2021 யூனில் வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் தொடர்ந்து நான்காவது மாதமாக விரிவடைந்து காணப்படுகிறது. 2021 யூனில் ஏற்றுமதிகள் மற்றும் இறக்குமதிகள் இரண்டும் 2020 யூனுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்களவிற்கு உயர்வாகக் காணப்பட்டன. ஆண்டின் முதலரைப்பகுதியைப் பரிசீலனையில் கொள்கையில் ஏற்றுமதிகள் ஆரோக்கியமான வளர்ச்சியொன்றைப் பதிவுசெய்த போதும் இறக்குமதிச் செலவினம் உயர்ந்த வேகத்தில் அதிகரித்தது. 2021 யூனில் தொழிலாளர் பணவனுப்பல்கள் ஆண்டிற்கு ஆண்டு வீழ்ச்சியைப் பதிவுசெய்த வேளையில் சுற்றுலாவிலிருந்தான வருவாய்கள் தொடர்ந்தும் குறைந்தளவு மட்டத்தில் காணப்பட்டன. நிதியியல் கணக்கில் அரச பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை ஆகிய இரண்டிலும் வெளிநாட்டு முதலீடு இம்மாத காலப்பகுதியில் சிறிதளவு தேறிய வெளிப்பாய்ச்சலொன்றினைத் தொடர்ந்தும் பதிவுசெய்தது. இலங்கை ரூபா 2021 யூனில் பெருமளவிற்கு உறுதியாகக் காணப்பட்டது.
Friday, August 13, 2021
            







