பன்னாட்டு நாணய நிதியத்தின் அலுவலர் குழு இலங்கைக்கான விஜயத்தை நிறைவுசெய்கின்றது

திரு. இவான் பப்பாஜீயோர்ஜியு தலைமையிலான பன்னாட்டு நாணய நிதியத்தின் பணிக்குழு அண்மைய பேரண்டப்பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாட்டின் கீழ் பொருளாதார மற்றும் நிதிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள  முன்னேற்றம் மற்றும் 2026 உறுப்புரை IV இன் பின்னணியில் வழங்கப்பட்ட கொள்கை பரிந்துரைகள் குறித்து கலந்துரையாடுவதற்கும் செத்தெம்பர் 10 முதல் 23 வரையான காலப்பகுதியில் கொழும்புக்கு விஜயம் செய்தது. விஜயத்தின் இறுதியில், பன்னாட்டு நாணய நிதியமானது பின்வரும் ஊடக வெளியீட்டினை 2026 செத்தெம்பர் 23 அன்று வெளியிட்டதுடன், இதனைக் கீழேயுள்ள இணைப்பிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

https://www.imf.org/en/news/articles/2026/09/23/pr26301-sri-lanka-imf-st...

பணிக்குழு வருகையின் பின்னரான பத்திரிகை வெளியீடுகளானது நாடொன்றிற்கான விஜயமொன்றினைத் தொடர்ந்து பூர்வாங்கமாகக் கண்டறிந்தவைகளை தெரிவிக்கின்ற பன்னாட்டு நாணய நிதியத்தின் அலுவலர் குழுக்களின் கூற்றுக்களை உள்ளடக்குகின்றன. இக்கூற்றில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் பன்னாட்டு நாணய நிதிய அலுவலர்களின் கருத்துக்களேயன்றி அது பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையின் கருத்துக்களைப் பிரதிபலிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இப்பணிக்குழு சபை கலந்துரையாடலுக்கு வழிவகுக்கமாட்டாது.   

  • பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி பற்றிய ஏழாவது மீளாய்வு அத்துடன் 2026 உறுப்புரை IV ஆலோசனை என்பன தொடர்பில் பன்னாட்டு நாணய நிதிய அலுவலர்களும் இலங்கை அதிகாரிகளும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை நடாத்தினர். ஏழாவது மீளாய்வினை நிறைவுசெய்வதற்குத் தேவையான அளவுருக்கள் மற்றும் கொள்கைகள் மீதான இணக்கப்பாட்டை எட்டுவதை நோக்கி அண்மைய எதிர்காலத்திலும் கலந்துரையாடல்கள் தொடரும்.
  • இலங்கையின் பொருளாதாரமானது தொடர்ந்துவந்த அதிர்வுகளுக்கு மத்தியில் தொடர்ந்தும் தாக்குப்பிடிக்கும்தன்மையினைத் காண்பிக்கின்றது. ஆயினும், இடர்நேர்வுகள் கீழ் நோக்கியே காணப்படுகின்றன. வலுவான நடுத்தரகால அரசிறை உபாயம் மற்றும் நிர்வாகம் என்பவற்றை உருவாக்குதல், சக்தி செலவு மீட்டலை நிலைநாட்டுதல் மற்றும் மூலதன முதலீட்டினை நிறைவேற்றுதல் என்பன முன்னுரிமைகளாகக் காணப்படுகின்றன.
  • பேரண்டப்பொருளாதார உறுதிப்பாட்டைப் பாதுகாப்பதற்கு முன்மதிமிக்க கொள்கைகளுக்கும்  மறுசீரமைப்புக்களுக்கும்  உறுதியான கடமைப்பொறுப்பு இன்றியமையாததாக விளங்குகின்றது. நிலைபெறுதலிலிருந்து மாற்றத்தை நோக்கி நகர்வதென்பது வறுமையினைக் குறைப்பதற்கான கட்டமைப்புசார் மறுசீரமைப்புக்கள் மீதான நிலையான உத்வேகம் மற்றும் வலுவான அத்துடன் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியினூடாக வாழ்க்கைத் தரங்களை உயர்த்துதல் என்பவற்றை வேண்டிநிற்கின்றது.
  • இலங்கை மத்திய வங்கி, 5 சதவீத இலக்கையும் பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பின் நம்பகத்தன்மையை   உறுதியாகத் நிலைநாட்டுவதற்கான பொறுப்புக்கூறலையும் பேணவேண்டும்.  

