வர்த்தக நோக்கங்களுக்கல்லாத பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்ற மோட்டார் வாகன இறக்குமதிக்காக வர்த்தக வங்கிகளில் திறக்கப்படுகின்ற நாணயக் கடிதங்களுக்கெதிராக உடனடியாக நடைமுறைக்குவரும் வகையில் 100 சதவீத எல்லை வைப்புத் தேவைப்பாடொன்றினை இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை விதித்துள்ளது. அதற்கமைய, இவ்வாகன வகுப்புகளின் இறக்குமதிக்கான நாணயக் கடிதங்கள் குறைந்தபட்சம் 100 சதவீத காசு எல்லையுடன் மாத்திரம் மேற்கொள்ளக்கூடியதாகும்.
எல்லை வைப்புத் தேவைப்பாட்டினை விதிப்பதற்கான தீர்மானமானது தீர்க்கப்படாவிடின் பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டினை அச்சுறுத்தக்கூடிய அண்மைக்கால அபிவிருத்திகளை அடிப்படையாகக் கொண்டதாகும். இவை பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றது:
- அண்மைக்கால உலக நிதியியல் சந்தை தளம்பல் மற்றும் வளர்ந்துவரும் சந்தைப் பொருளாதாரங்களின் நாணயங்கள் மீதான பரந்த அழுத்தம்.
- எதிர்கால செலாவணிவீத அசைவுகள், வட்டிவீத அசைவுகள் மற்றும் வரவுசெலவுத் திட்ட வழிமுறைகள் என்பன மீதான ஆதாரமற்ற ஊக வணிகத்தினால் பகுதியளவில் தூண்டப்படும் தொடர்ச்சியான மிதமிஞ்சிய மோட்டார் வாகன இறக்குமதிகள்.
மோட்டார் வாகன இறக்குமதிகள் மீது ஏற்புடைய வரிகள் தொடர்பில் அரசாங்கத்தினால் ஏற்கனவே எடுக்கப்பட்ட வழிமுறைகளுடன் சேர்த்து எல்லை வைப்புத் தேவைப்பாட்டினை விதித்தல், அவசியமற்ற வாகன இறக்குமதிகளை கட்டுப்படுத்துவதற்கும் சென்மதி நிலுவை நடைமுறைக் கணக்கு மற்றும் செலாவணி வீதம் என்பன மீது அளவிற்குமீறிய அழுத்தத்தினை குறைப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.