பன்னாட்டு நாணய நிதியம் இலங்கை பெற்றுக் கொண்ட மூன்றாண்டு விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் முதலாவது மீளாய்வினை வெற்றிகரமாக மீளாய்வு செய்து கொண்டமையினைத் தொடர்ந்து சிஎஉ 119.894 மில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 162.6 மில்லியன்) பெறுமதியான இரண்டாவது தொகுதியினை 2016 நவெம்பர் 18ஆம் நாளன்று பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது.
விரிவாக்கப்பட்ட நிதிய வசதி, சென்மதி நிலுவைக்கும் அரசாங்கத்தின் பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டத்திற்கும் ஆதரவளிப்பதனை நோக்கமாகக் கொண்டதாகும். செத்தெம்பரில் இலங்கைக்கு விஜயம் செய்த பன்னாட்டு நாணய நிதிய தூதுக்குழு அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் இறைத்திரட்சி வழிமுறைகள் மற்றும் சந்தை நம்பகத்தன்மையினை மேம்படுத்துவதற்குப் பங்களித்த இறுக்கமான நாணயக் கொள்கை, வெளிநாட்டு நிலுவைகளின் மீதான அழுத்தங்களைத் தளர்த்தல் என்பனவற்றை வரவேற்றதுடன் யூன் இறுதியில் அனைத்துக் கணியம்சார் செயலாற்றப் பிரமாணங்களையும் எய்துவதில் அரசாங்கமும் ஏனைய நிறுவனங்களும் மேற்கொண்ட முயற்சிகளையும் பாராட்டியது. ப.நா.நிதிய நிறைவேற்றுச் சபையின் உறுப்பினர்களும் தற்பொழுது இடம்பெற்று வருகின்ற விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழ் இலங்கையின் சாதனைகளையிட்டு தமது திருப்தியை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
இரண்டாவது தொகுதியின் பகிர்ந்தளிப்புடன், இலங்கை, விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழ் மொத்தமாக ஐ.அ.டொலர் 325 மில்லியனை இதுவரை பெற்றிருக்கிறது. தொடர்ச்சியாகக் கிடைத்துவரும் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியானது சந்தையின் நம்பகத்தன்மைகளை உத்வேகப்படுத்தவும் போட்டித்தன்மையினை அதிகரிக்கவும் வெளிநாட்டின் தாக்குப்பிடிக்கக்கூடிய தன்மையினை வலுப்படுத்தவும் பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டினை மேம்படுத்தவும் நாட்டிற்கு உதவும் என்பதுடன் அதன் மூலம் நடுத்தர கால வளர்ச்சி வேகத்தினை எய்துவதற்கும் உதவுகிறது.