வொஷிங்டன், டி சி: திரு. இவான் பப்பாஜீயோர்ஜியு தலைமையிலான பன்னாட்டு நாணய நிதியத்தின் குழு, (i) அண்மைய பேரண்டப்பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாட்டின் கீழ் பொருளாதார மற்றும் நிதியியல் கொள்கைகளினை நடைமுறைப்படுத்துவதிலுள்ள முன்னேற்றம் மற்றும் (ii) 2026 உறுப்புரை IV ஆலோசனையின் பின்னணியில் கொள்கைப் பரிந்துரைகள் என்பன குறித்துக் கலந்துரையாடுவதற்கு 2026 செத்தெம்பர் 10 – 23 வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தது. விஜயத்தினை நிறைவுசெய்து, திரு. பப்பாஜீயோர்ஜியு பின்வரும் அறிக்கையினை வெளியிட்டுள்ளார்:

“இலங்கையின் பொருளாதாரம் தொடர்ந்துவந்த அதிர்வுகளுக்கு குறிப்பிடத்தக்க தாக்குப்பிடிக்கும் தன்மையினை நிரூபித்துள்ளது. பொருளாதார நடவடிக்கை 2026 இரண்டாம் காலாண்டில் 4.2 சதவீதத்தினால் விரிவடைந்து, வலுவான வளர்ச்சியினைக் கொண்ட தொடர்ச்சியாக பதினொரு காலாண்டுகளை அடையாளப்படுத்தியுள்ளது. உலகளாவிய எரிபொருள் விலை அதிர்வு காரணமாக முதன்மைப் பணவீக்கம் ஓகத்தில் ஆண்டிற்கு ஆண்டு 8 சதவீதமாக உயர்வடைந்த அதேவேளை, எதிர்பார்க்கைகள் பரந்தளவில் நிலைபெற்றுக் காணப்பட்டன. மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் அதிகரித்து, 2026 ஓகத்து இறுதியில் ஐ.அ.டொலர் 6.9 பில்லியனை எட்டியுள்ளன. வங்கிகள் நன்கு மூலதனமாக்கப்பட்டு இலாபமிக்கவையாகக் காணப்படுகின்றன. 2026 முதலரையாண்டில் இறைசார் பெறுபேறுகள் வலுவாகவிருந்ததுடன் படுகடன் மறுசீரமைப்பு பாரியளவில் நிறைவுபெற்றுள்ளது.

“எவ்வாறாயினும், மத்திய கிழக்கு யுத்தத்தின் காலம் மற்றும் தீவிரம் மீதான நிச்சயமின்மை, உலகளாவிய வர்த்தகக் கொள்கை அத்துடன் எல் நினோ தாக்கம் என்பவற்றிலிருந்து இலங்கை தொடர்ச்சியாக கீழ்நோக்கிய இடர்நேர்வுகளை எதிர்கொள்கின்றது. அதிர்ச்சிக்குள்ளாகக்கூடிய சூழலொன்றில் பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டைப் பாதுகாப்பதானது  இறைசார் மற்றும் வெளிநாட்டுத் தாங்கியிருப்புக்களைக் கட்டியெழுப்புவதற்கான முன்மதிமிக்க கொள்கைகள் மற்றும் மறுசீரமைப்புகளுக்கான  உறுதியான  கடமைப்பொறுப்பு,  விலை உறுதிப்பாட்டைப் பேணுதல், மற்றும் ஆளுகை நிகழ்ச்சிநிரலை முன்னேற்றுகின்ற அதேவேளை, மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாப்பதற்கான சமூகப் பாதுகாப்பு வலையமைப்பினை வலுப்படுத்துதல் என்பவற்றை வேண்டுகின்றது. 

