நாணயக் கொள்கை மீளாய்வு - 2016 மாச்சு

தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தற்காலிக தரவுகளின்படி, உண்மை நியதிகளில் 2015இல் இலங்கைப் பொருளாதாரம் முன்னைய ஆண்டின் 4.9 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 4.8 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தது. 2015இல் பொருளாதாரத்தின் விரிவிற்கு, 2015ஆம் காலப்பகுதியில் 5.3 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்த பணிகளுடன் தொடர்பான நடவடிக்கைகளே முக்கியமாக உதவியளித்தன. வேளாண்மை மற்றும் கைத்தொழிலுடன் தொடர்பான நடவடிக்கைகளும் முறையே 5.5 சதவீதத்தினாலும் 3.0 சதவீதத்தினாலும் விரிவடைந்து இவ்வாண்டின் வளர்ச்சிக்கு நேர்க்கணியமாகப் பங்களித்துள்ளன. 2015இன் வளர்ச்சிக்கு நுகர்வுக் கேள்வியில் ஏற்பட்ட அதிகரிப்பு பெருமளவிற்குத் தூண்டுதலாக அமைந்த வேளையில் முதலீட்டு நடவடிக்கைகள் வீழ்ச்சியைக் காட்டின.  

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2016 சனவரியின் 0.9 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2016 பெப்புருவரியில் 2.7 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு, தளத்தின் தாக்கம் இல்லாமல் போனமையே முக்கிய காரணமாகும். ஆண்டுச் சராசரி முதன்மைப் பணவீக்கம் முன்னைய மாதத்தின் 0.7 சதவீதத்திலிருந்து 2016 பெப்புருவரியில் 0.9 சதவீதம் வரையில் உயர்வடைந்தது. இவ்வசைவுகளுடன் இசைந்துசெல்லும் விதத்தில் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட ஆண்டிற்கு ஆண்டு முதன்மைப் பணவீக்கமும் (2013 = 100) முன்னைய ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட எதிர்மறையான 0.7 சதவீதத்திலிருந்து 2016 பெப்புருவரியில் 1.7 சதவீதத்திற்கு அதிகரித்ததுடன் இது ஆண்டுச் சராசரி அடிப்படையில் 2.6 சதவீதமாகக் காணப்பட்டது. அதேவேளை, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட மையப் பணவீக்கத்தில் காணப்பட்ட அதிகரித்துச் செல்லும் போக்கு 2016 பெப்புருவரியிலும ; தொடர்ந்ததுடன் மையப் பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் முன்னைய மாதத்தின் 4.6 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 5.7 சதவீதத்தினைப் பதிவுசெய்தது. முன்னோக்கிப் பார்க்கையில், மத்திய வங்கியினால் ஏற்கனவே பின்பற்றப்பட்ட கொள்கை வழிமுறைகளின் காரணமாக பணவீக்கம் ஆண்டின் எஞ்சிய காலப்பகுதியில் தாழ் மட்டத்திலிருந்து நடு ஒற்றை இலக்க மட்டம் வரையில் காணப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.   

