இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அரச நிதியினைப் தவறாகப் பயன்படுத்தியிருப்பதாக பாராளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினரொருவரினால் குற்றம் சாட்டப்பட்டுள்ளமை ஊடகங்களில் அறிக்கையிடப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரோ அல்லது வேறு எந்தவொரு அலுவலருமோ தமது சொந்தச் செலவுகளுக்காக அரச நிதியினை பயன்படுத்தவில்லை என்பதனையும் எந்தவிதத்திலேனும் அரச நிதியினைத் தவறாகப் பயன்படுத்தவில்லையெனவும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுக் கொள்ளவிரும்புகின்றது. அனைத்து அலுவல்சார் கடமைகள் தொடர்பிலும் ஆளுநரும் இலங்கை மத்திய வங்கியின் அலுவலர்களும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கலந்துகொள்ளும் நிகழ்வுடன் தொடர்பிலுமான செலவினங்கள் மற்றைய அமைச்சு அல்லது திணைக்களங்களின் பொதுவான நடைமுறைகளை ஒத்தவிதத்திலேயே மத்திய வங்கியினாலும் வழங்கப்படுகின்றன.
கடந்த அண்மைக் காலத்தில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும் அலுவலர்களும் உலக வங்கி, ப.நா. நிதியம், பிராந்திய ஒத்துழைப்பிற்கான தென்னாசிய அமைப்பு, தென்கிழக்காசிய மத்திய வங்கிகள் மற்றும் ஆசிய தீர்ப்பனவு ஒன்றியம் என்பனவற்றினால் ஒழுங்குசெய்யப்பட்ட பல்வேறு வருடாந்த மற்றும் இருபுடைக் கூட்டங்களில் கலந்து கொண்டனர். இவற்றிற்குப் புறம்பாக, ஆளுநர் மாண்புமிகு பிரதம மந்திரியுடனும் நிதி அமைச்சருடனும் வெளிநாடுகளில் பல்வேறு கூட்டங்களிலும் கலந்து கொண்டிருக்கின்றார். மேலும், பல்வேறு சர்வதேச நிதியியல் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்யும் போது பல்வேறு சந்தர்ப்பங்களிலும் உபசரிப்புச் செலவினங்களும் ஏற்பட்டிருக்கின்றன.
இவ்வனைத்துச் செலவினங்களும் இலங்கைப் பாராளுமன்றத்தினாலும் இலங்கை மத்திய வங்கியினாலும் ஒப்புதலளிக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளுக்கிணங்கவும் அரசின் நிதியியல் ஒழுங்குவிதிகளின் கோட்பாடுகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றியுமே மேற்கொள்ளப்பட்டன. இச்செலவுகள் தொடர்பான கணக்குகள் இலங்கை மத்திய வங்கியின் உள்ளகக் கணக்காய்வுத் திணைக்களத்தினாலும் நாட்டின் கணக்காய்வாளர் நாயகத்தினாலும் கணக்காய்வு செய்யப்படுகின்றன. குறிப்பிடப்பட்ட விதிகள் அல்லது ஒழுங்குவிதிகளுக்கு முரணான விதத்தில் ஆளுநரினதும் இலங்கை மத்திய வங்கியின் அலுவலர்களினதும் அலுவல்சார் விஜயங்கள் தொடர்பான செலவினங்கள் அமைந்திருந்தனவென்றோ அல்லது அத்தகைய செலவினம் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றனவென்றோ எந்தவொரு கணக்காய்வு அறிக்கையும் குறிப்பிடவில்லை.
2015இல் இலங்கை மத்திய வங்கியின் பயணச் செலவுகள் 2014இன் ரூ.133.8 மில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.96.6 மில்லியனுக்குக் குறைவடைந்துள்ளது. இது ரூ.37.2 மில்லியன் கொண்ட சேமிப்பினை ஏற்படுத்தியுள்ளது.