கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை (கொநுவிசு, 2021=100) அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2026 ஓகத்துடன் ஒப்பிடுகையில் 2026 செத்தெம்பரில் 8 சதவீதத்தில் மாற்றமின்றிக் காணப்பட்டது.
அதேவேளை, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்காண்டு) 2026 ஓகத்தில் 8.5 சதவீதத்திலிருந்து 2026 செத்தெம்பரில் 8.7 சதவீதமாக அதிகரித்த வேளை உணவல்லாப் பணவீக்கமானது (ஆண்டிற்காண்டு) 2026 ஓகத்துடன் ஒப்பிடுகையில் 2026 செத்தெம்பரில் 7.7 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது.
மாதத்திற்கு மாத அடிப்படையில், கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணானது 2026 செத்தெம்பரில் 0.19 சதவீதத்தால் அதிகரித்தது. இச்சிறிதளவு அதிகரிப்பானது உடன் பழங்கள் மற்றும் பெரிய வெங்காயம் என்பவற்றின் விலைகளில் அதிகரிப்புகளுக்கு பெருமளவில் காரணமாகவிருந்த, 0.15 சதவீதப் புள்ளிகளால் பங்களித்த உணவு வகையினால் பிரதானமாக தூண்டப்பட்டிருந்த அதேவேளை 2026 ஓகத்துடன் ஒப்பிடுகையில் கல்வித் துணை வகையின் விலைகளில் அதிகரிப்பிற்கு பெருமளவில் காரணமாகவிருந்த உணவல்லா வகை 0.04 சதவீதப் புள்ளிகளால் பங்களித்தது.
அதேவேளை, மையப் பணவீக்கமானது (ஆண்டிற்காண்டு) 2026 ஓகத்தில் 5.1 சதவீதத்திலிருந்து 2026 செத்தெம்பரில் 5.4 சதவீதமாக அதிகரித்தது.
2026இன் மூன்றாம் காலாண்டிற்கான அடையப்பட்ட காலாண்டு சராசரிப் பணவீக்கம் மத்திய வங்கியின் பணவீக்க எறிவுகளுக்கமைவாக காணப்பட்டது. 2026 செத்தெம்பர் மாத நாணயக் கொள்கைச் சுற்றில் மேற்கொள்ளப்பட்ட பணவீக்க எறிவுகளுக்கமைய, முதன்மைப் பணவீக்கமானது 5 சதவீத இலக்கினை நோக்கி தளர்வடைவதற்கு முன்னர் 2027ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டு முழுவதும் உயர்வான ஒற்றை இலக்கத்தில் காணப்படுமென எறிவுசெய்யப்பட்டுள்ளது.








