ஆளுநரின் அறிக்கை பற்றி தவறாக வழிநடத்தும் செய்தி அறிக்கைகளுக்கு இலங்கை மத்திய வங்கி விளக்கமளிக்கிறது

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் இந்திரஜித் குமாரசுவாமி அவர்கள் 2017 மே 09ஆம் திகதி நடைபெற்ற பத்திரிகை மாநாட்டில் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் பிழையாக வழிநடத்தும் செய்தி அறிக்கைகள் பற்றி மத்திய வங்கி, தங்களின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறது. இச்செய்தித்தாள் அறிக்கைகள் ஊழியர் சேம நிதியத் திணைக்களத்திற்குப் பொறுப்பான உதவி ஆளுநரும் அலுவலர்களும் ஒழுங்கீனமான கொடுக்கல்வாங்கல்களூடாக ஊழியர் சேம நிதியத்திற்கு இழப்புக்களை ஏற்படுத்திய அவர்களின் வகிபாகத்திற்காக மாற்றல் செய்யப்பட்டிருக்கின்றனர் என ஆளுநர் தெரிவித்ததாகக் குறிப்பிட்டு உண்மைக்குப் புறம்பான அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றன.  

ஆகவே, இலங்கை மத்திய வங்கி, பிழையான செய்தி அறிக்கைகளில் உள்ளடக்கப்பட்டிருந்த பிழையான தகவல்களைத் தெளிவுபடுத்துவதற்காக பின்வரும் விடயங்களைத் தெளிவுபடுத்த விரும்புகின்றது. 

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை 2013 – 2016 வரையான காலப்பகுதியில் அரச பிணையங்களில் ஊழியர் சேம நிதியத்தின் கொடுக்கல்வாங்கல்களைப் பரீட்சிப்பதற்காக உள்ளகப் புலனாய்வுக் குழுவொன்றினை நியமித்திருக்கிறது. குறிப்பிட்ட பரீட்சிப்பில் கண்டறியப்பட்ட பூர்வாங்க விடயங்களைப் பரிசீலனையில் கொண்டு விசாரணை நியதிகள், கொடுக்கல்வாங்கல்களின் மீது கவனத்தினைச் செலுத்தியதேயன்றி, குறிப்பிட்ட எந்தவொரு அலுவலர்களையும் விசாரணை செய்யாததுடன் இலங்கை மத்திய வங்கியின் கைநூலில் குறித்துரைக்கப்பட்டுள்ளவற்றிற்கு அமைவாக, நாணயச் சபை, தொடர்பான ஊழியர் சேம நிதிய அலுவலர்கள் தமதுபக்க நியாயங்களைத் தெரிவிப்பதனை இயலச்செய்யும் விதத்தில் மேலும் விசாரணைகளை நடத்துவதற்கு உதவி ஆளுநரொருவரை நியமிக்கத் தீர்மானித்திருக்கிறது. இவ்விசாரணைகளைத் தொடர்ந்து, அதில் கண்டறியப்பட்டவற்றின் அடிப்படையில் நாணயச் சபை மேலும் விசாரணைகளை நடத்துவதற்காக சுயாதீனமான நியாயச் சபையொன்றினை நியமிக்கும்.

ஆண்டுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இலங்கை மத்திய வங்கியின் அலுவலர்களது இடமாற்றங்கள், அலுவலர்களைப் பதவியில் அமர்த்தல் மற்றும் கடமைகளை மாற்றியமைத்தல் என்பன ஏற்புடைத்தான நடைமுறைகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டன. எனினும். ஊ.சே. நிதியக் கொடுக்கல்வாங்கல்கள்  தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட புலன்விசாரணைகளில் கண்டறியப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எந்தவொரு அலுவலர்களும் இன்னமும் இடமாற்றம் செய்யப்படவில்லை.  

இயற்கையான நீதிக் கோட்பாடுகளுக்கிணங்க நடத்தப்படுகின்ற பரீட்சிப்புக்களிலிருந்து பிழையான நடவடிக்கைகளுக்குரிய சான்றுகள் காணப்படுமிடத்து இலங்கை மத்திய வங்கியின் எந்தவொரு அலுவலருக்கெதிராகவும் இலங்கை மத்திய வங்கி கைநூலின் நியதிகளுக்கிணங்க ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 

விசாரணைகளின் போது ஏதேனும் தவறான நடத்தைகள் புரியப்பட்டமை கண்டுபிடிக்கப்படுமாயின், புலனாய்வுகளில் கண்டறியப்பட்ட விடயங்களை சட்ட நடைமுறைப்படுத்தல் அதிகாரிகளிடம் சமர்ப்பிப்பதற்கும் வழிமுறைகள் மேற்கொள்ளப்படும். 

Published Date: 

Friday, May 12, 2017