அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

உள்நாட்டுத் தொழிற்பாடுகள்

நாணயக் கொள்கை நடைமுறைப்படுத்தல் என்றால் என்ன?

நாணயக் கொள்கை நடைமுறைப்படுத்தலானது மத்திய வங்கியின் முக்கிய கொள்கையை அடைவதற்கு அதாவது உள்நாட்டு விலை உறுதிப்பாடை அடைவதற்கு மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையினால் மேற்கொள்ளப்பட்ட நாணயக் கொள்கைத் தீர்மானங்களைத் தொழிற்படுத்துவதற்கான பல்வேறுபட்ட நாணயக் கொள்கைக் கருவிகளைப் பயன்படுத்துவதில் ஈடுபடுகின்றது.

திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் என்றால் என்ன?

திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் என்பது 2023 ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 31ஆம் பிரிவின் கீழ் மத்திய வங்கியினால் தற்காலிக அடிப்படையில் அல்லது உடனடி அடிப்படையில் பிணையங்களை வாங்குவதனை அல்லது விற்பனை செய்வதனைக் குறிக்கிறது. திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் என்பது, பணவீக்க இலக்கிடலுடன் குறுங்கால வட்டி வீதங்களைப் பேணும் பொருட்டு உள்நாட்டு நாணயச் சந்தைத் திரவத்தன்மையினை முகாமைப்படுத்துவதற்கு அரச பிணையங்களை அத்துடன்/ அல்லது மத்திய வங்கிப் பிணையங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மத்திய வங்கியினால் நடாத்தப்படும் முதன்மைச் சந்தையை அடிப்படையாகக் கொண்ட நாணயக் கொள்கைத் தொழிற்பாடுகளைக் குறிக்கிறது.

திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் எவ்வாறு தொழிற்படுகின்றன?

திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பணவீதங்களில் செல்வாக்கைச் செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படுத்துகின்றன. இது, பொருளாதாரத்தின் ஏனைய குறுங்கால வட்டி வீதங்களின் அசைவுகளிலும் அதேபோன்று நீண்ட கால வட்டி வீதங்களிலும் தாக்கத்தினைக் கொண்டிருக்கிறது. இது வைப்புக்கள் மற்றும் கடன்வழங்கல் வீதங்கள் போன்ற ஏனைய வட்டி வீதங்களின் மீதும் தாக்கத்தினைத் தோற்றுவிப்பதுடன், அதன் மூலமாக வீட்டுத்துறையினர் மற்றும் வியாபாரங்களின் சேமிப்பு மற்றும் செலவிடலினதும் சொத்து விலைகளினதும் தீர்மானங்களின் மீதும் தாக்கத்தினை ஏற்படுத்தி இறுதியாகப் பொருளாதாரத்திலுள்ள பொருளாதார நடவடிக்கையிலும் விலை மட்டங்களிலும் தாக்கத்தினை ஏற்படுத்துகிறது.

திறந்த சந்தைத் தொழிற்பாடுகளில் பங்கேற்பதற்கு தகைமையுடையவர்கள் யார்?

இலங்கையில் தொழிற்படுகின்ற அனைத்து உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளும் திறந்த சந்தைத் தொழிற்பாடுகளில் பங்கேற்பதற்கு தகைமையுடையனவாகும். தனியான முதனிலை வணிகர்களும் (ஏனைய உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் தவிர்ந்த முதனிலை வணிகர்களாக நியமிக்கப்பட்ட கம்பனிகள்) ஊழியர் சேமலாப நிதியமும் திறந்த சந்தைத் தொழிற்பாடுகளின் கீழ் வசதிகளைப் பெறுவதற்கு மட்டுப்படுத்தப்பட்ட அணுகுதல்களைக் கொண்டுள்ளன. இந்நிறுவனங்கள் பங்கேற்கும் நிறுவனங்கள் எனப் பொதுவாக அறியப்படுகின்றன.

