2018 ஒத்தோபரில் பணவீக்கம் மேலும் வீழ்ச்சியடைந்தது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100)   ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறு முதன்மைப் பணவீக்கம் 2016 சனவரி முதல் ஆகக் குறைவாக 2018 ஒத்தோபரில் 0.1 சதவீதத்தினைப் பதிவுசெய்து தொடர்ச்சியாக மூன்றாவது மாதத்திற்காகவும் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்தது. 2018 ஒத்தோபரில் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கத்தில் அவதானிக்கப்பட்ட மெதுவடைதலானது பிரதானமாக உயர்வான உணவு விலைகளின் காரணமாக முன்னைய ஆண்டின் தொடர்பான மாதத்தில் நிலவிய உயர்வான தளத்தினால் தூண்டப்பட்டிருந்தது. ஆண்டுக்கு ஆண்டு உணவுப் பணவீக்கமானது தொடர்ச்சியாக மூன்றாவது மாதத்திற்காகவும் வீழ்ச்சியடைந்து 2018 ஒத்தோபரில் -6.6 சதவீதத்தினைப் பதிவுசெய்தது. எவ்வாறாயினும், ஆண்டுக்கு ஆண்டு உணவல்லாப் பணவீக்கமானது மாதத்தின் போது தொடர்ந்து அதிகரித்து 5.8 சதவீதத்தினை அடைந்தது. 

ஆண்டுச் சராசரி அடிப்படையொன்றில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றம் 2018 செத்தெம்பரில் 4.0 சதவீதத்திலிருந்து 2018 ஒத்தோபரில் 3.3 சதவீதமாகக் குறைவடைந்தது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றமானது உணவல்லா வகையில் குறிப்பாக, போக்குவரத்து (பெற்றோல், டீசல், பேருந்துக் கட்டணம் மற்றும் புகையிரதக் கட்டணம்) அத்துடன் நானாவிதப் பொருட்கள் மற்றும் பணிகள் துணை வகைகளின் விலைகளின் அதிகரிப்பின் காரணமாக 2018 ஒத்தோபரில் 0.4 சதவீதத்தினால் அதிகரித்தது. அதேவேளை, மாதப்பகுதியின் போது உணவு வகைப் பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைந்தன. இதில் உடன்மீன், முட்டை மற்றும் தேங்காய் போன்றவற்றில் முக்கிய விலை வீழ்ச்சி அவதானிக்கப்பட்டது.

பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கமானது ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 2018 செத்தெம்பரில் 3.1 சதவீதத்திலிருந்து 2018 ஒத்தோபரில் 3.4 சதவீதமாக அதிகரித்தது. அதேவேளை, ஆண்டுச் சராசரி மையப் பணவீக்கம், 2018 ஒத்தோபரில் 2.4 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது.

முழுவடிவம்

Published Date: 

Wednesday, November 21, 2018