“இந்நோக்கில், அரசிறைத் திரட்டலை நிலைநாட்டுகின்ற அதேவேளை வரி முறைமையின் வினைத்திறனையும் நியாயத்தன்மையினையும் மேம்படுத்துவதற்கு நடுத்தரகால அரசிறை உபாயமொன்றினை உருவாக்கி நடைமுறைப்படுத்துவது இன்றியமையாததாக அமையும். வரித் தளத்தினை விரிவுபடுத்துவதற்கும் வரி விலக்களிப்புக்களையும் ஊக்குவிப்புக்களையும் சீரமைப்பதற்கும் உறுதியான முயற்சிகள் தேவைப்படுகின்றன. அரசிறை நிர்வாகத்தை வலுப்படுத்துவது வரி இணங்குவித்தலை மேலும் மேம்படுத்தி, நீடிக்கத்தக்க அரசிறை வருவாய்களுக்கு ஆதரவளிக்கும். செலவு மீட்பு சக்தி விலையிடலை நிலைநாட்டுவது அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளிலிருந்து தோன்றும் இறைசார் இடர்நேர்வுகளைக் குறைப்பதற்கு உதவும். டித்வா புயல் தொடர்புபட்ட மீட்சி மற்றும் மீள்கட்டுமானம் என்பவற்றை துரிதப்படுத்தலுக்கானவை உள்ளடங்கலாக மூலதனச் செலவிடல் நிறைவேற்றலுக்கான முட்டுக்கட்டைகளுக்குத் தீர்வுகாண்பதும் முக்கியமாகக் காணப்படுகின்றது. 

“நாணயக் கொள்கையானது பணவீக்க அழுத்தங்களுக்குத் தீர்வுகாண்பதற்குத் தயாராகவிருந்து, நெகிழ்ச்சித்தன்மைவாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பிற்கிசைவாக நடுத்தரகால காலப்பகுதியினுள் விலை உறுதிப்பாட்டை உறுதிசெய்ய வேண்டும். அதிர்வுகளை ஈர்ப்பதற்கும் ஒதுக்குத் திரட்டலுக்கு ஆதரவளிப்பதற்கும் மிகுந்த செலாவணி வீத நெகிழ்ச்சித்தன்மை முக்கியமானதாகும். முதலாவது நியதிச்சட்ட மீளாய்வில் இலங்கை மத்திய வங்கி, 5 சதவீத பணவீக்க இலக்கையும் பொறுப்புக்கூறல் வீச்சையும் பேணவேண்டும். தற்போதைய இலக்கானது உயர்வான உணவு மற்றும் சக்தி விலைத் தளம்பல்களுக்கு மத்தியில் இலங்கை வேண்டிநிற்கின்ற நெகிழ்வுத்தன்மையினைப் பேணிக்காக்கிக்கின்றது அத்துடன்  தாழ்வான மற்றும் நிலையான பணவீக்கம் பற்றிய சாதனைப்பதிவு  நிலைநாட்டப்பட்ட பின்னர் அடுத்த மீளாய்வில் குறைவான இலக்கை நோக்கி ஒருங்கிணைந்து செல்லுதல் அடுத்த பரிசீலனையில் கொள்ளப்படலாம். 

“ஊழலுக்கெதிரான சட்டவாக்கக் கட்டமைப்பின் நேர்மையைப் பேணிக்காத்தல் பொதுமக்கள் நம்பிக்கையினை அதிகரிப்பதற்கு இன்றியமையாததாக விளங்குகின்றது. அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தங்களிலிருந்து சில வாசகங்கள் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புக்கூறலையும் நலிவடையச் செய்யலாம்.