அழைப்புப் பணச் சந்தை என்றால் என்ன?

வங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பணச் சந்தை என்பது பொதுவாக, எந்தவொரு பிணையுறுதியும் இல்லாமல் அவர்களிடையே கடன்பாடுகளையும் கடன்வழங்கல்களையும் மேற்கொள்வதன் மூலமாக ஓரிரவு திரவத்தன்மை தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்காக உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுக்காக நடத்தப்படும் சந்தையாகும். இக்கொடுக்கல்வாங்கல்கள் அவற்றின் தன்மையில் குறுகிய காலத்தினை கொண்டனவாக இருப்பதுடன் பணச் சந்தையில் திரவத்தன்மைக்கான கேள்வியையும் (ஒதுக்குகள்) நிரம்பலையும் பிரதிபலிக்கின்றன.

அழைப்புப் பணச் சந்தை என்றால் என்ன?

சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பணவீதம் என்பது உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளிடையேயான ஓரிரவு அடிப்படையில் நடாத்தப்படும் வங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பணம் கொடுக்கல்வாங்கல்களின் நிறையேற்றப்பட்ட சராசரி வட்டி வீதமாகும். சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதம், மத்திய வங்கியின் நாணயக் கொள்கைக் கட்டமைப்பின் தொழிற்பாட்டு இலக்காகப் பணியாற்றுவதுடன் இது, ஒவ்வொரு வேலை நாளன்றும் மத்திய வங்கியினால் கணிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.

மீள்கொள்வனவு சந்தை என்றால் என்ன?

மீள்கொள்வனவு சந்தை என்பது எந்தவொரு பிணையுறுதியும் இல்லாமல் அவர்களிடையே கடன்பாடுகளையும் கடன்வழங்கல்களையும் மேற்கொள்வதன் மூலமாக ஓரிரவு திரவத்தன்மை தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்காக பங்கேற்கும் நிறுவனங்களிற்கு உதவுகின்ற குறுங்கால சந்தையொன்றாகும்.

சராசரி நிறையேற்றப்பட்ட மீள்கொள்வனவு வீதம் என்றால் என்ன?

சராசரி நிறையேற்றப்பட்ட மீள்கொள்வனவு வீதம் என்பது குறிப்பிட்ட நாளொன்றிற்கான பங்கேற்கும் நிறுவனங்களிடையேயான ஓரிரவு அடிப்படையில் கொண்டுநடாத்தப்படும் ஓரிரவு மீள்கொள்வனவு சந்தை கொடுக்கல்வாங்கல்களின் நிறையேற்றப்பட்ட சராசரி வட்டி வீதமாகும் என்பதுடன் ஒவ்வொரு வேலை நாளன்றும் மத்திய வங்கியினால் கணிக்கப்பட்டு வெளியிடப்படுகின்றது.

மத்திய வங்கியின் திரவத்தன்மை என்றால் என்ன? நாணயக் கொள்கை நடைமுறைப்படுத்தலுக்கு இது ஏன் முக்கியமானது?

மத்திய வங்கியின் திரவத்தன்மை என்பது, ஒதுக்குத் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்காகவும் கடப்பாடுகளைத் தீர்ப்பனவு செய்வதற்காகவும் வர்த்தக வங்கிகள் மத்திய வங்கியுடன் வைத்திருக்கும் ஒதுக்கு நிலுவைகளின் தொகையாகும் என வரைவிலக்கணம் செய்யப்படுகிறது. ஒதுக்குக் கணக்கில் பேணப்பட வேண்டும் எனத் தேவைப்படுத்தப்படும் மட்டத்திற்கு மேலாக வர்த்தக வங்கிகளினால் ஒதுக்குக் கணக்கில் வைத்திருக்கப்படும் தொகை திரவத்தன்மையின் பற்றாக்குறையினை அல்லது மிகையினைத் தீர்மானிக்கிறது. மத்திய வங்கியுடனான வங்கியொன்றின் வைப்பு நிலுவைகள் அவர்கள் ஒதுக்கு/ தீர்ப்பனவுக் கணக்கில் பேணப்பட வேண்டும் என தேவைப்படுத்தப்பட்ட நிலுவையிலும் பார்க்க உயர்வானதாக (குறைந்தது) இருக்குமாயின், குறிப்பிட்ட நாளன்று மிகையான திரவத்தன்மை (பற்றாக்குறை) காணப்படுவதாக வங்கித்தொழில் முறைமை கருதுகிறது.

