இலங்கை மத்திய வங்கி தங்கத்தால் பிணையுறுதியளிக்கப்பட்ட கடன்களுக்கான பெறுமதிக்கான கடன் விகித உச்சமொன்றை அறிமுகப்படுத்தியதோடு மோட்டார் வாகனங்களுக்காக வழங்கப்படும் கொடுகடன்களுக்கான பெறுமதிக்கான கடன் விகிதங்களையும் இறுக்கப்படுத்தியது

இலங்கை மத்திய வங்கியின் ஆளுகைச் சபையானது 2026 மே 25 அன்று அமுலுக்கு வரும் வகையில், தங்கத்தால் பிணையுறுதியளிக்கப்பட்ட கொடுகடன் வசதிகளுக்கு பெறுமதிக்கான கடன் உச்சமொன்றை அறிமுகப்படுத்தவும் மோட்டார் வாகனங்களுக்காக வழங்கப்படும் கொடுகடன் வசதிகளுக்கு பெறுமதிக்கான கடன் உச்ச வரம்புகளை இறுக்கப்படுத்தவும் தீர்மானித்தது. இலங்கை மத்திய வங்கியானது தனது பேரண்ட முன்மதியுடைய அதிகாரத்தின் கீழ், முன்மதியுடைய கடன் வழங்கல் நடைமுறைகளை ஊக்குவிப்பதற்கும், நிதி நிறுவனங்களின் தாக்குப்பிடிக்கும்தன்மையை பேணிப்பாதுகாப்பதற்கும், மற்றும் முறைமையியல் ரீதியான பாதிக்கப்படும்தன்மைகள் கட்டியெழுப்பப்படும் சாத்தியப்பாட்டினை குறைப்பதற்குமாக இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இந்த தீர்மானங்களை மேற்கொள்ளும்போது தங்கத்தால் பிணையுறுதியளிக்கப்பட்டு வழங்கப்பட்ட கடன் வசதிகள் மற்றும் மோட்டார் வாகனங்களுக்கு நிதியிடல் தொடர்பான கடன் வசதிகளில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க அதிகரிப்பையும், இத்தகைய போக்குகள் தற்போதைய கதியிலேயே தொடருமானால் நிதியியல் முறைமையின் மீது ஏற்படக்கூடிய சாத்தியமான தாக்கங்களையும் ஆளுகைச் சபை கருத்தில் கொண்டது. மாறுதலடையும் புவிசார் அரசியல் மற்றும் புவிசார் பொருளாதார அபிவிருத்திகளால் தோற்றமடைந்துள்ள அதிகரித்த நிச்சயமற்றதன்மைகளுடன்  அண்மைய செலாவணி வீத ஏற்றத்தாழ்வுகளும், தங்கம் உள்ளிட்ட சொத்து விலைகளில் தளம்பல்களை அதிகப்படுத்தியுள்ளன. வாகன இறக்குமதிகளுக்கான மிகைக் கட்டணத்தில் தற்காலிகமாக செய்யப்பட்ட அதிகரிப்பும், செலாவணி வீத மாற்றங்களும், வாகன விலைகளை தற்காலிகமாக உயர்த்தக்கூடும். இத்தகைய ஏற்றத்தாழ்வுகள் பிணையுறுதிகளின் மதிப்பீடுகளை பாதிக்கக்கூடியதுடன்,  கொடுகடன்; இடர்நேர்வு நிலைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய வேளையில்,  தொடர்ந்து வேகமாக அதிகரித்து வரும் கடன் விரிவாக்கம், நிதியியல் முறைமையில் மிதமிஞ்சிய இடர்நேர்வுகள் உருவாகுமொரு சாத்தியப்பாட்டினை தடுப்பதற்கானவொரு தலையீட்டினை தேவைப்படுத்தியுள்ளது.

அதன்படி, உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற நிதி நிறுவனங்களால் வழங்கப்படும், அமுலுக்கு வரும் தேதியன்றோ அல்லது அதற்குப் பின்னரோ புதுப்பிக்கப்படும் தற்போதைய கடன் வசதிகள் உட்பட,  தங்கத்தால் பிணையுறுதியளிக்கப்பட்ட கடன் வசதிகளுக்கு, பெறுமதிக்கான கடன் வீத உச்சம் 70 சதவீதமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மோட்டார் வாகனங்கள் தொடர்பாக வழங்கப்படும் கடன் வசதிகளுக்குப் பொருந்தக்கூடிய தற்போதைய பெறுமதிக்கான கடன்  உச்ச வரம்புகள் 10 சதவீதப் புள்ளிகளால் இறுக்கப்படுத்தப்பட்டுள்ளன.

உரிமம் பெற்ற வங்கிகள், உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட நிதி குத்தகைக்குவிடும் நிறுவனங்களிற்கு வழங்கப்பட்ட மேற்கூறிய பேரண்ட முன்மதியுடைய கொள்கை வழிகாட்டுதல்கள் பின்வரும் இணைய இணைப்புகள் வழியாகக் கிடைக்கப்பெறுகின்றன.

https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/laws/CBSL_Act_Directions_No_1_of_2026_e.pdf

https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/laws/CBSL_Act_Directions_No_2_of_2026_e.pdf

PDF

Published Date: 

Sunday, May 24, 2026