எதிர்பார்க்கப்பட்டவாறு, 2015 இறுதியிலிருந்து மத்திய வங்கியினால் பின்பற்றப்பட்டுவரும் நாணயக் கொள்கை வழிமுறைகளுக்கு பதிலிறுத்தும் விதத்தில் 2016 செத்தெம்பர் காலப்பகுதியில் வர்த்தக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடன் வளர்ச்சி குறிப்பிடத் தக்களவிற்கு வீழ்ச்சியடைந்தது. இதற்கமைய, வர்த்தக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடனின் ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சி முன்னைய ஆண்டின் 27.3 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2016 செத்தெம்பரில் 25.6 சதவீதத்தினைப் பதிவு செய்தது. தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடனில் வீழ்ச்சி ஏற்பட்டபோதும் விரிந்த பணத்தின் (M2b) வளர்ச்சி முன்னைய மாதத்தின் 17.3 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2016 செத்தெம்பரில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில்; 18.4 சதவீதத்திற்கு விரிவடைந்தமைக்கு வர்த்தக வங்கிகளிலிருந்தான அரச துறையின் கடன்பாடுகள் இம்மாத காலப்பகுதியில் விரிவடைந்தமையே காரணமாகும். அதேநேரம், உள்நாட்டு பணச்சந்தையில் ரூபாய் திரவத்தன்மை நிலைமைகள் சமநிலையான மட்டமொன்றிற்கு திரும்பியதுடன், இது தற்போதைய மட்டங்களில் சந்தை வட்டி வீதங்கள் உறுதித்தன்மையினை அடைய உதவும்.
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் இரண்டினாலும் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2016 ஒத்தோபரில் ஏறத்தாள நடு ஒற்றை இலக்கமட்டத்தில் உறுதியாகக் காணப்பட்டது. மேலும், தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் இரண்டினையும் அடிப்படையாகக் கொண்ட மையப் பணவீக்கம் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2016 ஒத்தோபரில் மாற்றமின்றிக் காணப்பட்டது. அரசாங்கத்தினால் வரி அமைப்பிற்கு செய்யப்பட்ட சீராக்கங்கள் 2016 நவெம்பரிலிருந்து பணவீக்கத்தின் மீது ஒரே தடவையான தாக்கமொன்றினைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற வேளையில் பணவீக்கத்தின் மீதான 2017 வரவுசெலவுத் திட்டத்தின் ஒட்டுமொத்த தாக்கம் சாதகமாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. முன்கூட்டிய நாணயக் கொள்கை வழிமுறைகள் எதிர்பார்க்கப்பட்ட இறைத்திரட்சி செயன்முறைகளுடன் இணைந்து ஆதரவளித்தமையின் மூலம் கூட்டுக் கேள்வியின் அழுத்தங்கள் நன்கு கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டதுடன் இதன் விளைவாக, எதிர்காலத்தில் பணவீக்கம் நடுஒற்றை இலக்க மட்டத்தில் உறுதியாகப் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டு பக்கத்தில், இறக்குமதிகள் மீதான செலவினத்தில் சுருக்கம் காணப்பட்டதற்கிடையில் தொடர்ந்து இரண்டுமாதமாக ஏற்றுமதி வருவாய்கள் வளர்ச்சியைப் பதிவு செய்தமையின் காரணமாக 2016 செத்தெம்பரில் வர்த்தக நிலுவைகளின் பற்றாக்குறை 12.0 சதவீதம் சுருக்கமடைந்தது. 2016இன் முதல் பத்துமாத காலப்பகுதியில் சுற்றுலாவிலிருந்தான வருவாய்கள் ஏறத்தாள 14.6 சதவீதம் அதிகரித்திருப்பதாக மதிப்பிடப்பட்ட வேளையில் தொழிலாளர் பணவனுப்பல்கள் இதே காலப்பகுதியில் 3.5 சதவீதம் கொண்ட வளர்ச்சியைப் பதிவு செய்தன. 2016 ஒத்தோபரில் மொத்த அலுவல்சார் ஒதுக்கு நிலைமை ஐ.அ.டொலர் 6.1 பில்லியனாக மதிப்பிடப்பட்ட வேளையில் இலங்கை ரூபா 2016ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஐ.அ.டொலருக்கு எதிராக 2.6 சதவீதத்தினால் தேய்வடைந்தது. அதேவேளை, பன்னாட்டு நாணய நிதியத்தின் நிகழ்ச்சித் திட்டத்தின் முதலாவது மீளாய்வு வெற்றிகரமாக நிறைவடைந்ததன் பின்னர் 2016 நவெம்பரில் பன்னாட்டு நாணய நிதியித்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் இரண்டாவது தொகுதியினை இலங்கை பெற்றிருந்தது. விரிவாக்கப்பட்ட நிதிய வசதி நிகழ்ச்சித்திட்டம் தொடர்ந்து கிடைப்பது எதிர்காலத்தில் நடுத்தர காலப்பகுதியிலிருந்து நீண்ட காலம் வரையான நிதியியல் பாய்ச்சல்களுக்கு வசதியளிப்பதன் மூலம் பொருளாதாரத்தினைப் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள அபிவிருத்திகளை பரிசலீனையிற்கொண்டு நாணயச்சபை, 2016 நவெம்பர் 28ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் தற்போதைய நாணயக் கொள்கைகள் பொருத்தமானது என்ற கருத்தினை கொண்டிருந்ததுடன் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 7.00 சதவீதத்திலும் 8.50 சதவீதத்திலும் மாற்றமின்றி பேணுவதென தீhம்hனித்தது.
நாணயக் கொள்கைத் தீர்மானம்: கொள்கை வீதங்கள் மாற்றப்படவில்லை
துணைநில் வைப்பு வசதி வீதம் 7.00%
துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் 8.50%
நியதி ஒதுக்கு விகிதம் 7.50%