நாட்டில் இடம்பெறும் 70ஆது சுதந்திர தின கொண்டாட்டங்களைக் குறிக்கும் விதத்தில் இலங்கை மத்திய வங்கி ரூபா 1000 ஞாபகார்த்த நாணயத் தாளினை 04.02.2018 அன்று சுற்றோட்டத்திற்கு விடுகிறது. இது இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் 4ஆவது ஞாபகார்த்தத் தாளாகும்.
ஞாபகார்த்த நாணயத் தாளின் அளவு, முதன்மையான நிறம் மற்றும் பாதுகாப்புப் பண்புகள் என்பன 11ஆவது நாணயத் தாள் தொடரிலுள்ள தற்போது சுற்றோட்டத்திலுள்ள ரூ.1000 நாணயத் தாளின் அதே பண்புகளுடன் பின்வரும் மாற்றங்களை மாத்திரம் கொண்டிருக்கும்.
தாளின் முன்பக்கத்தில் (கீழே காட்டப்பட்டுள்ளது):
- 11ஆவது நாணயத் தாள் தொடரின் தற்பொழுது சுற்றோட்டத்திலுள்ள ரூ.1000 நாணயத் தாளில் காணப்படும் வண்ணத்துப்பூச்சிக்குப் பதிலாக தாளின் இடதுபக்க கீழ் மூலையில் பல்லினத்தன்மையினைக் கொண்டாடுகின்ற சின்னம் காணப்படுகின்றது;
- 11ஆவது நாணயத் தாள் தொடரின் தற்பொழுது சுற்றோட்டத்திலுள்ள ரூ.1000 நாணயத் தாளில் காணப்படும் இறம்பொடைச் சுரங்கவழியின் தோற்றத்திற்குப் பதிலாக விகாரை, பள்ளிவாசல், இந்துக்கோவில் மற்றும் தேவாலயம் என்பன காணப்படுகின்றன்; அத்துடன்
- தாளின் இலக்கத்தின் முதலெழுத்தான S இற்குப் பதிலாக S70 காணப்படுகின்றது.
தாளின் பின்பக்கத்தில்: 11ஆவது நாணயத் தாள் தொடரின் தற்பொழுது சுற்றோட்டத்திலுள்ள ரூ.1000 நாணயத் தாளின் அதே தோற்றங்களே காணப்படுகின்றன.
5 மில்லியன் எண்ணிக்கை கொண்ட நாணயத் தாள்கள் வெளியிடப்படவுள்ளதுடன் நாணயத் தாளின் தொடர் இலக்கம் S70/1 000001 – S70/5 1000000 ஆக இருக்கும். தாளின் திகதி 2018.02.04 ஆகும்.
இந்நாணயத் தாள் இலங்கையில் எந்தவொரு தொகைக்குமான கொடுப்பனவிற்கும் சட்ட ரீதியான நாணயமாக இருக்கும் என்பதுடன் இது சுற்றோட்டத்திலிருக்கும் பொழுது மத்திய வங்கியின் பொறுப்பாகவும் இருக்கும்.
நாணயத் தாள் உத்தியோக பூர்வமாக மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர். இந்திரஜித் குமாரசுவாமி அவர்களினால் மாண்புமிகு நிதி அமைச்சர் திரு. மங்கள சமரவீர அவர்களிடம் 30.01.2018 அன்று உத்தியோகப்பூர்வமாக வழங்கப்பட்டது.
ஞாபகார்த்த நாணயத் தாள் 06.02.2018 இலிருந்து உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளினூடாக சுற்றோட்டத்திற்கு விடப்படவுள்ளது. அதேநேரம் ஆரம்பத் தொடர் இலக்கங்களுடன் கூடிய மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான நாணயத் தாள்கள் கவர்ச்சிகரமான மடிப்பொன்றில் வைக்கப்பட்டு ஒவ்வொன்றும் ரூ.1,300 இற்கு இல.54, சதம் வீதி, கொழும்பு 01 இல் அமைந்துள்ள பொருளாதார வரலாற்று அரும்பொருட்காட்சிச்சாலையிலும் மத்திய வங்கியின் அநுராதபுரம், மாத்தறை, மாத்தளை, திருகோணமலை மற்றும் கிளிநொச்சி பிரதேச அலுவலகங்களிலும் விற்பனை செய்யப்படும்