இலங்கை மத்திய வங்கியின் 10ஆவது பன்னாட்டு ஆராய்ச்சி மாநாடு இலங்கை மத்திய வங்கியின் ஜோன் எக்ஸ்ரர் பன்னாட்டு மாநாட்டு மண்டபத்தில் 2017 திசெம்பர் 8ஆம் நாளன்று நடைபெற்றது. பல்வேறுபட்ட விடயப்பரப்புகளிலிருந்து தமது அனுபவங்களையும் நோக்குகளையும் பகிர்ந்துகொள்வதற்கு கொள்கைவகுக்கின்ற மற்றும் கல்விசார் நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்களுக்கான தளமொன்றினை வழங்குகின்ற அதேவேளை சமகால பேரண்டப் பொருளாதார கொள்கை விடயங்கள் மீதான புதுமையான கோட்பாட்டு ரீதியான மற்றும் அனுபவம் சார்ந்த ஆராய்ச்சியினை ஊக்குவிக்கும் நோக்குடன் 'உறுதியான எதிர்காலமொன்றினை நோக்கிய பேரண்டப் பொருளாதார கொள்கை மறுசீரமைப்பு" என்ற தொனிப்பொருளின் கீழ் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.
கடந்த காலத்தினைப் போன்று 10ஆவது பன்னாட்டு ஆராய்ச்சி மாநாடும் உலகின் பல பாகங்களிலிருந்தும் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் மத்திய வங்கி போன்றவற்றிலிருந்து பிரபல்யம் மிக்க ஆராய்ச்சியாளர்களைக் கவர்ந்தது.
இவ்வாண்டின் மாநாட்டிற்கு அவுஸ்ரேலிய கல்வியுலகின் மிகசெல்வாக்கு மிக்கவராக இருந்துவருகின்ற அவுஸ்ரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் கீத் கௌடன் அவர்களின் முதன்மை உரை சிறப்பம்சமாகும். முதன்மை உரையினை வழங்கிய பேராசிரியர் கௌடன் அவர்கள் வரிசெலுத்துநர்களுக்காக 'பணத்திற்கான பெறுமதி" யினை வழங்குகின்ற குறிக்கோளுடன் பொதுச் செலவினம் ஊக்குவிக்கப்பட வேணடும் என்பதனை எடுத்துக்காட்டினார். அரசாங்கப் பல்கலைக்கழகங்களின் மீது அரசாங்கத்தின் செலவிடுதலானது புதுமையான சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட நுட்பங்களைப் பயன்படுத்தி வினைத்திறன் மிக்க விதத்தில் ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் என்பதை அவர் எடுத்துக்காட்டினார். இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி மாநாட்டின் ஆரம்ப உரையினை நிகழ்த்தினார். இலங்கையில் பேரண்டப் பொருளாதாரக் கொள்கையினை உருவாக்குவதற்காக உறுதிமிக்க கட்டமைப்புகளை விருத்திசெய்வதனையும் சட்டங்களை இயற்றுவதனூடாக அத்தகைய கட்டமைப்புக்களை அமைப்புமுறையாக்குவதன் முக்கியத்துவத்தினையும் உரையின் போது ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
வருமானத்தினை அடிப்படையாகக் கொண்ட இறைத்திரட்சி மற்றும் நெகிழ்ச்சித் தன்மையுடைய பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பொன்றுக்கு மாறுகின்ற செயன்முறையின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியதுடன் மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மையினையும் பொறுப்புக்கூறும் ன்மையின் முக்கியத்துவத்தினையும் அவர் எடுத்துக்காட்டினார். வெளிநாட்டுத் துறையின் தாக்குப்பிடிக்கும் தன்மையை வலுப்படுத்துவதற்காக நெகிழ்ச்சித் தன்மையுடைய நாணய மாற்று வீதமொன்றைப் பேணுதல் மற்றும் படுகடனின் நிலைத்துநிற்கும் தன்மையை எய்துவதற்கு பொதுப் பொறுப்பு முகாமைத்துவத்திற்கான தேவையின் முக்கியத்துவத்தினையும் அவர் அங்கீகரித்தார். உறுதியான பொருளாதார வளர்ச்சிக்கும் மற்றும் தொழில் உருவாக்கத்திற்கும் வலுவான பேரண்டப் பொருளாதார அடிப்படைகள் மாத்திரமன்றி கட்டமைப்பு மறுசீரமைப்புகளும் அவசியம் என்பதனையும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
மாநாட்டின் இரண்டு தொழில்நுட்ப அமர்வுகளுக்கு இலங்கை மத்திய வங்கியின் உதவி ஆளுநர்களான திருமதி. எஸ். குணரத்ன மற்றும் திரு. ஏ எச் கருணாரத்ன ஆகியோர் தலைமை தாங்கினர். இலங்கை மத்திய வங்கியின் ஆராய்ச்சியாளர்கள் உள்ளடங்கலாக அவுஸ்ரேலியா, பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் ஆராய்ச்சியாளர்களினால் எடுத்துரைக்கப்பட்ட பேரண்டப் பொருளாதார விடயங்கள் மற்றும் நிதியியல் துறைப் பிரச்சனைகள் பற்றிய எட்டு ஆராய்ச்சிக் கட்டுரைகள் தொழில்நுட்ப அமர்வுகளில் உள்ளடங்கி இருந்தன. இவ்வாராய்ச்சிக் கட்டுரைகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், பன்னாட்டு நாணய நிதியம், தென்கிழக்காசிய மத்திய வங்கிகள் நிலையம் மற்றும் நாட்டின் ஏனைய புகழ்மிக்க ஆராய்ச்சி நிறுவனங்களிலிருந்து வெளிவாரி மீளாய்வாளர்கள் குழாமொன்றின் மூலம் தெரிவுசெய்யப்பட்டிருந்தன. சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைக்கான கலாநிதி டி.எஸ். விஜயசிங்க ஞாபகார்த்த விருது 'செலாவணி மாற்றுவீத இலக்கிலிருந்து நிலை மாறுதல்: இலங்கை பற்றிய நோக்கு" என்ற தலைப்பிலமைந்த கட்டுரையினை சமர்ப்பித்த இலங்கை மத்திய வங்கியின் மேற்கு அவுஸ்ரேலிய பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த திரு. ஹர்ஸ பரனவிதான என்பவருக்கு வழங்கப்பட்டது.