மத்திய வங்கியானது மிகையான அல்லது பற்றாக்குறையான திரவத்தன்மையினை அடிப்படையாகக் கொண்டு நிலவுகின்ற நாணயக் கொள்கை நிலைப்பாட்டிற்கமைவாக, சராசரி நிறையேற்றப்படும் அழைப்புப் பணவீதத்தினை விரும்பத்தக்க மட்டத்திலும் விரும்பத்தக்க திசையிலும் வழிநடாத்துவதற்காகப் பொருத்தமான கருவிகளைப் பயன்படுத்துவதற்கு தீர்மானங்களை மேற்கொள்கிறது.

திரவத்தன்மையினை அதிகரிக்கின்ற மற்றும் குறைக்கின்ற முக்கிய காரணிகள் யாவை?

மத்திய வங்கியுடன் பங்கேற்கும் நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் கொடுக்கல்வாங்கல்கள் பொருளாதாரத்தின் திரவத்தன்மை மட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. இதற்கமைய, திரவத்தன்மையினை அதிகரிக்கின்ற காரணிகள் முக்கியமாகப் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன;

அ) மத்திய வங்கி மூலம் இரண்டாந்தரச் சந்தையிலிருந்து திறைசேரி உண்டியல்களை/ முறிகளை கொள்வனவுசெய்தல் 

i)  தற்காலிக அடிப்படையொன்றில் (திறந்த சந்தை தொழிற்பாடுகளின் கீழ் நேர்மாற்று மீள்கொள்வனவுக் கொடுக்கல்வாங்கல்கள்)
ii) உடனடி அடிப்படையொன்றில் (திறந்த சந்தை தொழிற்பாடுகளின் கீழ் திறைசேரி உண்டியல்களை/ முறிகளை கொள்வனவுசெய்தல்)

ஆ) மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட சொந்தப் பிணையங்களை மீள்கொள்வனவுசெய்தல்.

இ) மத்திய வங்கியின் துணைநில் கடன்வழங்கல் வசதி ஏற்பாடுகள்

ஈ) உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையிலிருந்து மத்திய வங்கியினால் வெளிநாட்டுச் செலாவணியை கொள்வனவு செய்தல்

உ) மத்திய வங்கியின் மூலம் வெளிநாட்டு நாணய பரஸ்பர பரிமாற்றல் விற்றல்-வாங்கல் கொடுக்கல்வாங்கலில் ஈடுபடுதல்.

ஊ) மத்திய வங்கியினால் அரசாங்கத்தின் வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட கடன்பெறுகைகள் கொள்வனவு செய்தல்.

எ) உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினால் மத்திய வங்கியில் செய்யப்படும் நாணய வைப்புக்கள்

ஏ) மத்திய வங்கியினால் முதலாந்தரச் சந்தையிலிருந்து அரச பிணையங்களை கொள்வனவு செய்தல்*

ஐ) அரசாங்கத்திற்கு மத்திய வங்கி விடுவிக்கின்ற இலாபங்கள்**

ஒ) மத்திய வங்கி மூலம் அரசாங்கத்திற்கு தற்காலிக முற்பணங்களை வழங்குதல்***

ஓ) மத்திய வங்கியின் மூலம் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு கடன்களையும் முற்பணங்களையும் வழங்குதல்.

