பாரம்பரிய புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது பல துறைகள் முழுவதும் நடவடிக்கைகள் மெதுவடைந்த பருவகால விதத்தின் பின்னர், கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), 2024 ஏப்பிறலில் 31.9 சுட்டெண் பெறுமதிக்கு வீழ்ச்சியடைந்தது. முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் கட்டடவாக்க நடவடிக்கைகளில் சுருக்கத்தினை இது எடுத்துக்காட்டுகின்றது. பதிலிறுப்பாளர்கள் குறிப்பிடுவதற்கிணங்க, நீடித்த புத்தாண்டு விடுமுறை காரணமாக மாதகாலப்பகுதியில் அநேகமான கட்டடவாக்க இடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்து, மாதத்திற்குமாத இவ்வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.
குறைந்த பணி நாட்களுடன்கூடிய ஏப்பிறலில் புதிய கட்டளைகள் குறைவடைந்தன. எனினும், விலைக்கோரல் வாய்ப்புக்களில் காணப்படுகின்ற அதிகரித்த போக்கு வரவிருக்கும் மாதங்களில் தொடர்ந்தும் நிகழுமென அநேகமான பதிலிறுப்பாளர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். மேலும், சந்தையில் பங்கேற்பு நிறுவனங்கள் தீவிரமான போட்டியை பரந்தளவில் உச்சப்படுத்தின. மொத்த நடவடிக்கைகள் மற்றும் புதிய கட்டளைகள் என்பவற்றில் வீழ்ச்சிக்கிசைவாக தொழில்நிலையும் கொள்வனவுகளின் அளவும் மாதகாலப்பகுதியில் குறைவடைந்தன. மேலும், ஒட்டுமொத்த விலை மட்டங்களின் வீழ்ச்சியடைகின்ற போக்கு ஏப்பிறலிலும் தொடர்ந்து இடம்பெற்றது. அதேவேளை நிரம்பலர் விநியோக நேரம் மாதகாலப்பகுதியில் ஒப்பீட்டளவில் மெதுவான வீதத்தில் நீட்சியடைந்தது.
புதிய கட்டடவாக்கக் கருத்திட்டங்களில் எதிர்பார்க்கப்படும் அதிகரிப்பின் பிரதான காரணமாக அடுத்த மூன்று மாதங்களுக்கான தொழிற்துறை எதிர்பார்ப்புக்கள் சாதகமாகக் காணப்படுகின்றன.