இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2026 மே

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2026 மேயில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கை இரண்டிலும் மேம்படுதல்களை எடுத்துக்காட்டுகின்றன.

தயாரிப்பிற்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு), 2026 மேயில் 56.6 சுட்டெண் பெறுமதியைப் பதிவுசெய்து, 2026 ஏப்பிறலுடன் ஒப்பிடுகையில் தயாரிப்பு நடவடிக்கைகளில் விரிவடைதலை எடுத்துக்காட்டுகின்றது. அனைத்து துணைச் சுட்டெண் பெறுமதிகளும் மாதகாலப்பகுதியில் நடுநிலையான அடிப்படை அளவிற்கு மேல் பதிவாகி, சுட்டெண் பெறுமதியில் ஒட்டுமொத்த அதிகரிப்பிற்குப் பங்களித்தன. எனினும், மத்திய கிழக்கு மோதலுடன் இணைந்த சவால்மிக்க தொழிற்படுகின்ற சூழல் பற்றி பதிலிறுப்பாளர்கள் தொடர்ந்தும் எடுத்துக்காட்டினர்.

புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்தி துணைச் சுட்டெண்களில் அதிகரிப்புக்கள் பிரதானமாக உணவு மற்றும் குடிபானங்கள் அத்துடன் புடவைகள் தயாரிப்பு மற்றும் அணியும் ஆடைகள் தயாரிப்புத் துறைகளால் தூண்டப்பட்டிருந்தது. உற்பத்தி நடவடிக்கைகளில் அதிகரிப்பிற்கு முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் மேயில் நிலவிய உயர்வான பணி நாட்களின் எண்ணிக்கை பிரதானமாகத் துணையளித்தன. மேலும், கொள்வனவுகளின் இருப்பானது புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்தியில் அதிகரிப்பிற்கு இசைவாக மாதகாலப்பகுதியில்  அதிகரித்தன. அதேவேளை, நிரம்பலர் விநியோக நேரம் மேயில் நீட்சியடைந்து காணப்பட்டது. 

அடுத்துவரும் மூன்று மாதங்களுக்கான தயாரிப்பு நடவடிக்கைகளுக்கான எதிர்பார்க்கைகள் நடுநிலையான அடிப்படை அளவிற்கு மேல் காணப்பட்ட அதேவேளை, மத்திய கிழக்கு மோதலுடன் இணைந்த இடர்நேர்வுகள் வியாபார எண்ணப்பாங்குகள் மீது தொடர்ந்தும் தாக்கம் செலுத்துகின்றன.

பணிகளுக்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – பணிகள்), 2026 மேயில் 56.9 சுட்டெண் பெறுமதியைப் பதிவுசெய்து, முன்னயை மாதத்துடன் ஒப்பிடுகையில் பணிகள் நடவடிக்கைகளில் விரிவடைதலை எடுத்துக்காட்டுகின்றது. 

பணிகள் துறையில் வியாபார நடவடிக்கை முன்னைய மாதத்தின் வீழ்ச்சியின் பின்னர் 2026 மேயில் மீளத்திரும்பியது. இவ்விரிவடைதல் நிதியியல், தொழில்சார் மற்றும் ஏனைய தனிப்பட்ட பணிகள் துணைத் துறைகளினால் முதன்மையாகத் தூண்டப்பட்டிருந்த அதேவேளை, உண்மைச் சொத்து, தகவல் தொழில்நுட்ப செய்நிரலாக்கம் மற்றும் பொருட்கள் போக்குவரத்து என்பனவும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவுசெய்தன

2026 மேயில் அதிகரித்த புதிய வியாபாரங்களுக்கு நிதியியல் மற்றும் தொழில்சார் பணிகள் துறைகளில் வளர்ச்சி முதன்மையாகத் தூண்டுதலளித்தன. மொத்த வியாபாரம் மற்றும் சில்லறை வர்த்தகம், ஏனைய தனிப்பட்ட பணிகள் அத்துடன் பொருட்கள் போக்குவரத்துத் துறைகளும் இவ்வதிகரிப்பிற்குப் பங்களித்தன.

ஒப்பந்தங்கள் காலாவதியடைதல்கள், ஓய்வுபெறுதல்கள் மற்றும் பதவிவிலகுதல்கள் காரணமாக 2026 மேயில் தொழில்நிலை வீழ்ச்சியடைந்தது. அதேவேளை நிலுவையிலுள்ள பணிகள் முன்னைய மாதத்தை விட விரைவான வீதத்தில் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்தன.

அடுத்த காலாண்டிற்கான வியாபார நடவடிக்கைகளுக்கான எதிர்பார்க்கைகள் பெரஹரா பருவகாலத்திற்கான சுற்றுலாப் பயணி வருகைகளில் எதிர்பார்க்கப்பட்ட அதிகரிப்பு மற்றும் மேம்பட்ட பொருளாதார நிலைமைகள் என்பன மூலம்  துணையளிக்கப்பட்டு சாதகமாகவிருந்தன. எவ்வாறிருப்பினும், பரந்தளவான உலகளாவிய நிச்சயமின்மைகள் இவ்வெறிவுசெய்யப்பட்ட வளர்ச்சிக்கு தொடர்ந்தும் இடர்நேர்வுகளைத் தோற்றுவிக்கின்றன.

PDF

 

Published Date: 

Monday, June 15, 2026