2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ் உரிமம்பெற்ற நிதியியல் கம்பனியான சென்றல் இன்வெஸ்ட்மென்ட் அன்ட் பினான்ஸ் பிஎல்சியானது தவறான முகாமைத்துவம் மற்றும் கம்பனியில் இடம்பெற்ற பல்வேறு மோசடியான நடவடிக்கைகள் காரணமாக கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக கடுமையான நிதியியல் பிரச்சனைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றது. கம்பனியின் வைப்பாளர்கள் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக தமது பணத்தினை மீளப்பெறுவதற்கு முடியாமலிருக்கின்றனர். பல்வேறு உபாயங்களினூடாக கம்பனியினை மீளெழுச்சி பெறச்செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளன. தற்போதைய நிலைமைகளைத் தொடர்வது கம்பனியின் வைப்பாளர்களுக்கும் ஏனைய ஆர்வலர்களுக்கும் மேலும் தீங்கிழைப்பதாக அமையும்.
எனவே, 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித் தொழில் சட்டத்தின் கீழ் சென்றல் இன்வெஸ்ட்மென்ட் அன்ட் பினான்ஸ் பிஎல்சி இற்கு வழங்கியிருந்த உரிமத்தினை 2018.03.05 இலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் இரத்துச் செய்வதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை தீர்மானித்துள்ளது. இதன்படி, சென்றல் பினான்ஸ் இன்வெஸ்ட்மென்ட் அன்ட் பினான்ஸ் பிஎல்சியானது மேற்குறிப்பிடப்பட்ட திகதியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் நிதித்தொழில் சட்டத்தின் கீழ் நிதித்தொழிலில் ஈடுபடுத்துவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது.
மேலும், 2000ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க நிதியியல் குத்தகைக்குவிடல் சட்டத்தின் கீழ், பதிவுசெய்யப்பட்ட நிதியியல் குத்தகை நிறுவனமொன்றாக சென்றல் இன்வெஸ்ட்மென்ட் அன்ட் பினான்ஸ் பிஎல்சி இற்கு வழங்கப்பட்டிருந்த பதிவுச் சான்றிதழினையும் 2018.03.05 இலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் இரத்துச்செய்ய இலங்கை மத்திய வங்கியின் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களத்தின் பணிப்பாளர் தீர்மானித்துள்ளர். இதன்படி, சென்றல் இன்வெஸ்ட்மென்ட் அன்ட் பினான்ஸ் பிஎல்சி, குறித்த திகதியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் நிதியியல் குத்தகைக்குவிடல் சட்டத்தின் கீழ் புதிய நிதியியல் குத்தகை வசதிகளை வழங்குவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது.
இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவு திட்டமானது பொருத்தமான சட்டங்கள் மற்றும் ஒழுங்குபடுத்தல்களின் கீழ் காப்புறுதி செய்யப்பட்ட வைப்பாளர்களுக்கு இழப்பீட்டினை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். மேலும், கோரல்களின் முன்னுரிமைக்கு உட்பட்டு, ஒடுக்கிவிடும் செயன்முறையின் போது வைப்பாளர்கள் தங்களுக்கு வரவேண்டிய தொகையினை மீளப்பெறறுக் கொள்ளக்கூடியவர்களாக இருப்பர்.
கம்பனியின் அனைத்து கடன்படுநர்களும் கம்பனியினால் அறிவிக்கப்பட்ட வங்கி கணக்கினூடாக கம்பனிக்கு அவர்கள் செலுத்த வேண்டிய தொகையினை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கம்பனியின் தவறான முகாமைத்துவம் மற்றும் மோசடியான நடவடிக்கைகளுக்கு பொறுப்பான தரப்பினருக்கு எதிராக சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதனை இலங்கை மத்திய வங்கி வலியுறுத்த விரும்புகின்றது.