மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளைத் தொகுக்கின்ற ஏக பொறுப்பு 2007 இலிருந்து தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. எனினும், நாட்டின் மொ.உ.உற்பத்தி மதிப்பீடுகளை மாற்றியமைப்பதில் இலங்கை மத்திய வங்கி தொடர்புபட்டிருக்கிறது என்ற பொருளில் ஆர்வமுடைய தரப்பினரால் விடுக்கப்பட்ட ஊடக அறிக்கை பற்றி மத்திய வங்கி தனது அவதானிப்பினைச் செலுத்தியிருக்கிறது. இது பொதுமக்களைப் பிழையாக வழிநடத்துமொன்றாகும்.
2006 வரை மொ.உ.உற்பத்தி மதிப்பீடுகள் இலங்கை மத்திய வங்கி மற்றும் தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம் இரண்டினாலும் தொகுக்கப்பட்டு பரப்பப்பட்டன. எனினும், தரவுத் தொகுப்பின் வகிபாகத்தினைச் சுயாதீனமான அதிகாரசபையொன்றிடம் ஒப்படைப்பதன் முக்கியத்துவத்தினைப் பரிசீலனையில் கொண்டு, இலங்கை மத்திய வங்கி மொ.உ.உற்பத்தி மதிப்பீடுகளைத் தொகுப்பதனை இடைநிறுத்திக் கொண்டதுடன் மொ.உ.உற்பத்தி மதிப்பீடுகளை தொகுக்கின்ற பொறுப்பாண்மை தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்திடம் ஏக முறையில் கையளிக்கப்பட்டது. மொ.உ.உற்பத்தி மதிப்பீடுகளைத் தொகுப்பதற்கு மேலதிகமாக, சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட கொள்கை வகுப்பிற்கு உதவுவதற்காக பன்னாட்டு ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையியல்களைத் தொடர்ந்து தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் நுகர்வோர் விலைகள், தொழிற்படை, வறுமை போன்றன மீதான புள்ளிவிபரங்களைத் தொகுக்கின்ற பொறுப்பினையும் தன்னகத்தே வைத்திருக்கிறது. இலங்கை மத்திய வங்கி பொருளாதார பகுப்பாய்வு மற்றும் நாணயக் கொள்கை உருவாக்க நோக்கங்களுக்காக அத்தகைய மதிப்பீடுகளின் முக்கிய பயன்படுத்துநராகத் தொடர்ந்தும் இருந்து வருகிறது.
எனவே, இலங்கை மத்திய வங்கி மொ.உ.உற்பத்தி மதிப்பீடுகளை மாற்றியமைப்பதில் ஈடுபட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டிற்கு எந்தவித ஆதாரமுமில்லை.