திரவத்தன்மையினைக் குறைக்கின்ற காரணிகள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன;

அ) மத்திய வங்கியினால் இரண்டாந்தரச் சந்தைக்கு திறைசேரி உண்டியல்களை/ முறிகளை விற்பனை செய்தல் (திறந்த சந்தை தொழிற்பாடுகளின் கீழ் நேர்மாற்று மீள்கொள்வனவு ஏலங்கள்).

ஆ) மத்திய வங்கியினால் இரண்டாந்தரச் சந்தைக்கு திறைசேரி உண்டியல்களை/ முறிகளை விற்பனை செய்தல் (திறந்த சந்தை தொழிற்பாடுகளின் கீழ் திறைசேரி உண்டியல்களை/ முறிகளை விற்பனை செய்தல்).

இ) மத்திய வங்கியினால் சொந்தப் பிணையங்கள் வழங்கப்பட்டமை.

ஈ) மத்திய வங்கி மூலம் துணைநில் வைப்பு வசதியை வழங்குதல்.

உ) மத்திய வங்கி மூலம் உள்நாட்டுச் சந்தையில் வெளிநாட்டுச் செலாவணியை விற்பனை செய்தல்

ஊ) மத்திய வங்கியின் மூலம் வெளிநாட்டு நாணய பரஸ்பர பரிமாற்றல் விற்றல்-வாங்கல் கொடுக்கல்வாங்கலில் ஈடுபடுதல்.

எ) அரசாங்கத்தின் வெளிநாட்டு நாணயத்தில் பெயர்குறிக்கப்பட்ட கடன்களின் மீள்கொடுப்பனவிற்காக அரசாங்கத்திற்கு மத்திய வங்கி மூலம் வெளிநாட்டுச் செலாவணியை விற்பனைசெய்தல்.

ஏ) மத்திய வங்கியிலிருந்து உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளால் மேற்கொள்ளப்பட்ட நாணய எடுப்பனவுகள்.

ஐ) மத்திய வங்கி வசமிருந்த திறைசேரி உண்டியல்களின்/ முறிகளின் முதிர்ச்சி/ மீள்கொள்வனவு.

ஒ) பங்கேற்கும் நிறுவனங்கள் மூலம் மத்திய வங்கியிலிருந்து பெறப்பட்ட கடன்களையும் முற்பணங்களையும் மீளச்செலுத்துதல்.

மீள்கொள்வனவு/ நேர்மாற்று மீள்கொள்வனவு ஏலங்கள் என்றால் என்ன?

உள்நாட்டுப் பணச் சந்தைகளிலிருந்து திரவத்தன்மையினை ஈர்த்துக்கொள்ளவும் சந்தைக்கு உள்ளீடு செய்வதற்குமாக மீள்கொள்வனவு/ நேர்மாற்று மீள்கொள்வனவு ஏலங்கள் மத்திய வங்கியினால் நடத்தப்படுகின்றன. மீள்கொள்வனவு ஏலங்கள் மிகையான திரவத்தன்மையினை ஈர்த்துக்கொள்வதற்காக நடாத்தப்படுவதுடன் நேர்மாற்று மீள்கொள்வனவு ஏலங்கள் உள்நாட்டு பணச் சந்தைக்கு திரவத்தன்மையினை உள்ளீடு செய்வதற்காக நடத்தப்படுகின்றன. மீள்கொள்வனவு ஏலங்களின் கீழ் மத்திய வங்கி இணங்கிக் கொள்ளப்பட்ட எண்ணிக்கையான நாட்களின் பின்னர் கொடுக்கல்வாங்கல்களை நேர்மாற்றிக் கொள்வதற்கான உடன்படிக்கையொன்றுடன் தற்காலிக அடிப்படையொன்றின் மீது அரச பிணையங்களை (மீள்கொள்வனவு) விற்பனை செய்வதாகும். நேர்மாற்று மீள்கொள்வனவு ஏலங்களின் கீழ், மத்திய வங்கி, இணங்கிக் கொள்ளப்பட்ட எண்ணிக்கையான நாட்களின் பின்னர் கொடுக்கல்வாங்கல்களை நேர்மாற்றிக் கொள்வதற்கான உடன்படிக்கையொன்றுடன் தற்காலிக அடிப்படையொன்றின் மீது அரச பிணையங்களை வாங்கிக் கொள்கிறது (நேர்மாற்று மீள்விற்பனை). ஏலங்களின் காலம், சந்தைத் திரவத்தன்மையின் கிடைப்பனவினை அடிப்படையாகக் கொண்டு (1 நாள் - ஓரிரவு மீள்கொள்வனவு நேர்மாற்று மீள்கொள்வனவு, 7 நாட்களுக்குக் குறைவானவை – குறுங்கால மீள்கொள்வனவு/ நேர்மாற்று கொள்வனவு ஏலங்கள்/ 7 நாட்களுக்கும் கூடுதலாக 90 நாட்கள் வரை – நீண்ட கால மீள்கொள்வனவு/ நேர்மாற்று மீள்கொள்வனவு) தீர்மானிக்கப்படுகிறது.

