தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் வழிமுறைகள் 2021 இறுதியளவில் அலுவல்சார் ஒதுக்குகள் ஐ.அ.டொலர் 3 பில்லியனிற்கு மேலாகக் காணப்படுவதனை உறுதிப்படுத்தும் என்பதனை இலங்கை மத்திய வங்கியானது பொது மக்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றது. கொவிட்-19 நோய்த்தொற்றின் பொருளாதாரத் தாக்கத்தினால் ஏற்பட்ட சிக்கல்களுக்கும் வெளிநாட்டுத் துறையின் பாதகமான அபிவிருத்திகளினால் ஏற்படுத்தப்பட்ட சவால்களுக்கும் மத்தியில் இலங்கைப் பொருளாதாரம் 2021 ஆண்டு முழுவதும் தாக்குப்பிடிக்கக்கூடிய தன்மையினைக் காண்பித்தது. நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் கொடுப்பனவு உள்ளடங்கலாக வெளிநாட்டுக் கடன்களை மீள்செலுத்துவதன் ஊடாக இலங்கை அதன் படுகடன் கடப்பாடுகளையும் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ளது. தற்போதுள்ள வெளிநாட்டுப் படுகடன் நீடித்துநிலைத்திருக்கும் முறையொன்றில் முகாமைத்துவம் செய்வதற்கு ஆண்டின் ஆரம்பத்திலிருந்து படுகடனல்லாத பாய்ச்சல்களை ஊக்குவிப்பது தொடர்பில் வலியுறுத்துவதுடன் அலுவல்சார் ஒதுக்குகளை குறைநிரப்புவதற்கான சாத்தியமான வழிமுறைகளை வினைத்திறனாகக் கண்டறிவதில் மத்திய வங்கியும் அரசாங்கமும தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளன.















