நாணயச் சபை, மாண்புமிகு நிதியமைச்சரின் இணக்கத்துடன் உதவி ஆளுநர் கே. டி. ரணசிங்க அவர்களை 2017 ஏப்பிறல் 30ஆம் நாளிலிருந்து டைமுறைக்குவரும் விதத்தில் இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநராக பதவி உயர்த்தியிருக்கிறது.
திரு. கே. டி. ரணசிங்க
திரு. கே. டி. ரணசிங்க இலங்கை மத்திய வங்கியின் பொருளாதாரம் மற்றும் விலை உறுதிப்பாடு மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் ற்கொள்ளப்படுகின்ற முகவர் தொழிற்பாடுகள் ஆகிய துறைகளில் ஏறத்தாள 31 ஆண்டு கால அனுபவத்தினைக் கொண்டிருக்கிறார். துணை ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் உதவி ஆளுநராக பதவியிலிருந்த இவர் புள்ளிவிபரவியல், பன்னாட்டுத் தொழிற்பாடுகள், உள்நாட்டுத் தொழிற்பாடுகள், ஊழியர் சேம நிதியம், மனித வளங்கள் மற்றும் வசதிகள் முகாமைத்துவம் ஆகிய திணைக்களங்களுக்குப் பொறுப்பாக இருந்தார். திரு. கே. டி. ரணசிங்க உதவி ஆளுநராக பதவி உயர்த்தப்படுவதற்கு முன்னர் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தின் பணிப்பாளராகக் கடமையாற்றினார். திரு. கே. டி. ரணசிங்க 2012 ஓகத்து முதல் 2015 ஏப்பிறல் வரையான காலப்பகுதியில் வங்காளதேசம், பூட்டான், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான மாற்று நிறைவேற்றுப் பணிப்பாளராக வொசிங்டன் டி.சி., ஐக்கிய அமெரிக்காவிலுள்ள பன்னாட்டு நாணய நிதியத்தில் பணியாற்றினார்.
திரு. ரணசிங்க அமெரிக்காவின் மிக்சிக்கன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைமானிப் பட்டத்தினையும் கொழும்புப் பல்கலைக்கழகத்திலிருந்து பொருளாதாரத்தில் இளங்கலைமானிப் பட்டத்தினையும் பெற்றுள்ளார். திரு. ரணசிங்க இலங்கை மத்திய வங்கியின் நீண்ட காலப் பணியில் பேரண்டப் பொருளாதார முகாமைத்துவம், பேரண்டப் பொருளாதார மாதிரிப்படுத்தல், நாணயக் கொள்கை, பொது நிதி, படுகடன் முகாமைத்துவம் மற்றும் உபாய முகாமைத்துவம் போன்ற துறைகளில் பெரும் எண்ணிக்கையான பன்னாட்டு பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களில் பங்கேற்றிருக்கின்றார். தற்போது திரு. ரணசிங்க இலங்கை வங்கியாளர் நிறுவகத்தின் துணைத் தலைவராக பணியாற்றுகின்றார். இவர் இலங்கை மத்திய வங்கியினைப் பிரதிநிதித்துவப்படுத்தி பல பல்வேறு சபைகளின் பணிப்பாளராகவும் குழுக்களின் உறுப்பினராகவும் கடமையாற்றுகின்றார். இவர் இலங்கை மின்சபை மற்றும் எச்டிஎவ்சி வங்கி போன்றவற்றின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் கடமையாற்றினார். மேலும், திரு. ரணசிங்க இலங்கை அரசு மற்றும் இலங்கை மத்திய வங்கியினைப் பிரதிநிதித்துவப்படுத்தி பல்வேறு உள்நாட்டு மற்றும் பன்னாட்டு மாநாடுகளில் பங்குபற்றியுள்ளார். நாணயக் கொள்கைக் குழு, வெளிநாட்டு ஒதுக்கு முகாமைத்துவக் குழு மற்றும் ஊழியர் சேம நிதியத்தின் முதலீட்டுக் குழு போன்றவற்றின் உறுப்பினராக இருப்பதால், திரு. ரணசிங்க இலங்கை மத்திய வங்கியின் மையக் குறிக்கோள்களை அடைந்து கொள்வதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை வழங்கியுள்ளார்.
அரச நிதி, வளர்ச்சி மற்றும் பொருளாதார மற்றும் சமூக உட்பட்டமைப்பு போன்றவை திரு. ரணசிங்க அவர்களின் ஈடுபாட்டிற்குரிய ஆராய்ச்சித் துறைகளாகும். இவர் மேற்குறிப்பிட்ட துறைகளில், தென்கிழக்கு ஆசிய மத்திய வங்கிகள் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் வெளியீடுகள் போன்றவற்றில் அநேக கட்டுரைகளை எழுதியுள்ளார். திரு. ரணசிங்க, பொருளாதார நிலைமைகள் எனும் பரந்த விடயப்பரப்பில் பல்வேறு கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளில் காட்சிப்படுத்தலுடன் கூடிய பல எண்ணிக்கையிலான விரிவுரைகளை ஆற்றியிருக்கின்றார்.
இலங்கை மத்திய வங்கியில் இணைவதற்கு முன்னர் இவர் இலங்கை நிர்வாகச் சேவையில் பணியாற்றியதுடன் இலங்கையின் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் விரைவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார்.