உடனடி ஏலங்களென்றால் என்ன?

உடனடி ஏலங்கள்/ நீண்ட காலத் திரவத்தன்மை மிகை/ பற்றாக்குறையினைக் கட்டுப்படுத்துவதற்காக நிரந்தர அடிப்படையில் திரவத்தன்மையை ஈர்த்துக் கொள்வதற்காக அல்லது உள்ளீடு செய்வதற்காக மத்திய வங்கியால் நடாத்தப்படுகின்றன. சந்தை திரவத்தன்மை பாரிய மிகையான தன்மையுடனும் நீண்ட காலத்திற்கு விடாப்பிடியாகவும் தொடர்ந்தும் காணப்படுமாயின், மத்திய வங்கி பணச் சந்தையிலிருந்து திரவத்தன்மையினை நிரந்தரமாக ஈர்த்துக் கொள்வதற்காக அதன் வசமுள்ள அரச பிணையங்களின் உடமையிலிருந்து இரண்டாந்தரச் சந்தையில் உடனடி அடிப்படையொன்றின் மீது அரச பிணையங்களை விற்பனை செய்யத் தீர்மானிக்கிறது. இதேபோன்று இரண்டாந்தரச் சந்தையில் உடனடி அடிப்படையொன்றின் மீது அரச பிணையங்களை விற்பனை செய்வதனூடாக மத்திய வங்கி திரவத்தன்மையை நிரந்தரமாக உள்ளீடு செய்கின்றது.

பங்கேற்கும் நிறுவனங்களுக்காக கிடைக்கத்தக்கதாகவுள்ள திறந்த சந்தைத் தொழிற்பாட்டு ஏலங்கள் யாவை?

திரவத்தன்மை நிலைமைகளைப் பொறுத்து மத்திய வங்கி, திறந்த சந்தைத் தொழிற்பாடுகளின் கீழ் பல்வேறு விதமான ஏலங்களையும் நடத்துகிறது.

