நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் இலங்கையின் சனாதிபதியுமான மாண்புமிகு அநுர குமார திஸாநாயக்க அவர்களும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் பி. நந்தலால் வீரசிங்க அவர்களும் 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 26ஆம் பிரிவின் நியதிகளிற்கமைவாக புதிய நாணயக் கொள்கைக் கட்டமைப்புசார் உடன்படிக்கையொன்றில் 2026 ஒத்தோபர் 01ஆம் திகதி கையொப்பமிட்டனர். உடன்படிக்கையானது 2026 ஒத்தோபர் 01ஆம் திகதியிடப்பட்ட 2508/28 இலக்க அரசாங்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
நாணயக் கொள்கைக் கட்டமைப்புசார் உடன்படிக்கையின் முக்கிய பண்புகள்
- பணவீக்க இலக்கு: மத்திய வங்கியானது காலாண்டு முதன்மைப் பணவீக்கத்தினை 5 சதவீதமாகப் பேணுவதனை இலக்காகக் கொள்ளுதல் வேண்டும்.
- பொறுப்புக்கூறல் இடைவெளி: ±2 சதவீதப் புள்ளிகளினைக் கொண்டதோர் இடைவெளி
- பணவீக்கத்தின் அளவீடு: காலாண்டு முதன்மைப் பணவீக்க வீதமானது தொடர்புடைய நாட்காட்டிசார் காலாண்டின் மூன்று மாதங்களிற்குத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்படும் மாதாந்த கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் ஆண்டிற்கு ஆண்டுச் சதவீத மாற்றங்களின் சாதாரண சராசரியாகக் காணப்படுகின்றது.
மத்திய வங்கிச் சட்டத்தின் 26(4) பிரிவின் நியதிகளிற்கமைய, பணவீக்க இலக்கு மற்றும் அதனுடன் தொடர்புடைய அளவுருக்கள் என்பன ஒவ்வொரு மூன்று ஆண்டுகளிற்கு ஒருமுறை அல்லது விதிவிலக்கான சூழ்நிலைகள் அவ்வாறு அவசியப்படுத்தினால் குறுங்கால இடைவெளிகளில் மீளாய்வு செய்யப்படுகின்றன. அதற்கமைய, 2023 ஒத்தோபரில் கையெழுத்திடப்பட்ட ஆரம்ப நாணயக் கொள்கைக் கட்டமைப்புசார் உடன்படிக்கைக்குப் பின்னர் அட்டவணையிடப்பட்ட மீளாய்வினை மேற்கொள்வதற்கான ஆண்டாக 2026 அமைந்தது.
மீளாய்வின் பகுதியொன்றாக, இலங்கையின் பொருளாதாரக் கட்டமைப்பு, வரலாற்று மற்றும் அனுபவ ரீதியிலான சான்றுகள், நாணயக் கொள்கைப் பரிசீலனைகள், கட்டமைப்பின் நம்பகத்தன்மை, ஆர்வலர்களின் கருத்துக்கள் மற்றும் பன்னாட்டு ரீதியிலான அனுபவங்கள் மற்றும் நடைமுறைகள் ஆகியவற்றினைக் கருத்திற்கொண்டு, மத்திய வங்கியானது அனைத்தையுமுள்ளடக்கிய தொழில்நுட்ப மதிப்பீடொன்றினை மேற்கொண்டது. மீளாய்வின் மூலமான கண்டறிகைகளின் அடிப்படையில், மத்திய வங்கியானது அதன் முன்மொழிவினை நிதி அமைச்சிற்குத் தொடர்பூட்டியது. உன்னிப்பான பரிசீலனையின் பின்னர் அப்பரிந்துரையினை அமைச்சு ஏற்றுக்கொண்டது.
உள்நாட்டு விலை உறுதிப்பாட்டினை அடைவதும் அதனைப் பேணுவதும் எனும்; அதன் முதன்மைக் குறிக்கோளை அடையும் வகையில், முன்னோக்கிய பார்வையிலான மற்றும் தரவுகளினால் உந்தப்பட்ட கொள்கைத் தீர்மானங்களின் ஊடாக பணவீக்க இலக்கினை அடைவதற்குத் மத்திய வங்கியானது தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது.
அரசாங்க வர்த்தமானியினை https://www.cbsl.gov.lk/ta/நாணயக்-கொள்கைக்/நாணயக்-கொள்கைக்-கட்டமைப்பு%20உடன்படிக்கை எனும் இணைப்பின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்








