2017 நவெம்பரின் வெளிநாட்டுத் துறைச் செயலாற்றத்திற்கு அரச பிணையங்கள் சந்தைக்கான உயர்ந்த வெளிநாட்டு உட்பாய்ச்சல்கள் காரணமாக சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கிற்கு ஏற்பட்ட தொடர்ச்சியான உட்பாய்ச்சல் ஆதரவாக அமைந்ததுடன், சுற்றுலாவிலிருந்த வருவாய்கள் சிறிதளவில் மேம்பட்டன. 2016 நவெம்பரில் பதிவுசெய்யப்பட்ட தாழ்ந்த தளத்தின் ஓரளவு காரணமாக ஏற்றுமதிகளில் இரட்டை இலக்க வளர்ச்சி பதிவுசெய்யப்பட்டிருக்கின்ற போதும் உயர்ந்த இறக்குமதிகளின் காரணமாக இம்மாத காலப்பகுதியில் வர்த்தகப் பற்றாக்குறை குறிப்பிடத்தக்களவிற்கு விரிவடைந்தது. அதேவேளை, மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற மோசமான பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிலைமைகளின் காரணமாக தொழிலாளர் பணவனுப்பல்கள் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்தன. இதன்படி, சென்மதி நிலுவை 2017 நவெம்பர் இறுதியளவில் ஏறத்தாழ ஐ.அ.டொலர் 2.0 பில்லியன் கொண்ட திரண்ட மிகையைப் பதிவுசெய்தது. மொத்த அலுவல்சார் ஒதுக்குகளும் 2016 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 6.0 பில்லியனிலிருந்து 2017 நவெம்பர் இறுதியில் ஐ.அ.டொலர் 7.3 பில்லியனுக்கு (4.2 மாத இறக்குமதிகளுக்குச் சமனானது) அதிகரித்தது.
Tuesday, January 30, 2018