தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013 = 100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2017 ஒத்தோபரில் 8.8 சதவீதத்திலிருந்து 2017 நவெம்பரில் 8.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.
ஆண்டுச் சராசரி அடிப்படையொன்றின் மீது அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2017 ஒத்தோபரில் 7.1 சதவீதத்திலிருந்து 2017 நவெம்பரில் 7.5 சதவீதத்திற்கு அதிகரித்தது.
மாதாந்த மாற்றத்தினைக் கருத்திற் கொள்கையில், தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் 2017 ஒத்தோபரில் 124.8 சுட்டெண் புள்ளியிலிருந்து 2017 நவெம்பரில் 126.4 சுட்டெண் புள்ளிக்கு அதிகரித்தது. இம்மாதாந்த அதிகரிப்பிற்கு மோசமான நிரம்பல்பக்க நடவடிக்கைகளின் காரணமாக உணவு வகையிலுள்ள பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பே முக்கிய காரணமாகும். தேங்காய், பச்சை மிளகாய் மற்றும் காய்கறிகள் என்பவற்றின் விலை அதிகரிப்பு முனைப்பானதாகக் காணப்பட்டது. இருப்பினும் கூட, உடன்மீன் மற்றும் சில பழவர்க்கங்களின் விலைகள் வீழ்ச்சியடைந்தன. அதேவேளை முனைப்பான விலை அதிகரிப்புகள் மருத்துவ ஆய்வுகூடங்களுக்கான கொடுப்பனவுகளிலும் தனியார் வைத்தியசாலை அறைகளுக்கான கட்டணக் கொடுப்பனவுகளிலும் அவதானிக்கப்பட்டன.
பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மையப் பணவீக்கம் ஆண்டின் முன்னைய மாதங்களிலிருந்து காட்டிய வீழ்ச்சியடைந்து செல்லும் போக்கினை தொடர்ந்தும் காட்டியது. எனவே தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் மையப் பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2017 ஒத்தோபரின் 4.1 சதவீதத்திலிருந்து 2017 நவெம்பரில் 2.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மையப் பணவீக்கத்தின் ஆண்டுச் சராசரி 2017 ஒத்தோபரின் 5.6 சதவீதத்திலிருந்து 2017 நவெம்பரில் 5.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.