ஏல வகை நோக்கம் தகைமையுடைய இணைத்தரப்பினர் காலம்
ஓரிரவு மீள்கொள்வனவு ஏலங்கள் ஓரிரவு அடிப்படையில் திரவத்தன்மையை ஈர்த்துக் கொள்ளல் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் ஊ.சே.நிதியம் (ஊ.சே.நிதியம் மீள்கொள்வனவு ஏலங்களுக்கு மாத்திரம்) 1 நாள்
ஓரிரவு நேர்மாற்று மீள்கொள்வனவு ஏலங்கள் ஓரிரவு அடிப்படையில் திரவத்தன்மையை உள்ளீடு செய்தல்
ஓரிரவு திரவத்தன்மை ஆதரவு வசதி ஓரிரவு அடிப்படையில் திரவத்தன்மையை உள்ளீடு செய்தல் தனியான முதனிலை வணிர்கள்  1 நாள்
குறுங்கால மீள்கொள்வனவு ஏலங்கள் குறுங்கால அடிப்படையில் திரவத்தன்மையை ஈர்த்துக் கொள்ளல் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் ஊ.சே.நிதியம் (ஊ.சே.நிதியம் மீள்கொள்வனவு ஏலங்களுக்கு மாத்திரம்) 2-7 நாட்கள்
குறுங்கால நேர்மாற்று மீள்கொள்வனவு ஏலங்கள் குறுங்கால அடிப்படையில் திரவத்தன்மையை உள்ளீடு செய்தல்
குறுங்கால திரவத்தன்மை ஆதரவு வசதி ஏலங்கள் குறுங்கால அடிப்படையில் திரவத்தன்மையை உள்ளீடு செய்தல் தனியான முதனிலை வணிர்கள் 2-7 நாட்கள்
நீண்டகால மீள்கொள்வனவு ஏலங்கள் நீண்டகால அடிப்படையில் திரவத்தன்மையை ஈர்த்துக் கொள்ளல் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் ஊ.சே.நிதியம் (ஊ.சே.நிதியம் மீள்கொள்வனவு ஏலங்களுக்கு மாத்திரம்) 7 நாட்களுக்குக் கூடுதலாக 90 நாட்கள் வரை
நீண்டகால நேர்மாற்று மீள்கொள்வனவு ஏலங்கள் நீண்டகால அடிப்படையில் திரவத்தன்மையை உள்ளீடு செய்தல்
நீண்டகால திரவத்தன்மை ஆதரவு வசதி ஏலங்கள் நீண்டகால அடிப்படையில் திரவத்தன்மையை உள்ளீடு செய்தல் தனியான முதனிலை வணிர்கள் 7 நாட்களுக்குக் கூடுதலாக 90 நாட்கள் வரை
உடனடி விற்பனை ஏலங்கள் நிரந்தர அடிப்படையில் திரவத்தன்மையை ஈர்த்துக் கொள்ளல் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள், தனியான முதனிலை வணிகர்கள் மற்றும் ஊ.சே.நிதியம் ஏற்புடைத்தானதல்ல
உடனடி கொள்வனவு ஏலங்கள் நிரந்தர அடிப்படையில் திரவத்தன்மையை உள்ளீடு செய்தல்

திரவத்தன்மை ஆதரவு வசதி என்றால் என்ன?

திரவத்தன்மை ஆதரவு வசதி என்பது திரவத்தன்மைப் பற்றாக்குறை காணப்படுகின்ற காலப்பகுதியில் பணச் சந்தையின் மீதான தேவையற்ற அழுத்தங்களை இல்லாமல் செய்வதன் மூலம் உள்நாட்டு பணச் சந்தையின் சுமுகமான தொழிற்பாடுகளை உறுதிப்படுத்தும் நோக்குடன் தனியான முதனிலை வணிகர்களின் திரவத்தன்மை தேவைப்பாடுகளை தீர்த்துவைப்பதற்கு மத்திய வங்கியினால் தனியான முதனிலை வணிகர்களுக்கு வழங்கப்படுகிறது.

திரவத்தன்மை உதவி வசதி என்றால் என்ன?

விதிவிலக்கான சூழ்நிலைகளில், மத்திய வங்கியானது 2023ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 36ஆம் பிரிவிற்கமைவாக ஆளுகைச் சபையினால் தீர்மானிக்கப்பட்டவாறு 91 நாட்கள் காலப்பகுதிக்கு நிதியியல் நிறுவனங்களுக்கு திரவத்தன்மை உதவியை வழங்குகின்றது. 

வங்கி வீதம் என்றால் என்ன?

