ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் அளவிடப்பட்ட முதன்மைப் பணவீக்கம் மற்றும் மையப் பணவீக்கம் இரண்டும் 2016 யூலையில் குறைவடைந்தன. உள்நாட்டு; நிரம்பல் நிலமைகளில் அவதானிக்கப்பட்ட வழமையான தன்மை அதே போன்று குறிப்பிட்ட வரிகளுக்குச் செய்யப்பட்ட திருத்தங்கள் இடை நிறுத்தப்பட்டமை என்பன நுகர்வோர் விலைப் பணவீக்கத்தினை மிதமடையச் செய்தன. எனினும், வருடாந்த சராசரி விலை மாற்றங்களில் பிரதிபலிக்கப்பட்டவாறு பணவீக்கத்தில் காணப்பட்ட மேல் நோக்கிய போக்கு இவ்வாண்டின் இதுவரை தொடர்ந்துமிருப்பது போல் தோன்றுகின்றது.
வெளிநாட்டுப் பக்கத்தில், 2016இன் முதலரைப்பகுதியில் வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை, ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2.2 சதவீதத்தினால் விரிவடைந்திருப்பதாக மதிப்பிடப்பட்டமைக்கு வெளிநாட்டுக் கேள்வி ஒப்பீட்டடிப்படையில் பலயீனமாகக் காணப்பட்டமையே காரணமாகும். 2016இல் சனவரியிலிருந்து யூலை வரையான காலப்பகுதியில் சுற்றுலாவிலிருந்தான வருவாய்கள் ஏறத்தாள 16.7 சதவீதத்தினால் அதிகரித்திருக்குமென மதிப்பிடப்பட்டமைக்கு யூலை மாதத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சாதனை மட்டத்தினை அடைந்தமையே காரணமாகும். ஆண்டின் முதல் ஏழுமாத காலப்பகுதியில் தொழிலாளர் பணவனுப்பல்கள் 3.8 சதவீதத்தினால் அதிகரித்தன. இவ்வுட்பாய்ச்சல்கள், அரச பிணையங்களின் முதலீடுகளில் வெளிநாட்டு ஈடுபாடுகள் மீண்டும் ஆரம்பமாகியமை, மற்றும் அரசாங்கத்திற்கு கிடைத்த நடுத்தர காலத்திலிருந்து நீண்ட காலம் வரையிலான நிதியியல் பாய்ச்சல்கள் என்பனவற்றுடன் சேர்ந்து சென்மதி நிலுவையின் மீதும் செலாவணி வீதத்தின் மீதுமான அழுத்தங்களை தளர்ந்தன. அதேவேளை, 2016 யூலை இறுதியில், மொத்த அலுவல்சார் ஒதுக்குகள், 2016 யூன் இறுதியில் ஐ.அ.டொலர் 5.3 பில்லியனிலிருந்து ஐ.அ.டொலர் 6.5 பில்லியனுக்கு மேம்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டது.
2016 யூன் மாதத்தில் நாணய விரிவாக்கம் உயர்வாகக் காணப்பட்டது. 2016 யூனில் வர்த்தக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடன் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில், முன்னைய மாதத்தில் பதிவு செய்யப்பட்ட 28.0 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 28.2 சதவீதம் கொண்ட குறிப்பிடத்தக்களவிற்கு உயர்ந்த வீதத்தில் தொடர்ந்தும் அதிகரித்தது. கைத்தொழில் மற்றும் பணிகள் துறைகளுக்கு பெறப்பட்ட உயர்ந்தளவு கொடுகடன்கள், தனியார் கடன்கள் மற்றும் முற்பணங்களுடன் சேர்ந்து ஆண்டின் முதலரைபப் குதியில் கொடுகடன் விரிவடைய தூண்டுதலளித்தன. இவ்வபிவிருத்திகளைப் பிரதிபலிக்கின்ற விதத்தில் 2016 யூனில் விரிந்த பணத்தின் வளர்ச்சி முன்னைய மாதத்தில் பதிவுசெய்யப்பட்ட 16.5 சதவீதத்திலிருந்து 17.0 சதவீதத்திற்கு விரைவடைந்தது. கிடைக்கத்தக்கதாகவுள்ள குறிகாட்டிகளின்படி, தனியார் துறைக் கொடுகடன் மற்றும் விரிந்த பணம் என்பனவற்றின் உயர் வளர்ச்சி 2016 யூலை மாதத்திலும் தொடர்ந்தது. அதேநேரம் ஆண்டின் முதல் ஏழு மாத காலப்பகுதியில் மத்திய வங்கியினால் பின்பற்றப்பட்ட நாணய இறுக்கமாக்கல் வழிமுறைகளுக்கு பதிலிறுத்தும் விதத்தில் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்த குறுங்கால் வட்டி வீதங்கள் நிதியியல் துறையில் கடன்வழங்கல் மற்றும் வைப்புவீதங்கள் இரண்டினதும் மேல்நோக்கிய சீராக்கங்களுக்கு வழிவகுத்தன.
நாணயச் சபை, 2016 ஓகத்து 30ஆம் நாள் நடைபெற்ற அதன் கூட்டத்தில், கொள்கை வட்டி வீதங்கள் மற்றும் நியதி ஒதுக்கு விகிதம் என்பனவற்றின் அதிகரிப்பினூடாக இவ்வாண்டின் முதல் ஏழுமாத காலப்பகுதியில் பின்பற்றப்பட்ட கொள்கை வழிமுறைகளின் தாக்கம் பொருளாதாரத்திற்குள் படிப்படியாக பரிமாற்றப்பட்டு வருவது அவதானிக்கப்பட்டிருக்கின்றது. எனவே, நாணய மற்றும் கொடுகடன் கூட்டுகளில் காணப்படும் வளர்ச்சி, நடுத்தர காலத்தில் நடுஒற்றை இலக்க மட்ட பணவீக்கத்திற்கு ஆதரவளிக்கதக்கதொரு மட்டத்திற்கு ஆண்டின் எஞ்சிய காலப்பகுதியில் குறைவடையும் போல் தோன்றுகின்றது. இதன்படி, நாணயச் சபை, மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதத்தினையும் மாற்றமின்றி முறையே 7.00 சதவீதத்திலும் 8.50 சதவீதத்திலும் பேணுவதெனத் தீர்மானித்தது.
நாணயக் கொள்கைத் தீர்மானம்:
கொள்கை வீதங்கள் மாற்றமின்றிக் காணப்படுகின்றன
துணைநில் வைப்பு வசதி வீதம் 7.00%
துணைநில் கடன் வழங்கல் வசதி வீதம் 8.50%
நியதி ஒதுக்கு விகிதம் 7.50%