இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் உளவறிதல் பிரிவு (FIU - Sri Lanka) சிங்கப்பூரின் ஐயத்திற்குரிய கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் அலுவலகத்துடன் (STRO) இருவயினொத்த தன்மை, ஒத்துழைப்பு தாற்பரியம் மற்றும் பரஸ்பர ஈடுபாடு என்பனவற்றின் அடிப்படையில் பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதியிடல் தொடர்பான புலன்விசாரணைகள் மற்றும் வழக்குத் தொடுத்தல் தொடர்பான தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கு வசதியளிக்கும் விதத்தில், ஒவ்வொரு நாட்டினதும் தேசிய சட்டவாக்கங்களின் கட்டமைப்பிற்குட்பட்டு 2016 செத்தெம்பர் 01ஆம் நாளன்று புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினை (MOU) மேற்கொண்டது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தமானது நிதியியல் உளவறிதல் பிரிவு - இலங்கையினால் 2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாட்டு நியதிகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
பணம் தூயதாக்கலும் பயங்கரவாதிகளுக்கு நிதியிடலும் பன்னாட்டு ரீதியாக தொடர்புபட்ட நிதியியல் குற்றங்களாகும். இது உலகளாவிய பொருளாதாரம் மற்றும் நிதியியல் முறைமையின் உறுதிப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக விளங்கக்கூடும். ஆகவே, பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதியிடல் என்பனவற்றிற்கெதிராக போராடுவதற்கு நிதியியல் உளவறிதல் அதிகாரிகளுக்கிடையே உலகளாவிய ஒத்துழைப்பு இன்றியமையாததொன்றாகக் காணப்படுகின்றது. இதனைப் பொறுத்தவரை, நிதியியல் உளவறிதல் பிரிவு - இலங்கை, உளவறிதல் நோக்கங்களுக்கான தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்காக சிங்கப்பூரின் ஐயத்திற்குரிய கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் அலுவலகத்துடன் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் உட்பட இதுவரை 32 நியாயாதிக்கங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.