பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையானது 2024 உறுப்புரை IV ஆலோசனையினையும் இலங்கையுடனான 48 மாத காலம் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழான இரண்டாவது மீளாய்வினையும் நிறைவுசெய்து, அதன் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிக்கும் பொருட்டு சிறப்பு எடுப்பனவு உரிமை (சிஎஉ) 254 மில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 336 மில்லியன்) தொகைக்கான உடனடி அணுகலினை நாட்டிற்கு வழங்குகின்றது.
நிகழ்ச்சித்திட்டத்தின் கீழான செயலாற்றம் வலுவடைந்து காணப்படுகின்றது. சமூக செலவிடல் மீதான குறிகாட்டி இலக்கினைத் தவிர, 2023 திசெம்பர் இறுதிக்கான அனைத்து கணியம்சார் இலக்குகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன. 2024 ஏப்பிறல் இறுதியளவில் நிறைவேற்றப்பட வேண்டிய அநேகமான கட்டமைப்புசார் அளவுகோல்கள் நிறைவுசெய்யப்பட்டன அல்லது தாமதமாக நடைமுறைப்படுத்தப்பட்டன. இருப்பினும், பொருளாதாரம் இன்னமும் பாதிப்படையக்கூடிய தன்மையில் காணப்படுவதுடன் படுகடன் நீடித்துநிலைத்திருக்கும் தன்மைக்கான பாதை தொடர்ந்தும் நிச்சயமற்றதன்மையினைக் கொண்டுள்ளது. சீர்திருத்த உத்வேகத்தினை நிலைபெறச்செய்தல் மற்றும் படுகடனை மறுசீரமைப்பதற்கான முயற்சிகள் என்பன பொருளாதாரத்தினை நீடித்து நிற்கின்ற மீட்சி மற்றும் படுகடன் நீடித்துநிலைத்திருக்கும் தன்மையை நோக்கிய பாதையொன்றில் இடம்பெறச்செய்வதற்கு இன்றியமையாதனவாகும்.
பேரண்டப்பொருளாதார உறுதிப்பாடு மற்றும் படுகடன் நீடித்துநிலைத்திருக்கும் தன்மை என்பவற்றினை மீட்டெடுத்தல், விலை உறுதிப்பாட்டினைப் பேணுதல், நிதியியல் உறுதிப்பாட்டினைப் பாதுகாத்தல், வெளிநாட்டுத் தாங்கிருப்புக்களை மீள்கட்டியெழுப்புதல் மற்றும் ஆளுகையினை வலுப்படுத்துதல் உள்ளடங்கலாக வளர்ச்சி சார்ந்த கட்டமைப்புசார் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தல் என்பவற்றிற்கான பரந்தளவிலான சீர்திருத்தங்கள் குறித்து உறுப்புரை IV ஆலோசனை கவனம் செலுத்தியது.