பன்னாட்டு நாணய நிதியம் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழ் ஐ.அ.டொலர் 251.4 மில்லியன் கொண்ட நான்காவது தொகுதிக் கடனை விடுவித்துள்ளது

பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையானது இலங்கை பெற்றுக் கொண்ட மூன்றாண்டு விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் மூன்றாவது மீளாய்வினை நிறைவு செய்து, சிறப்பு எடுப்பனவு உரிமை (சிஎஉ) 177.774 மில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 251.4 மில்லியன்) பெறுமதியான நான்காவது தொகுதியினைப் பகிர்ந்தளித்துள்ளது.

விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் பிரதான குறிக்கோளானது இலங்கையின் சென்மதி நிலுவையினைப் பலப்படுத்துவதாகக் காணப்படும் வேளையில் அரசாங்கத்தின் பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சிநிரலுக்கும் ஆதரவளிக்கின்றது. மூன்றாவது மீளாய்வு தொடர்பான நிறைவேற்றுச் சபையின் கலந்துரையாடலைத் தொடர்ந்து, தொடர்ச்சியான வானிலை தொடர்பான நிரம்பல் அதிர்வுகளுக்கு மத்தியிலும், இலங்கையின் நிலையான பேரண்டப் பொருளாதார மற்றும் நிதியியல் நிலைமையை பன்னாட்டு நாணய நிதியம் குறித்துக்காட்டியுள்ளது. அரசாங்க வருமானத்தினை அதிகரிப்பதற்கான இறைத்திரட்சி வழிமுறைகளைப் பொறுப்பேற்கின்ற வேளையில், பொருளாதாரச் சீர்திருத்தங்களை நோக்கிய அதிகாரிகளின் கட்டுப்பாடுகளையும் பன்னாட்டு நாணய நிதியம் வரவேற்றுள்ளது. வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையினை செறிவாக்குகின்ற வேளையில் ஒதுக்குகளைக் கட்டியெழுப்புவதற்கும் மேம்படுத்தப்பட்ட செலாவணி மாற்றுவீத நெகிழ்வுத்தன்மையினை அடைவதற்குமான அதிகாரிகளின் முயற்சிகளை பன்னாட்டு நாணய நிதியம் மேலும் பாராட்டியுள்ளது. பணவீக்க அழுத்தங்களைத் தளர்த்தல் மற்றும் உயர் கொடுகடன் வளர்ச்சி என்பவற்றின் மீது நாணயக் கொள்கையானது கவனம் செலுத்த வேண்டும் என்ற நோக்கினையும் பன்னாட்டு நாணய நிதியம் குறிப்பிடுகின்றது. மேலும், விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழ் உருவாக்கப்பட்ட அளவுசார் செயலாற்றல் பிரமாணங்களை அடைந்துகொள்வதற்கான அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் பன்னாட்டு நாணய நிதியம் அங்கீகரித்துள்ளது.

நான்காவது தொகுதியின் பகிர்ந்தளிப்புடன், இலங்கை, விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழ் மொத்தமாக ஐ.அ.டொலர் 759.9 மில்லியனை இதுவரை பெற்றிருக்கிறது. விரிவாக்கப்பட்ட நிதிய வசதி மூலம் ஆதரவளிக்கப்படுகின்ற பொருளாதார நிகழ்ச்சித்திட்டமானது, நாட்டின் பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டினை மேம்படுத்துவதற்கும் சந்தை நம்பிக்கைகளை வலுப்படுத்துவதற்கும் எதிர்பார்க்கின்ற வேளையில் சவால்மிக்க உலக சூழ்நிலையில் வெளிநாட்டுத் துறையின் தாக்குப்பிடிக்கும் தன்மையினை வலுப்படுத்துகின்றது.

 

Published Date: 

Friday, December 8, 2017