வங்கி வீதம் என்பது, 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 36ஆம் பிரிவின் கீழ் வங்கித்தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்ற அவசர காலக் கடன்களுக்கான வீதமாகும். தற்பொழுது வங்கி வீதம் மத்திய வங்கியினால் அடித்தள அளவுக்குறியீட்டு வீதத்துடன் எல்லை வீதத்தினையும் சேர்த்து (உ-ம்: சராசரி நிறையேற்றப்பட்ட புதிய வைப்பு வீதம் + 300 அடிப்படைப் புள்ளிகள்) மத்திய வங்கியினால் தீர்மானிக்கப்படுகிறது. 

நியதி ஒதுக்கு விகிதம் என்றால் என்ன?

2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 32ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் நியதிகளில் ஒவ்வொரு உரிமம்பெற்ற வர்த்தக வங்கியும் தொடர்பான வங்கியின் மொத்த ரூபா வைப்புப் பொறுப்புக்களின் விகிதத்தில் மத்திய வங்கியுடன் பேணும் ஒதுக்குக் கணக்கில் வைத்திருக்க வேண்டிய குறைந்தபட்ச ஒதுக்குத் தொகையினை நியதி ஒதுக்கு விகிதம் வரையறை செய்கிறது.

நியதி ஒதுக்கு விகிதத்தினைக் கணிப்பதற்கு எவ்வகையிலான வைப்புக்கள் பரிசீலனையில் கொள்ளப்படுகின்றன?

கேள்வி வைப்புக்கள், தவணை மற்றும் சேமிப்பு வைப்புக்கள் உட்பட உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட வைப்புக்கள், ரூபா நியதிகளில் குறிப்பிடப்படுகின்ற ஏனைய வைப்புக்கள் மற்றும் மத்திய வங்கியின் நாணயச் சபையினால் காலத்திற்குக் காலம் தீர்மானிக்கப்படுகின்றவாறான வேறு ஏதேனும் வைப்பு வகைகள் என்பன நியதி ஒதுக்கு விகிதத்தில் உள்ளடக்கப்படுகின்றன.

ஒரு நாளுக்குள்ளேயான திரவத்தன்மை வசதி என்றால் என்ன?

அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறைமையின் மிதமான தொழிற்பாடுகளை வசதியளிக்கும் நோக்குடன் அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறைமையின் வணிகர் நேரடி பங்கேற்பாளர்களுக்கு அரச பிணையங்களின் பிணையுறுதிகளுக்கெதிராக மத்திய வங்கி வட்டியற்ற ஒரு நாளுக்குள்ளேயான திரவத்தன்மை வசதியை வழங்குகிறது.

அரசாங்கத்திற்கான தற்காலிக முற்பணங்கள் என்றால் என்ன?

2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 127ஆம் நியதிகளில், மத்திய வங்கியானது செலவினங்களுக்கு நிதியிடுவதற்காக நிதியியல் ஆண்டின் முதலாவது மாதத்திற்குள் நேரடி தற்காலிக முற்பணங்களை அரசாங்கத்திற்கு வழங்கலாம். தொடர்பான காலப்பகுதிக்கான 2003ஆம் ஆண்டின் 03ஆம் இலக்க நிதி முகாமைத்துவ (பொறுப்பு) சட்டத்தின் கீழ், அமைச்சரவை அமைச்சரால் வெளியிடப்பட்ட அரையாண்டில் அறிக்கையிடப்பட்டவாறு அத்தகைய முற்பணங்கள் ஆறு மாத காலப்பகுதியை விஞ்சாததொரு காலப்பகுதிக்குள் மீளச்செலுத்தப்பட வேண்டும் என்பதுடன் அத்தகைய முற்பணங்களின் வெளிநிற்கும் மொத்தத் தொகை முன்னைய நிதியியல் ஆண்டின் முதல் நான்கு மாதக் காலப்பகுதியின் வருமானத்தில் பத்து சதவீதத்தினை விஞ்சுதலாகாது. தற்காலிக முற்பணங்கள் தற்போது நிலவுகின்ற சந்தை தொடர்பான வீதங்களில் வட்டியைக் கொண்டிருக்கும்.

