மத்திய கிழக்கு யுத்தத்தின் தாக்கமானது 2026 ஏப்பிறலில் வெளிநாட்டுத் துறைச் செயலாற்றத்திலும் பிரதிபலித்தது. வெளிநாட்டு நடைமுறைக் கணக்கானது 2026 சனவரியிலிருந்து மாச்சு வரையான காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட மிகையுடன் ஒப்பிடுகையில் 2026 ஏப்பிறலில் பற்றாக்குறையொன்றினைப் பதிவுசெய்தது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், தொழிலாளர் பணவனுப்பல்களில் அதிகரிப்பொன்று பதிவுசெய்யப்பட்ட போதிலும் விரிவடைந்த வர்த்தகப் பற்றாக்குறை, பணிகள் மிகையிலானதொரு மிதமடைதல் மற்றும் உயர்ந்தளவிலான முதலாந்தர வருமானப் பற்றாக்குறை ஆகியவற்றினால் இது முக்கியமாக உந்தப்பட்டுக் காணப்பட்டது. இதன் விளைவாக, வெளிநாட்டு நடைமுறைக் கணக்கு 2026 சனவரி தொடக்கம் ஏப்பிறல் வரையான காலப்பகுதியில் சிறியளவிலான பற்றாக்குறையொன்றினைப் பதிவுசெய்தது.
வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2026 ஏப்பிறலில் விரிவடைந்து, ஏற்றுமதிகளுடன் ஒப்பிடுகையில் இறக்குமதிகளில் ஏற்பட்ட வலுவான வளர்ச்சியினைப் பிரதிபலித்தது. மேலும், 2026 சனவரி தொடக்கம் ஏப்பிறல் வரையான காலப்பகுதியில் வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2025இன் தொடர்புடைய காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 2.3 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ஐ.அ.டொலர் 3.7 பில்லியன் தொகைக்கு விரிவடைந்தது.
மத்திய கிழக்கில் இடம்பெற்றுவருகின்ற மோதல் மற்றும் உயர்ந்தளவிலான இறக்குமதி அளவுகள் என்பவற்றிற்கு மத்தியில் உலகளாவிய சந்தைகளில் எரிபொருள் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பினால் உந்தப்பட்டு, எரிபொருள் இறக்குமதிகள் மீதான செலவினமானது 2026 ஏப்பிறலில் ஐ.அ.டொலர் 886 மில்லியனிற்கு ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையொன்றில் 149.9 சதவீதத்தினால் குறிப்பிடத்தக்களவு அதிகரித்தது.
தனியாள் மற்றும் வர்த்தக நோக்குடைய வாகனங்கள் ஆகிய இரண்டும் உள்ளடங்கலாக வாகன இறக்குமதிகள் மீதான செலவினம் 2026 ஏப்பிறலில் ஐ.அ.டொலர் 208 மில்லியனாக விளங்கி, 2026 சனவரி தொடக்கம் ஏப்பிறல் வரையான காலப்பகுதியில் மொத்த வாகன இறக்குமதிகளை ஐ.அ.டொலர் 821 மில்லியனிற்குக் கொண்டுசென்றுள்ளது.
இறக்குமதி விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பானது ஏற்றுமதி விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பினை விஞ்சிக் காணப்பட்டமையினால் வர்த்தக மாற்று விகிதமானது 2026 ஏப்பிறலில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையொன்றில் தேய்வடைந்து காணப்பட்டது. அதேவேளை, வர்த்தக மாற்று விகிதம் முன்னைய ஆண்டின் சனவரி தொடக்கம் ஏப்பிறல் வரையான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2026இன் தொடர்புடைய காலப்பகுதியில் தேய்வடைந்து காணப்பட்டது.
சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய்களில் ஏற்பட்ட குறைவின் முதன்மைக் காரணமாக பணிகள் கணக்கில் ஏற்பட்ட மிகையானது 2026 ஏப்பிறலில் ஐ.அ.டொலர் 229 மில்லியனிற்கு 37.8 சதவீதத்தினால் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையொன்றில் வீழ்ச்சியடைந்தது. ஒன்றுசேர்ந்த மிகையும் 2025இன் சனவரி தொடக்கம் ஏப்பிறல் வரையான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2026இன் தொடர்புடைய காலப்பகுதியில் 24.3 சதவீதத்தினால் சுருக்கமடைந்தது.
