இலங்கை மத்திய வங்கியானது 54வது தென்கிழக்காசிய மத்திய வங்கி ஆளுநர்கள் மாநாடு/ உயர்மட்ட ஆய்வரங்கு மற்றும் தென்கிழக்காசிய மத்திய வங்கி ஆளுநர் சபையின் 38வது கூட்ட நிகழ்வினை 2018 நவெம்பர் 29 தொடக்கம் திசெம்பர் 02 வரை கொழும்பில் நடைபெறுவதற்கு அனுசரணை வழங்கியது. இந்நிகழ்வில் தென்கிழக்காசிய உறுப்பு மத்திய வங்கிகளின் ஆளுநர்கள் மற்றும் பேராளர்கள் அத்துடன் நாணய மேலாண்மைச் சபையினரும் பங்கேற்றனர். பன்னாட்டு நாணய நிதியத்தின் துணை முகாமைத்துவ பணிப்பாளர் மிட்சுஹிரோ புருசாவா முதன்மைப் பேச்சாளராக கலந்துகொண்டார்.
தென்கிழக்காசிய மத்திய வங்கிகள் நிலையமானது ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் நிதியியல், நாணய மற்றும் வங்கித்தொழில் கருமங்களில் புரிந்துணர்வினை பாரியளவில் ஊக்குவிப்பதற்கு முன்னணியான பங்கொன்றை ஆற்றுகின்றது. 1982இல் நிறுவப்பட்ட தென்கிழக்காசிய மத்திய வங்கிகள் நிலையமானது கற்றல் நிகழ்ச்சித் திட்டங்கள், ஆராய்ச்சிப் பணி மற்றும் வலையமைப்பாக்கம் என்பன ஊடாக ஆசிய பசுபிக்கின் மத்திய வங்கிகளுக்கும் நாணய மேலாண்மைச் சபைகளுக்கும் பணியாற்றுகின்றது.