உள்நாட்டு மற்றும் பன்னாட்டுப் பேரண்டப் பொருளாதாரச் சூழலின் அண்மைக் கால அபிவிருத்திகளைக் கருத்திற்கொண்டு நாணயச் சபை 2018 பெப்புருவரி 14இல் நடத்தப்பட்ட அதன் கூட்டத்தில் தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாடு பொருத்தமானதெனவும் இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதெனவும் தீர்மானித்தது.
நடுத்தர காலத்தில் பணவீக்கத்தினை நடு ஒற்றை இலக்க மட்டங்களில் பேணுதல் மற்றும் அதன் மூலம் நிலைத்துநிற்கும் வளர்ச்சிப் பாதையொன்றிற்கு வசதிப்படுத்துதல் போன்ற குறிக்கோளுடன் இசைந்துசெல்லும் வகையில் நாணயச் சபையின் தீர்மானம் அமைந்துள்ளது. நாணயக் கொள்கை நிலைப்பாட்டிற்கு பக்கபலமாக அமைந்த நியாயங்கள் கீழே தரப்படுகின்றன.
மத்திய வங்கியாலும் அரசாங்கத்தினாலும் பின்பற்றப்பட்டு வந்த கொள்கைகள் பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு உதவியுள்ளன. விரிந்த பண நிரம்பலின் வளர்ச்சி மற்றும் வர்த்தக வங்கிகளால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடனின் வளர்ச்சி ஆகிய இரண்டும் 2017 இறுதியில் விரும்பத்தக்க மட்டங்களிற்கு மிதமடைந்தன. வெளிநாட்டுப் பக்கத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவாக்கப்பட்ட முன்னுரிமை வசதிப்படுத்தல்கள் (ஜி.எஸ்.பி+) மீளக்கிடைத்தமை பன்னாட்டுச் சந்தையின் முக்கிய பண்டங்களிற்கான சாதகமான விலைகள் மற்றும் மத்திய வங்கியினால் பேணப்பட்ட நெகிழ்ச்சி வாய்ந்த நாணய மாற்றுவீதக் கொள்கை என்பவற்றினால் உந்தப்பட்ட ஏற்றுமதி வருவாய்களின் தொடர்ச்சியான அதிகரிப்பின் பெருமளவான ஆதரவின் மூலம் ஏற்றுமதி வருவாய்கள் 2017இல் முன்னொரு போதும் இல்லாத விதத்தில் ஏறத்தாழ ஐ.அ.டொலர் 11.4 பில்லியனை அடைந்துள்ளது. எனினும், வரட்சியுடன் தொடர்பான இறக்குமதிகள் மற்றும் அதிகரித்த தங்க இறக்குமதிகள் என்பன வர்த்தகப் பற்றாக்குறையில் விரிவாக்கம் ஒன்றினை விளைவித்திருந்தன. தொழிலாளர் பணவனுப்பல்களில் மிதமானதன்மையொன்று காணப்பட்ட அதேவேளையில் சுற்றுலாத் துறை உள்ளடங்கலாக பணிகள் ஏற்றுமதியின் சாதகமான உத்வேகம் தொடர்ந்தும் காணப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் குத்தகையிலிருந்தான முதலீட்டுப் மீள்பெறுகைகளின் பகுதியளவு காரணத்தால் 2017இல் நேரடி முதலீட்டு உட்பாய்ச்சல்கள் குறிப்பிடத்தக்களவில் அதிகரித்துள்ளன என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய அபிவிருத்திகளைப் பிரதிபலிக்கும் வகையில், மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2018 சனவரி இறுதியில் ஐ.அ.டொலர் 7.7 பில்லியனை அடைந்துள்ள அதேவேளையில் 2018இன் இதுவரையான காலப்பகுதியில் ஐ.அ.டொலருக்கெதிராக ரூபாவின் பெறுமதி 0.9 சதவீதத்தால் தேய்வடைந்துள்ளது. அதேவேளையில், உணவுப் பணவீக்கத்தின் குறிப்பிடத்தக்களவான மெதுவடைவினால் கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணினால் (கொ.நு.வி.சு.2013=100) அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கத்தின் ஆண்டிற்கு ஆண்டு மாற்றம் 2018 சனவரியில் பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளது. தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணும் (தே.நு.வி.சு. 2013 = 100) 2018 சனவரியில் கணிசமானளவு வீழ்ச்சியொன்றைப் பதிவுசெய்யும் எனவும் 2018இன் எஞ்சிய காலப்பகுதிகளில் முதன்மைப் பணவீக்கம் மற்றும் மையப் பணவீக்கம் ஆகிய இரண்டும் நடு ஒற்றை இலக்க மட்டங்களில் விரும்பத்தக்களவில் உறுதியடையுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
