இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குமுறைப்படுத்தப்படும் நிதியியல் பணி வழங்குநர்களுடன் தொடர்புடைய நிதியியல் வாடிக்கையாளர்கள் தமது முறைப்பாடுகளையும் குறைப்பாடுகளையும் சமர்ப்பித்தலினை வசதிப்படுத்துவதற்கான முக்கியமான படிமுறையொன்றை ஏற்படுத்தி, இலங்கை மத்திய வங்கி இணையவழி முறைப்பாட்டு முகாமைத்துவ முறைமையினை அங்குரார்ப்பணம் செய்கின்றது.
இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பினுள் முறைப்பாடு கையாளும் செயன்முறையில் பொறுப்புகூறல், வினைத்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை என்பவற்றை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு இணையவழி முறைப்பாட்டு முகாமைத்துவ முறைமையானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இம்முறைமையானது நிதியியல் வாடிக்கையாளர்கள் முறைப்பாடுகள் மற்றும் குறைப்பாடுகளினை நன்கு கட்டமைக்கப்பட்ட மற்றும் நியமமான படிவத்தில் சமர்ப்பிப்பதை இயலச்செய்து, காத்திரமான ஒழுங்குமுறைப்படுத்தல் மேற்பார்;வைக்கும் உரிய காலத்தில் தீர்வினைப் பெற்றுக்கொள்ளுவதற்கும் துணைபுரிகின்றது.
இத்தளமானது அச்சிடப்பட்ட ஆவணங்களில் தங்கியிருத்தலையும் செயற்பாட்டு தாமதங்களையும் குறைப்பதன் மூலம் முறைப்பாட்டு முகாமைத்துவ முறைமையினை நெறிப்படுத்துகின்றது. இதனை நிதியியல் வாடிக்கையாளர்கள் முறைப்பாடுகளை தமது வசதிக்கேற்ப சமர்ப்பிப்பதற்கு வாரத்தின் 7 நாட்களும் 24 மணிநேரமும் இதனை அணுகலாம். இதற்கு மேலதிகமாக, பயனர்கள் தமது முறைப்பாடுகளின் நிலை மற்றும் முன்னேற்றம் பற்றி கண்காணிப்பதற்கு முடியும் என்பதோடு, இது தீர்வுகாணும் செயன்முறை முழுவதும் அதிக வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்கிறது.
நிதியியல் வாடிக்கையாளர்கள் முதற்கட்டத்தில், தமது முறைப்பாடுகள் அல்லது குறைப்பாடுகளை சம்பந்தப்பட்ட நிதியியல் பணி வழங்குநரிடமே நேரடியாகச் சமர்ப்பிக்குமாறு வேண்டப்படுகின்றார்கள். அத்தகைய விடயங்கள் தீர்க்கப்படாமல் இருக்கும்போது அல்லது நிதியியல் பணி வழங்குநரினால் வழங்கப்பட்ட பதில் திருப்தியற்றதாக இருக்கும்போது மாத்திரமே இணையவழி முறைப்பாட்டு முகாமைத்துவ முறைமை ஊடாக இலங்கை மத்திய வங்கிக்கு முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்படலாம்.
வினைத்திறனான செயன்முறைப்படுத்தலுக்கு வசதியளிக்கும் பொருட்டு, அனைத்து சமர்ப்பித்தல்களும் தெளிவானதாகவும், துல்லியமானதாகவும், முழுமையானதாகவும் இருப்பதை உறுதிசெய்வதுடன் அனைத்துத் தொடர்புடைய துணை ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளதையும் உறுதிசெய்யுமாறு பயனர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
இந்த இணையவழி முறைப்பாட்டு முகாமைத்துவ முறைமையினை https://reachus.cbsl.lk/ என்ற இணையத்தளத்தினூடாக அணுகி முறைப்பாடுகள் சமர்ப்பிக்கும் நடைமுறைகள் குறித்த விரிவான வழிகாட்டல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.