மத்திய கிழக்கில் நிலவுகின்ற மோதலின் தாக்கத்தின் காரணமாக, சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாக 2026 ஏப்பிறலில் 135,643இற்கு வீழ்ச்சியடைந்து, 22.3 சதவீதம் கொண்ட ஆண்டிற்கு ஆண்டு சுருக்கமொன்றினைப் பதிவுசெய்தது. சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய்கள் 2026 ஏப்பிறலில் ஐ.அ.டொலர் 157 மில்லியன் தொகையாக மதிப்பிடப்பட்டமையானது 38.8 சதவீத ஆண்டிற்கு ஆண்டு வீழ்ச்சியொன்றினைப் பிரதிபலித்ததுடன் 2026இன் முதலாவது நான்கு மாத காலப்பகுதியிலான ஒன்றுசேர்ந்த வருவாய்கள் முன்னைய ஆண்டின் தொடர்புடைய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் ஐ.அ.டொலர் 1,111 மில்லியன் தொகையாக விளங்கி, 19.4 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தன.
2026 ஏப்பிறலில் ஐ.அ.டொலர் 768 மில்லியனாக விளங்கிய தொழிலாளர் பணவனுப்பல்கள் அண்மைய மாதங்களில் பதிவுசெய்யப்பட்ட நேர்க்கணிய உத்வேகத்தினைத் தொடர்ந்தும் நிலைபெறச்செய்தன. ஒட்டுமொத்த அடிப்படையொன்றில், ஆண்டின் முதலாவது நான்கு மாத காலப்பகுதியில் தொழிலாளர் பணவனுப்பல்கள் ஐ.அ.டொலர் 3,063 மில்லியனிற்கு 24.5 சதவீத ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்தன.
அரச பிணையங்கள் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் ஐ.அ.டொலர் 2 மில்லியன் தொகையிலான சிறியளவிலான தேறிய உட்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்த வேளையில், முதலாந்தர மற்றும் இரண்டாந்தரச் சந்தைக் கொடுக்கல்வாங்கல்கள் ஆகிய இரண்டும் உள்ளடங்கலாக கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் 2026 ஏப்பிறல் மாத காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 16 மில்லியன் தொகையிலான தேறிய வெளிப்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்தன.
கணிசமானளவிலான வெளிநாட்டுப் படுகடன் பணிக் கொடுப்பனவுகள் மற்றும் மத்திய வங்கியின் மூலம் மேற்கொள்ளப்பட்ட தேறிய வெளிநாட்டுச் செலாவணி விற்பனைகள் என்பவற்றிற்கு மத்தியில் சீன மக்கள் வங்கியுடனான பரஸ்பர பரிமாற்றல் வசதி உள்ளடங்கலாக மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2026 ஏப்பிறல் இறுதியளவில் ஏறத்தாழ ஐ.அ.டொலர் 6.8 பில்லியனாகக் காணப்பட்டன.
2026 பெப்புருவரி மாத பிற்பகுதியிலிருந்து மத்திய கிழக்கு மோதலின் தீவிரப்படுத்தலின் மூலமான தாக்கங்களினைத் தொடர்ந்து ஏற்பட்ட உயர்வடைந்த வெளிநாட்டுத் துறை அழுத்தங்களினைப் பிரதிபலிக்கின்ற விதத்தில் 2026 மே இறுதியிலுள்ளவாறு, ஐ.அ.டொலரிற்கெதிராக இலங்கை ரூபாவானது ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையொன்றில் 5.4 சதவீதத்தினால் தேய்வடைந்து காணப்பட்டது. ஏனைய நட்பு நாடுகளின் பொருளாதாரங்களில் பதிவுசெய்யப்பட்ட நாணயப் பெறுமதித்தேய்மானப் போக்குடன் இசைந்து செல்லும் விதத்தில் இப்பெறுமதித்தேய்வானது காணப்படுகின்றது.
அதேவேளை, இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் இணைந்த ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளினைப் பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையானது 2026 மே 27 அன்று நிறைவுசெய்து, பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களிற்கு ஆதரவளிக்கும் பொருட்டு சிஎஉ 508 மில்லியன் தொகைக்கான (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 695 மில்லியன்) உடனடி அணுகலினை இலங்கைக்கு வழங்கியது.