பொருளாதாரமானது அதன் உள்ளார்ந்த மட்டத்திலும் பார்க்கக் குறைவாகவே தற்போது தொழிற்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதையும் நாணயச் சபை அவதானித்துள்ளது. இருப்பினும் கூட கிடைக்கத்தக்கதாகவுள்ள குறிகாட்டிகளுக்கமைவாக, பொருளாதாரமானது கடந்த இரண்டு ஆண்டுகளில் நிலவிய பாதகமான வானிலை நிலைமைகளின் விளைவுகளிலிருந்து மீட்சியடையும் என்பதுடன் வெளிநாட்டுக் கேள்வி மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடு என்பவற்றின் ஊக்குவிப்பினால் நன்மையடையுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. அமைப்பியல் சீர்திருத்தங்களினால் தூண்டப்பட்டு அதிகரித்த தனியார் முதலீடுகளின் ஆதரவளிக்கப்பட்ட புதிய வர்த்தக உடன்படிக்கைகளின் நிறைவேற்றம் போன்றவற்றை உள்ளடக்கியுள்ள வர்த்தகப் பக்கத்தின் முன்னேற்றங்கள் பொருளாதாரம் நடுத்தர காலத்தில் அதன் உள்ளார்ந்த மட்டத்தை அடைவதற்கு தேவையான உந்துசக்தியை வழங்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இறைப் பக்கத்தில், கிடைக்கத்தக்கதாகவுள்ள குறிகாட்டிகள் அரசாங்கமானது பல தசாப்தங்களுக்குப் பின்னர் 2017இல் ஆரம்ப இறை நிலுவையில் சிறிதளவான மிகையொன்றைப் பதிவு செய்வதற்கான ஆற்றலைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகின்றன. எனினும் பிரதானமாக வெள்ளம் மற்றும் வரட்சி தொடர்பான நிவாரண வழிமுறைகள் மீதான அதிகரித்த செலவினம் மற்றும் அரசிறைச் சேகரிப்புக்களில் காணப்பட்ட சில நழுவல்கள் என்பனவற்றின் காரணமாக ஒட்டுமொத்த இறை செயலாற்றம் எதிர்பார்க்கப்பட்ட பாதையிலிருந்து விலகியே இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
உலகப் பொருளாதாரம் தொடர்பில், பன்னாட்டு நாணய நிதியத்தினால் 2018 சனவரியில் வெளியிடப்பட்ட உலகப் பொருளாதாரத் தோற்றப்பாட்டின் இற்றைப்படுத்தலில் உலகளாவிய வளர்ச்சி எறிவுகள் மேல் நோக்கித் திருத்தப்பட்டுள்ளன. உலகளாவிய வளர்ச்சி உத்வேகத்தின் இத்தகைய முன்னேற்றங்கள் இலங்கைப் பொருளாதாரத்தின் மீது ஒட்டுமொத்தமாக சாதகமான விளைவினைத் தோற்றுவிக்கின்ற அதேவேளை இறுக்கமான உலகளாவிய நிதியியல் நிலைமைகள் தொடர்ந்தும் கரிசனைக்குரியதாகவுள்ளன.
இத்தகைய அபிவிருத்திகளைக் கருத்திற்கொண்டு நாணயச்சபை மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 7.25 சதவீதமாகவும் 8.75 சதவீதமாகவும் பேணுவதெனத் தீர்மானித்தது.
நாணயக் கொள்கைத் தீர்மானம்: கொள்கை வீதங்கள் மாற்றமடையவில்லை
துணைநில் வைப்பு வசதி வீதம் 7.25%
துணைநில் கடன் வழங்கல் வசதி வீதம் 8.75%
நியதி ஒதுக்கு விகிதம் 7.50%
நாணயக் கொள்கை மீதான அடுத்த கிரமமான அறிக்கை 2018 ஏப்பிறல் 04ஆம் நாள் வெளியிடப்படும்.