இலங்கை மத்திய வங்கி, 2018 ஒத்தோபர் 08 மற்றும் 09ஆம் திகதிய செய்தித்தாள்கள் பலவற்றில் வெளிவந்த ''ரூபாவின் பெறுமானத் தேய்வினை கையாள இயலாமல் இருப்பதன் மூலம் அரசாங்கமும் மத்திய வங்கியும் மிக முக்கியமான சட்ட ரீதியான கடமைகளை கைவிட்டிருக்கின்றன". என்ற தலைப்பில் வெளியான கட்டுரை தொடர்பில் பின்வரும் அறிக்கையினை வெளியிட விரும்புகின்றது.
இலங்கையின் உற்பத்தித் திறன் மிக்க மூலவளங்களின் அபிவிருத்தியை ஊக்குவித்து மேம்படுத்தும் நோக்குடன், இலங்கை மத்திய வங்கி நாணயவிதிச் சட்டத்தினால் அதிகாரமளிக்கப்பட்ட நடவடிக்கையின் மூலம் சாத்தியமான விதத்தில் அ) பொருளாதார மற்றும் விலை உறுதிப்பாடு மற்றும் ஆ) நிதியியல் முறைமை உறுதிப்பாடு என்பனவற்றினை சாத்தியமானளவிற்குப் பாதுகாத்துக்கொள்ளும் பொறுப்பு சட்ட ரீதியாக மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அதிர்வுகளுக்கு நிதியியல் முறைமை தாக்குப்பிடிப்பதன் மூலம் நிதியியல் முறைமையின் உறுதிப்பாடு அடையாளங்காணப்படுகின்ற வேளையில், விலை உறுதிப்பாடானது, பொதுவாக, தாழ்ந்ததும் உறுதியான பணவீக்கமொன்றாக வரைவிலக்கணம் செய்யப்படுகின்றது. இது உயர்ந்ததும் நீடித்துநிலைத்திருக்கக்கூடியதுமான பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் பொருளாதார நிலைமைகளுக்கு வழிவகுக்கின்றது.
பணவீக்கம் தொடர்பான வரலாற்று ரீதியான தரவுகள், கடந்த காலத்தின் குறிப்பிட்ட சில காலங்களைப் போலன்றி பெரும்பாலும் 10 ஆண்டு காலப்பகுதியில் பணவீக்கம் ஒற்றை இலக்க மட்டத்தில் தொடர்ச்சியாக பேணப்பட்டிருப்பதானது கடந்தகாலத்தில் விலை உறுதிப்பாட்டினை பேணுகின்ற மத்திய வங்கியின் சட்ட ரீதியான பொறுப்புக்களை அது மிக வெற்றிகரமாக மேற்கொண்டு வந்தமையினை எடுத்துக்காட்டுவதாகவிருக்கின்றது. இது பொருளாதாரத்தில் காணப்படும் நிச்சயமற்ற தன்மைகளைக் குறைத்து எதிர்காலத்தில் உயர்ந்த பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கக்கூடியதாகவிருக்குமென எதிர்பார்க்கப்படுகின்ற வேளையில், இலங்கையின் நாணயக் கொள்கைக் கட்டமைப்பாக நெகிழ்ச்சித்தன்மைவாய்ந்த பணவீக்க இலக்கிடலை அறிமுகப்படுத்தும் தற்போதைய முயற்சிகள் நீடித்த நிலையான அடிப்படையொன்றின் மீது பணவீக்கத்தினை நடுத்தர ஒற்றை இலக்க மட்டங்களில் பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கியை இயலுமைப்படுத்தும்.