐ.அ.டொலர் 103.4 மில்லியனை எட்டியது. அதேவேளை, அரசாங்கப் பிணையங்கள் சந்தையானது விளைவு வீதங்கள் மீது குறிப்பாக 2026 மாச்சு தொடக்கத்திலிருந்து மேல்நோக்கிய அழுத்தமொன்றினை அனுபவித்தது. விளைவு வீதங்கள் 2026 மே பின்னைய பகுதியில் கொள்கை வட்டி வீதத்தின் அதிகரிப்பின் பின்னர் மேலும் அதிகரித்தன. அரசாங்கப் பிணையங்களில் இரண்டாந்தரச் சந்தை நடவடிக்கைகள் இக்காலப்பகுதியில் ஓரளவு மிதமடைந்த அதேவேளை படிப்படியாக வளர்ச்சியடைகின்ற உலகளாவிய நிச்சயமற்றத்தன்மைகள் காரணமாக வெளிநாட்டு உட்பாய்ச்சல்கள் தளம்பல்மிக்கதாகக் காணப்பட்டன. உள்ளூர் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் இலங்கை ரூபா தொடர்ச்சியாகத் தளம்பலைப் பதிவுசெய்து, அதிகரித்த வெளிநாட்டுத் துறை அழுத்தங்களைப் பிரதிபலித்தது. உள்நாட்டு நாணயச் சந்தையில் மிகையான திரவத்தன்மை தொடர்ந்தும் விடாப்பிடியாகவிருந்ததுடன் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் ஊடாக மிகை திரவத்தன்மையினை மத்திய வங்கி ஈர்த்துக்கொண்டது.
பிணையுறுதியளிக்கப்பட்ட அடிப்படையிலமைந்த கடன் வழங்கலில் அண்மைய குறிப்பிடத்தக்க விரிவாக்கம் அத்துடன் புவிசார் அரசியல் நிச்சயமற்றத்தன்மைகள் மற்றும் உள்ளூர் வெளிநாட்டுச் சந்தையில் செலாவணிவீத ஏற்ற இறக்கங்கள் என்பவற்றிலிருந்து தோற்றம் பெறுகின்ற சொத்து விலைத் தளம்பல்கள் என்பவற்றைக் கருத்திற்கொண்டு, இலங்கை மத்திய வங்கி நிதியியல் முறைமையின் உறுதிப்பாட்டை உறுதிசெய்வதற்கு பல வழிமுறைகளை அறிமுகப்படுத்தியது. அதற்கமைய, 2026 மே 25 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் தங்கத்தினால் பிணையுறுதியளிக்கப்படும் கொடுகடன் வசதிகளுக்காக 70 சதவீதம் கொண்ட பெறுமதிக்கான கடன் உச்சவரம்புகள் அறிமுகப்படுத்தப்பட்ட அதேவேளை, மோட்டார் வாகனங்கள் தொடர்பில் வழங்கப்படும் கொடுகடன் வசதிகள் மீது ஏற்புடைய ஏற்கனவே காணப்படுகின்ற பெறுமதிக்கான கடன் விகித உச்சவரம்புகள் 10 சதவீதப் புள்ளிகளால் இறுக்கமடையச்செய்யப்பட்டுள்ளன.








