கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2026 யூலையில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிலும் விரிவடைதல்களை எடுத்துகாட்டுகின்றன.
தயாரிப்பிற்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு), 2026 யூலையில் 55.0 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, தயாரிப்பு நடவடிக்கைளில் தொடர்ச்சியான விரிவடைதலை எடுத்துக்காட்டுகின்றது. இம் முன்னேற்றத்திற்கு அனைத்து துணைச் சுட்டெண்களும் சாதகமாகப் பங்களித்திருந்தன.
புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்தித் துணைச் சுட்டெண்ணின் ஒட்டுமொத்த விரிவாக்கமானது உணவு மற்றும் குடிபான தயாரிப்புத் துறையினுள் ஏற்பட்ட வலுவான செயலாற்றத்தினால் முக்கியமாகத் தூண்டப்பட்டிருந்தது. தயாரிப்பு நடவடிக்கைகளுக்கான சாதகமான எதிர்பார்க்கைகளைப் பிரதிபலித்து, தொழில்நிலையும் கொள்வனவுகளின் இருப்பு துணைச்சுட்டெண்களும் யூலையில் விரிவடைந்து காணப்பட்டன. அதேவேளை, நிரம்பலர் விநியோக நேரம் மாதகாலப்பகுதியில் நீட்சியடைந்து காணப்பட்டு, தொடர்ச்சியான வழங்கல்-சங்கிலி அழுத்தங்களை சுட்டிக்காட்டியது.
உலகளாவிய நிச்சயமற்றதன்மைகளுக்கு மத்தியில் தயாரிப்புத் துறை அடுத்த மூன்று மாதங்கள் தொடர்பில் சாதகமான எண்ணப்பாங்குடன் காணப்பட்ட அதேவேளை எச்சரிக்கை மிக்கதாகவிருந்தது.
பணிகளுக்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – பணிகள்), 2026 யூலையில் 61.4 சுட்டெண் பெறுமதியைப் பதிவுசெய்து, முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் பணிகள் நடவடிக்கைகளில் துரிதமடைந்த விரிவாக்கமொன்றை எடுத்துக்காட்டுகின்றது.
பணிகள் துறைகள் முழுவதும் பரந்த அடிப்படையிலான மேம்படுதல்களால் ஆதரவளிக்கப்பட்டு, வியாபார நடவடிக்கைகள் 2026 யூலையில் விரிவடைந்தன. இவ்விரிவாக்கமானது போக்குவரத்து, நிதியியல் அத்துடன் தொழில்சார் பணிகள் துணைத் துறைகளால் முதன்மையாக தூண்டப்பட்ட அதேவேளை, ஏனைய தனிப்பட்ட பணிகள் துணைத் துறையும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியினைப் பதிவுசெய்தது.
போக்குவரத்து மற்றும் தொழில்சார் பணிகள் துணைக் துறைகளால் முதன்மையாக முன்னணி வகித்து, புதிய வியாபாரங்கள் 2026 யூலையில் விரிவடைந்தது. நிதியியல் மற்றும் ஏனைய தனிப்பட்ட பணிகள் துணைச் துறைகளும் இவ்விரிவடைதலுக்கு பங்களித்தன.
புதிய ஆட்சேர்ப்புக்களாலும் அலுவலர் பதவி விலகுவதில் மெதுவடைவொன்றினாலும் ஆதரவளிக்கப்பட்டு, தொழில்நிலை 2026 யூலையில் அதிகரித்தது.
எதிர்பார்க்கப்படும் பொருளாதார மேம்படுதல்கள் மற்றும் எதிர்வரும் கண்டி எசல பெரஹரவிற்கான சுற்றுலா பயணிகளின் வருகைகளில் வலுவான வளர்ச்சி என்பவற்றினால் தூண்டப்பட்டு, எதிர்வருகின்ற காலாண்டுக்கான வியாபார நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகள் 2026 யூலையில் மேலும் வலுவடைந்தன. எனினும், பரந்தளவிலான உலகளாவிய நிச்சயமற்றதன்மைகள் தோற்றப்பாட்டிற்கான கீழ்நோக்கிய இடர்நேர்வுகளை தொடர்ச்சியாக ஏற்படுத்துகின்றன.