அரசாங்கத்தின் வங்கியாளர் என்ற ரீதியில் மத்திய வங்கியின் வகிபாகம் என்ன?

2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 07 மற்றும் 81ஆம் பிரிவுகளின் கீழ் மத்திய வங்கியானது அரச திணைக்களங்கள், நிறுவனங்கள் மற்றும் குறிப்பிட்ட நியதிச் சபைகளுக்கு அரசாங்கத்தின் வங்கியாளர் என்ற ரீதியில் கணக்குகளைப் பேணுவதுடன் வங்கித்தொழில் வசதிகளையும் வழங்குகிறது. 

அதிகாரமளிக்கப்பட்ட பணத் தரகர் என்பவர் யார்?

அதிகாரமளிக்கப்பட்ட பணத் தரகர்கள் என்பது பணம், வெளிநாட்டுச் செலாவணி மற்றும் அரச பிணையங்கள் ஆகியவற்றில் சந்தை இடையேற்பாட்டாளர்களாக தொழிற்பட்டு வருகின்ற நிதியியல் நிறுவனங்களாக காணப்படுகின்ற பங்கேற்கின்ற நிறுவனங்களிடையேயான கொடுக்கல்வாங்கல்களுக்கு வசதியளிக்கின்றவர்களாவர். அவர்கள் கொடுக்கல்வாங்கலொன்றிற்கு இணைத்தரப்பினர்களாக இல்லாமல் முகவராக தொழிற்படுகின்றனர். எனினும், தரகுக் கட்டணத்திற்காக வர்த்தக இணைத்தரப்பினர்களிடையே பேச்சுவார்த்தை, ஏற்பாடு அல்லது உடன்படிக்கைகளுக்கு வசதியளித்தல் என்பனவற்றில் ஈடுபடுகின்றனர். எனவே, அதிகாரமளிக்கப்பட்ட பணத்தரகர்கள் பணச் சந்தையில் விலை கண்டறியும் செய்முறைக்கு உதவுவதுடன் மத்திய வங்கி அவர்களின் தொழில்சார் நடத்தைகளை உறுதிப்படுத்துவதற்காக அவர்களை ஒழுங்குமுறைப்படுத்துகிறது. தற்போது, இலங்கையில் 09 பணத் தரகுக் கம்பனிகள் தொழிற்பட்டு வருகின்றன.

 

* 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 128ஆம் பிரிவின் நியதிகளில், மத்திய வங்கியானது மத்திய வங்கிச் சட்டம் நடைமுறைக்கு வருகின்ற திகதியிலிருந்து கடந்த பதினெட்டு மாத காலப்பகுதியில் நிலவுகின்ற சந்தை தொடர்பான வீதங்களைக் கொண்டு முதலாந்தரச் சந்தையில் அரசாங்கத்தினால் வழங்கப்படும் பிணையங்களை கொள்வனவு செய்யலாம்.

** 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் நியதிகளில், ஒவ்வொரு நிதியியல் ஆண்டின் இறுதியின் பின்னர் 60 ஆண்டுகளைக் கொண்ட முதிர்ச்சிக்கு முன்னர், முன்னைய ஏற்பாடுகளுடனான இணங்குவித்தலுக்குப் பின்னர் ஏதேனும் பகிரத்தக்க வருவாய்களில் மத்திய வங்கி அரசாங்கத்திற்கான பகிரத்தக்க வருவாய்களை ஒதுக்குவதற்கான தேவையுள்ளது.

*** மேலதிக தகவல்களுக்கு, 20ஆம் இலக்க வினாவை உசாத்துணையாக கொள்ளவும்.