Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

நாணயக்கொள்கை மீளாய்வு: இல. 08 - 2021 நவெம்பர்

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது 2021 நவெம்பர் 24ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் என்பவற்றினை முறையே 5.00 சதவீதம் மற்றும் 6.00 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. பேரண்டப் பொருளாதார நிலைமைகளயும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பக்கங்களில் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்திகளையும் கவனமாக பரிசீலனையிற் கொண்டதன் பின்னர் சபையானது இத்தீர்மானத்தை மேற்கொண்டிருந்தது. அண்மைய பணவீக்க அதிகரிப்பானது வழங்கல் இடையூறுகள் அத்துடன் உலகளவில் பண்ட விலைகளின் திடீர் அதிகரிப்பு என்பவற்றின் முக்கிய காரணமாகவே தூண்டப்பட்டிருந்ததென நாணயச்சபையானது அவதானத்தில் கொண்டிருந்ததுடன் முன்னோக்கிய காலப்பகுதியில் பொருளாதாரம் அதனது சாத்தியப்பாட்டினை அடைந்துகொள்வதற்கு ஆதரவளிக்கின்ற அதேவேளை பொருத்தமான வழிமுறைகளுடன் நடுத்தரகாலத்தில் இலக்கிடப்பட்ட மட்டங்களில் பணவீக்கத்தினைப் பேணுவதற்கான அதன் கடப்பாட்டினை மீளவும் வலியுறுத்தியிருந்தது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் 2021 ஒத்தோபரில் அதிகரித்துள்ளது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2021 செத்தெம்பரின் 6.2 சதவீதத்திலிருந்து 2021 ஒத்தோபரில் 8.3 சதவீதத்திற்கு அதிகரித்தது. இது, உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் விலைகளின் மாதாந்த அதிகரிப்பினால் தூண்டப்பட்டிருந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2021 செத்தெம்பரின் 10.0 சதவீதத்திலிருந்து 2021 ஒத்தோபரில் 11.7 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கமும் (ஆண்டிற்கு ஆண்டு)  2021 செத்தெம்பரின் 3.0 சதவீதத்திலிருந்து 2021 ஒத்தோபரில் 5.4 சதவீதத்திற்கு அதிகரித்தது.

ஆண்டுச் சராசரியின் அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண், 2021 செத்தெம்பரின் 5.5 சதவீதத்திலிருந்து 2021 ஒத்தோபரில் 5.7 சதவீதத்திற்கு அதிகரித்தது.

முழுவடிவம்

நாணயச் சபை நான்கு புதிய உதவி ஆளுநர்களை நியமித்துள்ளது

நாணயச் சபையானது, 2021 நவெம்பர் 17ஆம் திகதியன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் திரு. கே. ஜி. பி. சிறிகுமார, திரு டி. குமாரதுங்க, திருமதி. யு. எல். முதுகல மற்றும் திரு சி. பி. எஸ். பண்டார ஆகியோரை 2021 நவெம்பர் 17ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் உதவி ஆளுநர்களாக பதவியுயர்த்தியுள்ளது.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் – 2021 ஒத்தோபர்

தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2021 ஒத்தோபரில் விரிவடைந்தன

நாட்டில் தயாரிப்பு நடவடிக்கைகள் வலுவாக மீட்சியடைவதனை எடுத்துக்காட்டி, தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 6.1 சுட்டெண் புள்ளிகளைக் கொண்ட அதிகரிப்புடன் 2021 ஒத்தோபரில் 60.4 ஆக 7-மாத உயர்வொன்றினை எட்டியது. தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணில் இவ்வதிகரிப்பிற்கு அனைத்து சுட்டெண்களிலும் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் காரணமாக அமைந்தது.    

பணிகள் கொ.மு.சுட்டெண்ணானது, புதிய தொழில்கள், தொழில் நடவடிக்கைகள் மற்றும் நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகள் துணைச் சுட்டெண்களின் அதிகரிப்புக்கள் மூலம் துணையளிக்கப்பட்டு, 2021 ஒத்தோபரில் 57.9 இற்கு அதிகரித்தது. 2021 மாச்சு தொடக்கம் அவதானிக்கப்பட்ட பணிகள் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்களில் இது வலுவான வளர்ச்சி வீதமாகும்.

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2021 செத்தெம்பர்

வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறை 2020 செத்தெம்பரில் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 525 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 2021 செத்தெம்பரில் ஐ.அ.டொலர் 495 மில்லியனிற்குச் சுருக்கமடைந்தது. ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் தொடர்ச்சியாக நான்காவது தடவையாக 2021இல் ஐ.அ.டொலர் 1.0 பில்லியனை விஞ்சிய பெறுமதிகளைத் தொடர்ந்தும் பதிவுசெய்த வேளையில், இறக்குமதிச் செலவினம் 2020 செத்தெம்பரில் பதிவுசெய்யப்பட்ட அதே மட்டத்தில் காணப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் முன்னைய மாதத்திலும் பார்க்க குறிப்பிடத்தக்கதொரு அதிகரிப்புடன் வளர்ச்சி உத்வேகத்தினைத் தொடர்ந்தன. 2021 செத்தெம்பரில் தொழிலாளர் பணவனுப்பல்களில் மிதமான போக்கொன்று அவதானிக்கப்பட்டது. இம்மாத காலப்பகுதியில் சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கு சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்தான கூட்டுக்கடன் வசதியின் பெறுகைகளினதும் இலங்கை மத்திய வங்கிக்கும் வங்காளதேச வங்கிக்கும் இடையிலான இருபுடை நாணயப் பரஸ்பர பரிமாற்றல் ஏற்பாடுகளின் எஞ்சியுள்ள பெறுகைகளினதும் கிடைப்பனவுகளுடன் வலுவடைந்து காணப்பட்டது. அதேவேளை, வங்கிகளுக்கிடையிலான சந்தையில் சராசரி நிறையேற்றப்பட்ட உடனடி செலாவணி வீதம் மத்திய வங்கியினால் அத்தியாவசிய இறக்குமதிகளின் தேங்கியுள்ள கப்பற்சரக்குகளை விடுவிப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் செலாவணி வீதம் தொடர்பிலான வழிகாட்டல்களுடனும் இம்மாத காலப்பகுதியில் உயர்வடைந்தும் நிலைப்படுத்தப்பட்டும் காணப்பட்டது.

முன்மொழியப்பட்ட பிணையமாக்கப்பட்ட நிதியிடல் ஒழுங்கேற்பாட்டின் கீழ் தொழிலாளர்களால் வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணம் வலுக்கட்டாயமாக இலங்கை ரூபாவாக மாற்றப்படும் என்ற ஊகம் முற்றுமுழுதாக அடிப்படையற்றது

பிணையமாக்கப்பட்ட நிதியிடல் ஒழுங்கேற்பாடு தொடர்பில் அண்மையில் அறிவிக்கப்பட்ட முன்மொழிவுகளுக்கான கோரிக்கை, தொழிலாளர்களால் வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் அனைத்து பணவனுப்பல்களும் உரிமம்பெற்ற வங்கிகளுக்கு கிடைத்ததன் மீது இலங்கை ரூபாவாக மாற்றுவதனை இலக்காகக் கொண்டது என தன்னலம் கொண்ட தரப்பினர்களால் பரப்பப்பட்டுவருகின்ற ஊகம் அடிப்படையற்றதாகும். 

இக்குற்றச்சாட்டில் உண்மைகள் எதுவுமில்லையென இலங்கை மத்திய வங்கி திட்டவட்டமாகக் குறிப்பிடுகின்றது. 

Pages