வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2018 ஒத்தோபர்

2018 ஒத்தோபரில் இலங்கையின் வெளிநாட்டுத் துறை தொடர்ந்தும் அழுத்தத்திற்கு உட்பட்டிருந்தது. ஒத்தோபரில் ஏற்றுமதிகளில் சிறிதளவு வளர்ச்சி காணப்பட்ட வேளையில், இறக்குமதிச் செலவினம் உயர்ந்த வளர்ச்சியைக் கொண்டிருந்தமையின் காரணமாக வர்த்தகப் பற்றாக்குறை குறிப்பிடத்தக்களவிற்கு விரிவடைந்தது. எனினும், குறிப்பிட்ட இறக்குமதி வகைகளின் மீது அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளின் காலங்கடந்த தாக்கத்தின் காரணமாக இனிவரும் ஆண்டுகளில் இறக்குமதிகளின் அதிகரித்துச் செல்லும் போக்கு குறைவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, தொழிலாளர் பணவனுப்பல்கள் ஒத்தோபரில் ஆரோக்கியமான அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்த வேளையில் சுற்றுலாவிலிருந்தான வருவாய்கள் சிறிதளவு அதிகரிப்பினைப் பதிவுசெய்தன. நிதியியல் கணக்கு, அரச பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை என்பனவற்றிலிருந்தான வெளிநாட்டு முதலீடுகள் வெளிப்பாய்ந்தமையைக் காட்டியது. வெளிநாட்டு நாணய வெளிப்பாய்ச்சல் இறக்குமதிச் செலவினத்துடன் சேர்ந்து உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையின் மீது அழுத்தமொன்றினை ஏற்படுத்தின. இதன் விளைவாக, இலங்கை ரூபா, ஆண்டின் முதல் பத்து மாத காலப்பகுதியில் 12.3 சதவீதத்தினால் தேய்வடைந்தது. மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2018 செத்தெம்பர் இறுதியின் ஐ.அ.டொலர் 7.2 பில்லியனிலிருந்து ஒத்தோபர் இறுதியில் ஐ.அ.டொலர் 7.9 பில்லியனுக்கு அதிகரித்தமைக்கு ஐ.அ.டொலர் 1 பில்லியன் கொண்ட வெளிநாட்டு நாணய கால நிதியிடல் வசதி கிடைக்கப்பெற்றமை உதவியாக அமைந்தது.

முழுவடிவம்

Published Date: 

Friday, December 21, 2018