இலங்கை வங்கிகளுக்கிடையிலான வழங்கல் வீதத்தினைத் திரட்டுவதனையும் வெளியிடுவதனையும் நிறுத்துதல்

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, இலங்கை வங்கிகளுக்கிடையிலான வழங்கல் வீதத்தினைத் திரட்டுவதனையும் வெளியிடுவதனையும் 2020 யூலை 01ஆம் நாலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் நிறுத்துவதற்குத் தீர்மானித்திருக்கிறது. இத்தீர்மானமானது, உள்நாட்டு நிதியியல் சந்தையில் கடன் சாதனங்களுக்கான அடித்தள அளவுக்குறியீடாக இலங்கை வங்கிகளுக்கிடையிலான வழங்கல் வீதம் போதுமானளவிற்குப் பயன்படுத்தப்படாமை, இலண்டன் வங்கிகளுக்கிடையிலான வழங்கல் வீதம் உட்பட, வழங்கல் வீதங்களின் திரட்டலையும் வெளியிடுதல்களையும் உலகளாவிய போக்கு கட்டம் கட்டமாக கைவிட்டு வருகின்றமை, நீண்ட காலப்பகுதிக்கான வங்கிகளுக்கிடையிலான சந்தை அளவுகள் மிக மெலிந்து காணப்படும் சூழ்நிலையொன்றில் அநேக உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் வழங்கல் வீதங்களை அறிக்கையிடுகின்றமையினை நிறுத்திவிடுமாறு விடுத்த கோரிக்கைகள் மற்றும் உள்நாட்டு நிதியியல் சந்தையில் மாற்று அடித்தள அளவுக்குறியீட்டு வட்டி வீதங்கள் கிடைக்கத்தக்கதாகவுள்ளமை என்பனவற்றைப் பரிசீலனையில் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது.

உள்நாட்டு நிதியியல் சந்தையிலுள்ள எவரேனும் பங்கேற்பாளரின் வெளிநிற்கும் கடன்கள் அல்லது முற்பணங்கள் இலங்கை வங்கிகளுக்கிடையிலான வழங்கல் வீதத்துடன் இணைக்கப்பட்டிருக்குமாயின் அவர்களுக்கு ஏற்படும் வசதியினங்களை தவிர்க்கும் பொருட்டு இலங்கை மத்திய வங்கி 2020 யூன் 30ஆம் வரை உரிமம்பெற்ற வங்கிகளினால் சமர்ப்பிக்கப்பட்ட வழங்கல் வீதத்தின் அடிப்படையில் இலங்கை வங்கிகளுக்கிடையிலான வழங்கல் வீதத்தினைத் தொடர்ந்தும் வெளியிடும். சந்தைப் பங்கேற்பாளர்கள் தொடர்பான நிதியியல் பணிகளை வழங்குவோரின் ஆலோசனையுடன், பொருத்தமான இலாபமொன்றினைப் பெறும் விதத்தில் மத்திய வங்கி கொள்கை வீதங்கள், சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பணவீதங்கள், சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன் வழங்கல் வீதங்கள், திறைசேரி உண்டியல் விளைவு போன்ற மாற்றுவட்டி வீதமொன்றிற்கு மாறிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

சந்தை வட்டி வீதங்களினூடாகப் பொருளாதாரத்திற்கு வினைத்திறன்மிக்க நாணயக் கொள்கை மற்றும் நாணய நிலைமைகளை ஊடுகடத்துவதனை அதிகரிப்பதற்காக செலவினைப் பிரதிபலிக்கின்ற மாற்று அடித்தள அளவுக்குறியீட்டு வட்டி வீதமொன்றினை வடிவமைக்கும் செயற்கிரமத்தில் மத்திய வங்கி தற்போது ஈடுபட்டிருக்கிறது என்பது பற்றி சந்தைக்கு அறியத்தரப்படுகிறது.

 

Published Date: 

Monday, February 24, 2020