“நிலைபெறுதலிலிருந்து மாற்றத்தை நோக்கி நகர்வதானது வர்த்தகத்தைத் தாராளமயப்படுத்தல், வியாபார மற்றும் தொழிலாளர் ஒழுங்குவிதிகளை நவீனமயப்படுத்தல், நிதிக்கான பெறுவழியினை விரிவுபடுத்தல் மற்றும் டிஜிட்டல்மயப்படுத்தலை முன்னேற்றுதல் என்பன உள்ளடங்கலாக இயலச்செய்கின்ற வியாபாரச் சூழலை பேணிவளர்ப்பதற்கும் முதலீட்டை ஈர்ப்பதற்குமான கட்டமைப்பு சார்ந்த மறுசீரமைப்புக்கள் மீதான நிலையான உத்வேகத்தை வேண்டி நிற்கின்றது. எமது ஆராய்ச்சி பரிந்துரைக்கின்றவாறு, இறுதியாக, ஆற்றல்வாய்ந்த கொள்கை மற்றும் மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தலின் சாதனைப் பதிவு  நிலைநாட்டுவது தாக்குப்பிடிக்கும் தன்மையை வலுப்படுத்தவும் நம்பிக்கையை நீடித்த காலம் மீளமைப்பதற்கும் வலுவான மற்றும் அனைவரையுமுள்ளடக்கிய வளர்ச்சி ஊடாக வாழ்க்கைத் தரங்களை உயர்த்துவதற்கும் துணைபுரியும். 

“பன்னாட்டு நாணய நிதியக் குழு யாழ்பாணத்திற்கு விஜயம் செய்ததுடன் வட மாகாணத்தின் பெருளாதார உள்ளார்ந்த ஆற்றல் பற்றி நேரடியாக அறிந்துகொண்டது. இலங்கையின் பொருளாதார மாறுதலின் நன்மைகள் மிகவும் பரந்தளவில் பகிரக்கூடியவகையில் சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துகின்ற அதேவேளை தொடர்புகை, தேர்ச்சிகள் என்பவற்றிலும் அத்துடன் வேளாண்மை, கடற்றொழில், சுற்றுலா, மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி போன்ற துறைகளிலும் முதலீடுகள் ஊடாக வளர்ச்சிக்கு வாய்ப்பளிப்பதற்கும் தொழில்வாய்ப்புக்களை உருவாக்குகின்ற சந்தர்ப்பங்களை தனியார் துறை மற்றும் சிவில் சமூகத்துடனான கலந்துரையாடல்கள் எடுத்துக்காட்டின. 

“பன்னாட்டு நாணய நிதியக் குழு,  அதிமேதகு சனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுர குமார திசாநாயக்க, கௌரவ பிரதம அமைச்சர் முனைவர். ஹரிணி அமரசூரிய, கௌரவ தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான பேராசிரியர். அனில் ஜயந்த பர்ணாந்து, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர். பி. நந்தலால் வீரசிங்க, திறைசேரிக்கான செயலாளர் முனைவர். ஹர்ஷன சூரியப்பெரும, சனாதிபதிக்கான மூத்த பொருளாதார ஆலோசகர் திரு. துமிந்த ஹூலங்கமுவ மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் பற்றிய சனாதிபதிக்கான முதன்மை ஆலோசகர் முனைவர். ஹான்ஸ்  விஜயசூரிய, வட மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் ஏனைய மூத்த அரசாங்க மற்றும் இலங்கை மத்திய வங்கியின் அலுவலர்கள் ஆகியோருடன் சந்திப்புக்களை நடாத்தியது. பன்னாட்டு நாணய நிதியத்தின் குழு பாராளுமன்ற உறுப்பினர்கள், தனியார் துறைப் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அபிவிருத்திப் பங்காளர்கள்  போன்றோருடனும் சந்திப்பினை மேற்கொண்டது. 

“இவ்விஜயத்தின் போது மகத்தான ஒத்துழைப்பை வழங்கியமைக்கு அதிகாரிகளுக்கு நாம் நன்றி கூற விரும்புகின்றோம். ஏழாவது மீளாய்வை உரியகாலத்தில் நிறைவுசெய்வதற்கான வழியமைப்பதற்கு அண்மைய எதிர்காலத்தில் அலுவலர் மட்ட இணக்கப்பாட்டினை அடையும் இலக்குடன் கலந்துரையாடல் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான எமது கடமைப்பொறுப்பை நாம் மீள உறுதிப்படுத்துகின்றோம்.”

PDF

Published Date: 

Wednesday, September 23, 2026