தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் 2021 மேயில் அதிகரித்தது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2021 ஏப்பிறலின் 5.5 சதவீதத்திலிருந்து 2021 மேயில் 6.1 சதவீதத்திற்கு அதிகரித்தது. இது, உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் விலைகளின் மாதாந்த அதிகரிப்புகள் மூலம் பிரதானமாகத் தூண்டப்பட்டிருந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2021 ஏப்பிறலில் 9.7 சதவீதத்திலிருந்து 2021 மேயில் 10.3 சதவீதத்திற்கு அதிகரித்ததுடன் உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2021 ஏப்பிறலின் 2.2 சதவீதத்திலிருந்து 2021 மேயில் 2.5 சதவீதத்திற்கு அதிகரித்தது.

ஆண்டுச் சராசரியின் அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2021 ஏப்பிறலின் 5.3 சதவீதத்திலிருந்து 2021 மேயில் 5.4 சதவீதத்திற்குச் சிறிதளவு அதிகரித்தது. 

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றமானது, 2021 மேயில் 0.95 சதவீதத்தினைப் பதிவுசெய்தது. இதற்கு உணவு மற்றும் உணவல்லா வகைகளிலுள்ள பொருட்களின் விலைகளில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் காரணமாக அமைந்தன. அதற்கமைய, உணவு வகையினுள் 2021 மே காலப்பகுதியின் போது பிரதானமாக தேங்காய் எண்ணெய், அரிசி மற்றும் உடன் மீன் என்பவற்றின் விலைகளில் அதிகரிப்புகள் அவதானிக்கப்பட்டன. மேலும், நலம் (மருத்துவ ஆய்வுகூடப் பரிசோதனைகளுக்கான கொடுப்பனவுகள் மற்றும் தனியார் வைத்தியசாலை அறைக் கட்டணங்கள்) வீடமைப்பு, நீர், மின்சாரம், எரிவாயு மற்றும் ஏனைய எரிபொருட்கள் (திரவப் பெற்றோலிய எரிவாயு) அத்துடன் தளபாடம், வீட்டுச் சாதனங்கள் மற்றும் வழமையான வீட்டுப் பராமரிப்புத் துணை வகைகளில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்பின் காரணமாக உணவல்லா வகையிலுள்ள பொருட்களின் விலைகள் மாதகாலப்பகுதியில் அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்தன.

மேலும், ஆண்டிற்கு ஆண்டு மையப் பணவீக்கம், 2021 ஏப்பிறலின் 4.1 சதவீதத்திலிருந்து 2021 மேயில் 4.2 சதவீதத்திற்கு சிறிதளவு அதிகரித்த அதேவேளை, ஆண்டுச் சராசரி மையப் பணவீக்கம் 2021 மேயில் 4.4 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது.

முழுவடிவம்

Published Date: 

Monday, June 21, 2021