அண்மைய ஊடக நேர்காணலொன்றில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரினால் தெரிவிக்கப்பட்ட குறித்த சில கருத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, அதனைத்தொடர்ந்து பல அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களினால் தவறாக செய்தி வெளியிடப்பட்டுள்ளதனை இலங்கை மத்திய வங்கி அவதானித்துள்ளது.
2026 யூலையில் அண்மைய நாணயக் கொள்கை மீளாய்வில் ஆளுநரினால் குறிப்பிடப்பட்டவாறு, நிலவுகின்ற மற்றும் எதிர்பார்க்கப்படும் உலகளாவிய மற்றும் உள்நாட்டுப் பொருளாதார நிலைமைகளினைக் கருத்திற்கொண்டு, தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாடு பொருத்தமானதாயமையுமென மதிப்பிடப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி தெளிவுபடுத்துவதற்கு விரும்புகின்றது.
இலங்கை மத்திய வங்கியானது முன்னோக்கிய பார்வையிலமைந்த மற்றும் தரவுகளினால் உந்தப்பட்டதொரு முறையில் நாணயக் கொள்கையினை நடாத்துகின்றது. அதற்கமைய, கொள்கை வட்டி வீதங்களினை அதிகரித்தல், குறைத்தல் அல்லது பேணுதல் என்பன குறித்த தீர்மானமானது அண்மையில் கிடைப்பனவாகவுள்ள பொருளாதாரத் தரவுகள், எதிர்வுகூறல்கள் மற்றும் இடர்நேர்வு மதிப்பீடுகள் ஆகியவற்றினைக் கருத்திற்கொண்டே ஒவ்வொரு நாணயக் கொள்கை மீளாய்விலும் மேற்கொள்ளப்படுகின்றது.
ஆளுநரின் கருத்துக்கள் இந்நிறுவப்பட்ட கொள்கைக் கட்டமைப்பினை விளக்குவதனை நோக்காகக் கொண்டவையாகும். கொள்கை வட்டி வீதங்களின் எதிர்காலப் பாதை அல்லது மட்டம் என்பவற்றைப்; பற்றிய எந்தவொரு உறுதியளிப்பினையோ அல்லது சுட்டிக்காட்டலினையோ அவை பொருள்கொள்ளவில்லை.
காணொளி இணைப்பு: https://youtu.be/Y5wsAgiBlWI








