பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களால் பெற்றுக்கொள்ளப்பட்ட குத்தகை வசதிகளுக்கான சலுகைத் திட்டம்

தொடர்ந்து பரவிவரும் கொவிட்-19 தொற்றின் காரணமாக பயணிகள் போக்குவரத்துத் துறையில் ஈடுபட்டுள்ள வியாபாரங்கள் மற்றும் தனிநபர்கள் எதிர்நோக்குகின்ற இடர்பாடுகள் மற்றும் நெருக்கடிகளைக் கருத்திற் கொண்டு, இலங்கை மத்திய வங்கியானது உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள், உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள், உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் விசேட குத்தகைக் கம்பனிகளை (இதன் பின்னர் நிதியியல் நிறுவனங்களெனக் குறிப்பிடப்படும்) கொவிட்-19 பரவலினால் பாதிக்கப்பட்டுள்ள தனிநபர்கள் மற்றும் வியாபாரங்கள் பெற்றுக்கொண்ட குத்தகை வசதிகளுக்காக ஏப்பிறல் 01ஆம் திகதியிலிருந்து தொடங்கும் ஆறு மாதங்கள் அல்லது ஒரு குறுகிய காலப்பகுதிக்கு சலுகையை வழங்குமாறு கோருகின்றது.

பொதுப்பயணிகள் போக்குவரத்து மற்றும் பாடசாலைப் போக்குவரத்துச் சேவை, அலுவலகப் போக்குவரத்துச் சேவை, முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாடகை வாகனச் சேவைகள் (Taxis) மற்றும் சுற்றுலாத் துறைக்கு பயணிகள் போக்குவரத்துச் சேவையை வழங்குபவர்கள் உள்ளடங்கலான தனியார் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வியாபாரங்கள் மற்றும் தனிநபர்கள் ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் தகுதியுடைய கடன்படுநராகக் கருதப்படுவர். அத்தகைய கடன்படுநர்கள், 2021 ஏப்பிறல் 19 அல்லது அதற்கு முன்னர் குத்தகைத் தவணைக் கட்டணங்களைத் தாமதிக்குமாறு எழுத்துமூலமாகவோ அல்லது இலத்திரனியல் முறை மூலமாகவோ கோருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். கோரிக்கையை மேற்கொள்வதிலேற்பட்ட தாமதம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தால், 2021 ஏப்பிறல் 19 இற்குப் பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளை நிதியியல் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளமுடியும்.

தகுதியுடைய கடன்படுநரால் பெற்றுக்கொள்ளப்பட்ட, 2021 மாச்சு 31 வரைகடன் தாமதகாலத்தின் கீழுள்ள குத்தகை வசதிகள் உள்ளிட்ட செயற்படு குத்தகை வசதிகளுக்கு இச்சலுகை வழங்கப்படும். நிதியியல் நிறுவனங்கள் ஒத்திவைக்கப்பட்ட காலத்திற்கான வட்டிவீதத்தை ஒத்திவைக்கப்பட்ட காலப்பகுதியில் செலுத்தவேண்டிய குத்தகைத் தவணைக் கட்டணங்களின் மீது 2021 ஏப்பிறல் 01ஆம் திகதியிலுள்ள 364 நாள் கொண்ட திறைசேரி உண்டியல்களின் அண்மைய ஏலவீதத்தை விஞ்சாத வீதத்துடன் சிறிய வட்டி எல்லையைச் சேர்த்து அறவிடமுடியும். இவ்வட்டி எல்லையானது உரிமம்பெற்ற வங்கிகளுக்கு ஆண்டுக்கு ஒரு சதவீதமாகவும், நிதி மற்றும் குத்தகைக் கம்பனிகளுக்கு ஆண்டுக்கு 5.5 சதவீதம் அல்லது அதிகப்படியாக 11.5 சதவீதமாகவும் குறித்துரைக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகள், அலுவலகங்கள், விமான நிலையம் போன்றவை மீளத்திறக்கப்படுவதால் பொதுப் போக்குவரத்து படிப்படியாக வழமைக்குத் திரும்புகின்றமை, நீடிக்கப்பட்ட கடன் தாமதகாலத்தின் காரணமாக நிதியியல் நிறுவனங்கள் மீதான தாக்கம் மற்றும் தொடர்ச்சியான தடுப்பூசியேற்றம் நிகழ்ச்சித்திட்டம் என்பவற்றைக் கருத்திற்கொண்டு தற்போதுள்ள குத்தகை வசதியின் ஒத்திவைக்கப்பட்ட காலப்பகுதியில், 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகாலப்பகுதியில் வழங்கப்பட்ட கடன் தாமதகாலத்துக்குரிய நிலுவையாகவுள்ள தவணைக் கட்டணங்களை நிதியியல் நிறுவனங்கள் மீளப்பெற ஆரம்பிக்கும். கொவிட்-19 காலப்பகுதியில் வழங்கப்பட்ட கடன் காலதாமதங்கள் தொடர்பான கடன் மீளச்செலுத்துகைகளை மேற்கொள்ளும்போது கடன்படுநர்கள் அதிகளவான கடன்சுமைகளை தாங்காத வகையில் இக்கடன் காலதாமதம் மற்றும் கடன் தவணை மீள்செலுத்துதல் என்பன வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்குத்தகை வசதிகளுக்கு தண்டப்பணம் அறவிடுவதைத் தவிர்க்குமாறு நிதியியல் நிறுவனங்கள் வேண்டப்படுகின்றன.

தகுதிவாய்ந்த கடன்படுநர்கள் இது தொடர்பாக மேலதிகத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள சம்பந்தப்பட்ட நிதியியல் நிறுவனத்தைத் தொடர்புகொள்ளுமாறு கோரப்படுகின்றனர். தகுதிவாய்ந்த கடன்படுநர்கள் படிப்படியாக தமது வருமானம் உழைக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளவும், கடன் தவணைகளை மீளச் செலுத்துவதற்கும் ஒத்துழைப்பதை நோக்காகக் கொண்டு இக்கடன் காலதாமதங்களைச் செயற்படுத்துமாறு நிதியியல் நிறுவனங்கள் வேண்டப்படுகின்றன.

நிதியியல் நிறுவனங்களுக்கு வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகள் இலங்கை மத்திய வங்கியின் இணையத்தளத்தில் (www.cbsl.lk) பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது.

 

Published Date: 

Monday, March 15, 2021