2024 மேயில் வெளிநாட்டுத்துறையானது சுருக்கமடைந்த வர்த்தகப் பற்றாக்குறையொன்று, பணிகள் கணக்கில் உயர்வடைந்த உட்பாய்ச்சல்கள் மற்றும் உயர்வடைந்த தொழிலாளர் பணவனுப்பல்கள் என்பவற்றினால் ஆதரவளிக்கப்பட்டது.
வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது ஆண்டிற்காண்டு அடிப்படையில் 2024 மேயில் சுருக்கமடைந்தபோதிலும் 2024 சனவரி தொடக்கம் மே வரையான காலப்பகுதியில் விரிவடைந்து காணப்பட்டது.
பணிகள் துறை உட்பாய்ச்சல்களானது (சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய்கள் நீங்கலாக) 2023 மேயில் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 265 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 2024 மேயில் ஐ.அ.டொலர் 306 மில்லியனாக விளங்கின
தொழிலாளர் பணவனுப்பல்கள் 2023 சனவரி தொடக்கம் மே வரையான காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 2,347 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 2024 சனவரி தொடக்கம் மே வரையான காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 2,624 மில்லியனாக விளங்கின.
சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய்கள் 2023 சனவரி தொடக்கம் மே வரையான காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 752 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 2024 சனவரி தொடக்கம் மே வரையான காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 1,406 மில்லியனாக விளங்கின.
அரச பிணையங்கள் சந்தையிலிருந்தான வெளிநாட்டு முதலீட்டு வெளிப்பாய்ச்சல்கள் 2024 மேயில் தொடர்ந்தன.
மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2024 மே இறுதியில் ஐ.அ.டொலர் 5.4 பில்லியனாக விளங்கி, 2023 இறுதியிலிருந்து ஐ.அ.டொலர் 1 பில்லியன் தொகையிலான அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்தன.
இலங்கை ரூபாவானது 2024 மே இறுதி வரையிலான ஆண்டு காலப்பகுதியில் தொடர்ந்தும் உயர்வடைந்து காணப்பட்டது.
கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் 2024 மேயில் தேறியளவிலான சிறிய வெளிப்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்தன.