முனைவர் (திருமதி) துஷ்னி வீரகோன், 2019 யூலை 29ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும்வகையில் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முனைவர் (திருமதி) துஷ்னி வீரகோன், இலங்கை கொள்கை ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் அதன் பேரண்டப் பொருளாதாரக் கொள்கை ஆராய்ச்சித் தலைவருமாவார். அவர், தனது முனைவர் பட்டத்தினை நிறைவு செய்து 1994இல் இலங்கை கொள்கை ஆய்வுகளுக்கான நிறுவனத்தில் இணைந்ததுடன் பேரண்ட பொருளாதாரக் கொள்கை, பிராந்திய வர்த்தக ஒருங்கிணைப்பு மற்றும் பன்னாட்டுப் பொருளாதாரங்கள் தொடர்பில் பரந்தளவில் எழுதி வெளியிட்டுள்ளார்.
இவர் பொதுக் கொள்கை ஈடுபாட்டில் பரந்தளவு அனுபவத்தினைக் கொண்டுள்ளதுடன் அபிவிருத்தி உபாயமுறைகள்; மற்றும் பன்னாட்டு வர்த்தக அமைச்சின் வர்த்தக மற்றும் உற்பத்தித்திறன் ஆணைக்குழுவில் (2019-) தற்போது பணியாற்றுவதுடன் ஏனையவற்றுக்கு மத்தியில், சனாதிபதி செயலகத்தின் இலங்கைக்கான தேசிய நிலைபெறத்தக்க அபிவிருத்தி தொலைநோக்கு: 2030இனை வகுப்பதற்கான நிபுணர்கள் குழு (2017 - 18); அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் பன்னாட்டு வர்த்தக அமைச்சின் வர்த்தகக் கொள்கை வகுத்தல் மீதான குழு (2016); நிதி அமைச்சின் வர்த்தக மற்றும் தீர்வை குழு (2004-10); வர்த்தக மற்றும் வணிக அமைச்சின் தெற்காசிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கையினை கலந்துரையாடுவதற்கான நிபுணர்கள் குழு (2004-05); கொள்கை அபிவிருத்தி மற்றும் நடைமுறைப்படுத்தல் அமைச்சின் பேரண்ட மற்றும் வர்த்தகக் கொள்கை வழிநடாத்தல் குழு போன்றவற்றிலும் பணியாற்றியுள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, ஐக்கிய நாடுகள் - ஆசிய பசுபிக்கிற்கான பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழு, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் மற்றும் பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கான ஆலோசகராகவும் இவர் பணியாற்றியுள்ளதுடன் உலக வர்த்தக அமைப்பு மற்றும் ஹொங்கொங் பல்கலைக்கழகம் என்பவற்றினால் நடாத்தப்பட்ட ஆசிய - பசுபிக் பிராந்திய வர்த்தகக் கொள்கை கற்கைநெறி தொடர்பான வளவாளராகவும் (2003-06) பணியாற்றியுள்ளார். இவர், தற்போது ஸ்பிறிங்கர் வெளியீடுகளுக்கான தெற்காசிய பொருளாதார மற்றும் கொள்கை ஆய்வுகளுக்காக தொடர் வெளியீட்டு ஆசிரியராகவும் தெற்காசிய பொருளாதார இதழின் பிரதம ஆசிரியராகவும் தெற்காசிய அபிவிருத்தி இதழின் ஆசிரியர் சபையிலும் 'இலங்கை: பொருளாதார நிலை" என்ற இலங்கை கொள்கை ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் வருடாந்த முக்கிய அறிக்கையின் ஆசிரியராகவும் பணியாற்றுகின்றார்.
இவர் நேஷன் ட்ரஸ்ட் வங்கி (2007-16), காகிள்ஸ் வங்கி (2018-19) என்பவற்றின் சுயாதீன நிறைவேற்றுத் தரமற்ற பணிப்பாளர், வறுமைப் பகுப்பாய்விற்கான நிலையம் (2008-2014), காமினி கொரேயா மன்றம் (2018-), கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சமூகக் கொள்கைப் பகுப்பாய்வு மற்றும் ஆராய்ச்சி நிலையம் (2018-) ஆகியவற்றின் பணிப்பாளர் உள்ளடங்கலாக கூட்டுநிறுவனங்கள் அத்துடன் கல்விசார் நிறுவனங்களின் சபைகளின் பணிப்பாளராகவும் அனுபவம் பெற்றுள்ளார்.
முனைவர் (திருமதி) துஷ்னி வீரகோன், ஐக்கிய இராச்சியத்தின் பெல்பாஸ்ட் குயின்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து பொருளாதாரத்தில் விஞ்ஞானமானி முதல் வகுப்பு கௌரவப் பட்டத்தினையும், ஐக்கிய இராச்சியத்தின் மென்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுமானிப் பட்டத்தினையும் முனைவர் பட்டத்தினையும் பெற்றுள்ளார். இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்திலிருந்து கலைப்பீட புலமைப்பரிசிலினையும் பெல்பாஸ்ட் குயின்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து மெக்கான் பதக்கத்தினையும் புலமைப்பரிசிலினையும், மென்செஸ்ஸர் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டப்பின்படிப்பு புலமைப்பரிசிலினையும் ஐக்கிய இராச்சிய அரசாங்கத்திடமிருந்து வெளிநாட்டு ஆராய்ச்சிப் புலமைப்பரிசிலினையும் அத்துடன் மென்சஸ்டர் பல்கலைக்கழகத்திலிருந்து ட்ரம்மோன்ட் ப்ராஷர் ஆராய்ச்சி மானியத்தினையும் பெற்றவராவார்.