கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2026 ஓகத்தில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் ஆகிய இரண்டிலும் விரிவடைதல்களினை எடுத்துகாட்டுகின்றன.
தயாரிப்பிற்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு) 2026 ஓகத்தில் 53.0 சுட்டெண் பெறுமதியொன்றினைப் பதிவுசெய்தது. இது முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் மெதுவான வேகமொன்றிலேனும் தயாரிப்பு நடவடிக்கைகளில் விரிவாக்கமொன்றினைக் குறித்துக்காட்டுகின்றது. தயாரிப்பிற்கானவை நீங்கலாக அனைத்துச் துணைச் சுட்டெண்களும் ஓகத்தில் நடுநிலையான அடிப்படை அளவிற்கு மேல் காணப்பட்டன.
புதிய கட்டளைகள் துணைச் சுட்டெண்ணானது ஓகத்தில் நடுநிலையான அடிப்படை அளவில் காணப்பட்டு, புதிய வியாபார நடவடிக்கைகளின் மட்டங்கள் பரந்தளவில் மாற்றமின்றிக் காணப்பட்டமையினைக் குறித்துக்காட்டியது. அதேவேளை, தயாரிப்புத் துணைச் சுட்டெண்ணில் மிதமடைதலானது புடவைகள் மற்றும் அணியும் ஆடை உற்பத்தித் துறையினால் தூண்டப்பட்டிருந்தது. தொழில்நிலை மற்றும் கொள்வனவுகள் அளவு இரண்டினதும் துணைச்சுட்டெண்கள் ஓகத்தில் அதிகரித்து, ஆண்டின் இறுதிப் பருவகால உற்பத்திக்கான தயாரிப்பில் தொடர்ச்சியான பணியமர்த்தல் மற்றும் கையிருப்புக்களின் படிப்படியான திரட்டுதல் பிரதிபலித்தன அதேவேளை, நிரம்பலர் விநியோக நேரம் துணைச்சுட்டெண் ஓகத்தில் மேலும் நீட்சியடைந்து, தொடர்ச்சியான நிரம்பல்சார் இடையூறுகளினைப் பிரதிபலித்தது.
தோற்றப்பாடானது அண்மைய கால சவால்களினால் மிதமடையச்செய்யப்பட்டுள்ள போதிலும், பிரதானமாக எதிர்பார்க்கப்படும் ஆண்டின் இறுதிப் பருவகால நடவடிக்கைகளின் மேல்நோக்கிய போக்கு காரணமாக சாதகமாகக் காணப்படுகின்றது.
பணிகளுக்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – பணிகள்), 2026 ஓகத்தில் 65.6 சுட்டெண் பெறுமதியைப் பதிவுசெய்து, முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் பணிகள் நடவடிக்கைகளில் துரிதமடைந்த விரிவாக்கமொன்றினை எடுத்துக்காட்டியது.
பல துறைகளில் அவதானிக்கப்பட்ட மேம்பாடுகளினால் ஆதரவளிக்கப்பட்டு, வியாபார நடவடிக்கையானது 2026 ஓகத்தில்; விரைவான வேகமொன்றில் வளர்ச்சியடைந்தது. போக்குவரத்து, மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் மற்றும் தொழில்சார் நிபுணத்துவப் பணிகள் துணைத் துறைகளில் ஏற்பட்ட வலுவான செயலாற்றத்தினால் இவ்வளர்ச்சி முதன்மையாக உந்தப்பட்ட வேளையில், நிதியியல் மற்றும் ஏனைய தனிப்பட்ட பணிகள் துணைத் துறைகளும் குறிப்பிடத்தக்களவு பங்களித்தன.
முதன்மையாக மொத்தவிற்பனை மற்றும் சில்லறை வர்த்தகம், நிதியியல் மற்றும் ஏனைய தனிப்பட்ட பணிகள் துணைத் துறைகளில் அவதானிக்கப்பட்ட விரிவாக்கங்களின் காரணமாக 2026 ஓகத்தில் புதிய வியாபாரங்கள் அதிகரித்தன. தொழில்சார் நிபுணத்துவப் பணிகள் துணைத் துறையும் இவ்வதிகரிப்புக்கு சாதகமாகப் பங்களித்தன.
புதிய ஆட்சேர்ப்புக்களினால் ஆதரவளிக்கப்பட்டு, தொழில்நிலை 2026 ஓகத்தில் அதிகரித்தது. அதேவேளை, நிலுவையிலுள்ள பணிகள் 2026 ஓகத்தில் வீழ்ச்சியடைந்து, முன்னைய மாதத்தில் பதிவுசெய்யப்பட்ட அதிகரிப்பினைத் திரும்பலடையச் செய்தது.
எதிர்பார்க்கப்படும் பொருளாதார மேம்பாடுகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகைகளில் எதிர்பார்க்கப்படும் வளர்ச்சி என்பவற்றினால் ஆதரவளிக்கப்பட்டு, 2026 ஓகத்தில் எதிர்வருகின்ற காலாண்டிற்கான பொருளாதார நடவடிக்கைகளின் எதிர்பார்க்கைகள் சாதகமாகக் தொடர்ந்தும் காணப்பட்டன. இருப்பினும், பரந்தளவிலான உலகளாவிய பொருளாதார நிச்சயமற்றதன்மைகள் தோற்றப்பாட்டிற்குக் கீழ்நோக்கிய இடர்நேர்வுகளினைத் தொடர்ந்தும் தோற்றுவித்தன.