வெளிநாட்டுப் பக்கத்தில் இறக்குமதிகள் மீதான செலவினத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி ஏற்றுமதிகளிலிருந்தான வருமானத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியிலும் பார்க்க கூடுதலாக இருந்தமையினால் 2016 சனவரியில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை 9.1 சதவீதத்தினால் குறுக்கமடைந்தது. சுற்றுலாவிலிருந்தான வருவாய்கள் 2016 பெப்புருவரியில் 19.4 சதவீதத்தினால் அதிகரித்திருப்பதாக மதிப்பிடப்பட்ட வேளையில் 2015ஆம் ஆண்டுப் பகுதியில் 0.5 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்த தொழிலாளர் பணவனுப்பல்கள் 2016 சனவரி, பெப்புருவரி காலப்பகுதியில் 8.0 சதவீத அதிகரிப்பினைப் பதிவுசெய்திருக்கிறது. 2015 இறுதியில் ஐ.அ.டொலர் 7.3 பில்லியனாக விளங்கிய மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2016 பெப்புருவரி இறுதியில் ஐ.அ.டொலர் 6.6 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்திருப்பதாக மதிப்பிடப்பட்ட வேளையில் படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகளும் அரச பிணையங்களிலிருந்து முதலீட்டாளர்களினால் நகர்த்தப்பட்ட அவர்களின் நிதியிலிருந்து தோன்றிய கேள்வியை ஈடுசெய்வதற்காக உள்நாட்டின் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தைக்கு வெளிநாட்டுச் செலாவணி நிரம்பல் செய்யப்பட்டமையே முக்கிய காரணமாகும். அதேவேளை, இலங்கை ரூபா 2016இன் இதுவரையான காலப்பகுதியில் ஐ.அ.டொலருக்கெதிராக பெருமளவு மாற்றங்களின்றிக் காணப்பட்டது.   

நாணயத் துறையில் இறுக்கமான நாணய நிலைமைகள் மற்றும் மத்திய வங்கியின் கொள்கை நடவடிக்கைகளின் பரிமாற்றம் என்பனவற்றைப் பிரதிபலிக்கின்ற விதத்தில் சந்தை வட்டி வீதங்கள் உயர்வடைந்தன. நாணயக் கொள்கை நடவடிக்கைகளுக்கு காலங்கடந்த விதத்தில் பதிலிறுப்புக்களைக் காட்டிய விரிந்த பணத்தின்  (M2b) ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சி 2015 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 17.8 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2016 சனவரியில் 19.1 சதவீதத்தில் உயர்வாகக் காணப்பட்டது. தனியார் துறைக் கொடுகடன் வளர்ச்சி 2015 நவெம்பரின் 27.0 சதவீதம் மற்றும் 2015 திசெம்பரின் 25.1 சதவீதம் என்பனவற்றுடன் ஒப்பிடுகையில் 2016 சனவரியில் தனியார் துறைக் கொடுகடன் வளர்ச்சி 25.7 சதவீதமாகக் காணப்பட்டது. உண்மையான நியதிகளில் தனியார் துறைக் கொடுகடன் 2016 சனவரி காலப்பகுதியில் ரூ.43.6 பில்லியனுக்கு அதிகரித்தது. முன்னோக்கிப் பார்க்கையில் நாணயக் கூட்டுக்களின் வளர்ச்சி சந்தை வட்டி வீதங்களில் காணப்பட்ட மேல் நோக்கிய தாக்கங்களைப் பிரதிபலிக்கின்ற விதத்தில் ஆண்டின் எஞ்சிய காலப்பகுதியில் படிப்படியாகக் குறைவடையுமென எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை எதிர்பார்க்கப்படும் இறைத் திரட்சிப் பாதை நாணய விரிவாக்கத்தின் மிதமான தன்மைக்கு உதவுமென எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கூறிப்பிடப்பட்டவற்றினைப் பரிசீலனையில் கொள்கையில் நாணயச் சபை 2016 மாச்சு 29ஆம் நாள் நடைபெற்ற அதன் கூட்டத்தில் தற்போதைய நாணயக் கொள்கை நிலை பொருத்தமானது என்ற கருத்தைக் கொண்டிருந்ததுடன் துணைநில் வைப்பு வசதி வீதத்தையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தையும் மாற்றமின்றி முறையே 6.50 சதவீதத்திலும் 8.00 சதவீதத்திலும் பேணுவது பொருத்தமானதாக இருக்குமெனக் கருதியது.   

நாணயக் கொள்கைத் தீர்மானம்: கொள்கை வீதங்கள் மாற்றமடையவில்லை
துணைநில் வைப்பு வசதி வீதம் 6.50%
துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் 8.00%
நியதி ஒதுக்கு விகிதம் 7.50%

 

 

 

 

 

 

Published Date: 

Tuesday, March 29, 2016