தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 2017 திசெம்பரின் 7.3 சதவீதத்திலிருந்து 2018 சனவரியில் 5.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இவ்வீழ்ச்சிக்கு, 2017 சனவரியில் நிலவிய உயர்ந்த தளமும் அதேபோன்று 2018 சனவரியில் உணவு விலைகளில் ஏற்பட்ட மாதாந்த வீழ்ச்சியும் காரணங்களாக அமைந்தன.
ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2017 திசெம்பரின் 7.7 சதவீதத்திலிருந்து 2018 சனவரியில் 7.6 சதவீதத்துக்கு வீழ்ச்சியடைந்தது.
மாதாந்த மாற்றத்தினைப் பரிசீலனையில் கொள்ளும் போது, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் 2017 திசெம்பரின் 126.6 சுட்டெண் புள்ளிகளிலிருந்து 2018 சனவரியில் 125.8 சுட்டெண் புள்ளிகளுக்கு வீழ்ச்சியடைந்தது. இம்மாதாந்த வீழ்ச்சிக்கு உணவு வகையிலுள்ள விடயங்களில் குறிப்பாக, காய்கறிகள், பச்சை மிளகாய், தேங்காய், சின்ன வெங்காயம் மற்றும் அரிசி என்பனவற்றின் விலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியே முக்கிய காரணமாகும். இருப்பினும், உடன்மீன் மற்றும் சில பழவகைகளின் விலைகள் அதிகரித்தன. உணவல்லா வகையில் உணவகங்கள் மற்றும் சுற்றுலாவிடுதிகள் மற்றும் போக்குவரத்துத் துணை வகைகளில் விலை அதிகரிப்புக்கள் அவதானிக்கப்பட்டன.
பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மையப் பணவீக்கம் 2017 செத்தெம்பரிலிருந்து காட்டிய வீழ்ச்சிடைந்து செல்லும் போக்கினைத் தொடர்ந்தது. ஆகவே, ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மையப் பணவீக்கம் 2017 திசெம்பரின் 2.7 சதவீதத்திலிருந்து 2018 சனவரியில் 2.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மையப் பணவீக்கத்தின் ஆண்டுச் சராசரி 2017 திசெம்பரின் 4.9 சதவீதத்திலிருந்து 2018 சனவரியில் 4.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.