நாணயக் கொள்கைச் சபையானது நேற்று இடம்பெற்ற அதன் கூட்டத்தில், ஓரிரவு கொள்கை வீதத்தினை 8.75 சதவீதம் கொண்ட அதன் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய பக்கங்கள் ஆகிய இரண்டிலும் பரிணமிக்கின்ற நிலைமைகள் மற்றும் தோற்றப்பாடு என்பவற்றினைக் கவனமாகக் கருத்திற்கொண்டதன் பின்னர் சபை இத்தீர்மானத்தை மேற்கொண்டது.
மத்திய கிழக்கில் மீண்டும் ஏற்பட்டுள்ள பதற்றங்கள் உலகளாவிய பண்ட விலைகளில் குறிப்பாக, பெற்றோலிய விலைகளின் உயர்விற்கு வழிவகுத்துள்ளது. இப்போக்குகள் உலகளாவிய பொருளாதார எதிர்பார்ப்புக்களை மந்தமடையச் செய்து பல்வகை வழிகளிÇடாக உள்நாட்டுப் பொருளாதாரத்திற்குச் சாத்தியமான கசிவுத்தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.
முதன்மைப் பணவீக்கமானது பிரதானமாக, உயர்வான உள்நாட்டு வலு மற்றும் உணவு விலைகள் காரணமாக 2026 யூனில் 6.8 சதவீதத்§ற்கு (ஆண்டிற்கு ஆண்டு) உயர்வடைந்துள்ளது. முதன்மைப் பணவீக்கம், இலக்குமட்டத்திற்குப் படிப்படியாகத் திரும்பலடைவதற்கு முன்னர், அண்மைக்காலத்தில் 5 சதவீதம் கொண்ட இலக்கிற்கு மேல் காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. மையப் பணவீக்கமும் அதிகரித்து, முதன்மைப் பணவீக்க இலக்கை அண்மித்துக் காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அடையப்பட்ட பணவீக்கத்தில் அண்மைக்கால சிறிய உயர்விற்கு மத்தியில், நடுத்தரகால பணவீக்க எதிர்பார்க்கைகள் பணவீக்க இலக்கினை அண்மித்து நன்கு நிலைநிறுத்தப்பட்டுக் காணப்படுகின்றன. முதன்மைப் பணவீக்கத்தின் அதிகரிப்பு பெருமளவில் நிரம்பலினால் தூண்டப்பட்டிருந்த போதிலும் பொருளாதாரத்தின் கேள்வி நிலைமைகளும் வலுவடைந்துள்ளன. எவ்வாறாயினும், அரசாங்கம் மற்றும் மத்திய வங்கி என்பவற்றால் மேற்கொள்ளப்பட்ட ஏனைய கொள்கை வழிமுறைகளுடன் இணைந்து 2026 மேயில் மேற்கொள்ளப்பட்ட நாணயக் கொள்கை இறுக்கமாக்கலும் உண்மைப் பொருளாதாரத்திற்கான அதன் படிப்படியான ஊடுகடத்தலும் முன்னோக்கிச் செல்கையில் கொடுகடன் வளர்ச்சி மற்றும் கேள்வி அழுத்த அதிகரிப்புக்களை மிதப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய கிழக்கு மோதல்களினால் ஏற்பட்ட வெளிநாட்டுத் துறை மீதான அழுத்தம் ஓரளவு தளர்வடைந்துள்ள போதிலும் மீண்டும் ஏற்பட்டுள்ள பதற்றங்கள் காரணமாக தோற்றப்பாடு நிச்சயமற்றதாகக் காணப்படுகின்றது. 2026 ஏப்பிறல் தொடக்கம் வெளிநாட்டு நடைமுறைக் கணக்கானது பற்றாக்குறையொன்றைப் பதிவுசெய்தமைக்கு, உயர்வான எரிபொருள் இறக்குமதிச் செலவுகள் வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையினை விரிவுபடுத்தியமையும் சுற்றுலா வருவாய்கள் குறைவடைந்தமையும் காரணமாக அமைந்தன. முன்னோக்கி நோக்குகையில் அண்மைய கொள்கை வழிமுறைகளுக்கு எதிர்வினையாற்றி மோட்டார் வாகனங்களுக்கான கேள்வி உள்ளடங்கலாக இறக்குமதிக் கேள்வி குறைவடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை, தொழிலாளர் பணவனுப்பல்கள் 2026இன் இதுவரையிலும் வலுவாகக் காணப்படுகின்றன. வெளிநாட்டு படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகளுக்கு மத்தியில், மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2026 யூன் இறுதியில் ஐ.அ.டொலர் 6.45 பில்லியனாக இருந்தன. இதுவரையிலும் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற கொள்கை வழிமுறைகளின் தாக்கத்தினைப் பிரதிபலித்து இலங்கை ரூபாய் அண்மைய வாரங்களில் ஓரளவு உறுதியடைந்துள்ளது.
தோற்றம்பெற்றுவருகின்ற இடர்நேர்வுகள் தொடர்பில் மத்திய வங்கி உள்நாட்டு மற்றும் உலகளாவிய அபிவிருத்திகளை தொடர்ந்தும் உன்னிப்பாகக் கண்காணிக்கும். முன்னர் மேற்கொள்ளப்பட்ட நாணயக் கொள்கை இறுக்கமாக்கல் எதிர்வரும் காலப்பகுதியில் பொருளாதாரத்திற்கு ஊடுகடத்தப்படுமென மத்திய வங்கி எதிர்பார்க்கின்றது. மத்திய வங்கியானது பணவீக்கம் 5 சதவீத இலக்கை அண்மித்து நிலையுறுதியடைவதை நிச்சயப்படுத்துவதற்குப் பொருத்தமான வழிமுறைகளை மேற்கொள்கின்ற அதேவேளை, பொருளாதாரம் நடுத்தரகாலத்தில் அதன் உள்ளார்ந்த ஆற்றலை அடைவதற்கு ஆதரவளிப்பதற்கு தயார்நிலையிலுள்ளது.
நாணயக் கொள்கை மீளாய்வு பற்றிய அடுத்த கிரமமான அறிக்கை வெளியீடு 2026 செத்தெம்பர் 30ஆம் நாளன்று நடைபெறும்.








