2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் பிரிவு 80இற்கமைவான வெளியீடான 2025ஆம் ஆண்டிற்கான பொருளாதார மீளாய்வானது சனாதிபதியும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான மாண்புமிகு அநுர குமார திஸாநாயக்க அவர்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் பி நந்தலால் வீரசிங்க அவர்களினால் இன்று (2026 ஏப்பிறல் 20) கையளிக்கப்பட்டது.
2025ஆம் ஆண்டிற்கான பொருளாதார மீளாய்வின் முக்கிய எடுத்துக்காட்டுகள் கீழே வழங்கப்பட்டுள்ளன:
நீடித்து நிலைபெறத்தக்க பேரண்டப்பொருளாதார உறுதிப்பாடு மற்றும் கொள்கை மற்றும் கட்டமைப்பு சார்ந்த சீர்திருத்தங்களின் தொடர்ச்சியான நடைமுறைப்படுத்தல் என்பவற்றினால் துணையளிக்கப்பட்டு, 2025இல் இலங்கைப் பொருளாதாரமானது முன்னைய ஆண்டுகளில் அடையப்பட்ட மீட்சியினைத் தொடர்ந்து கட்டியெழுப்பியது. குறிப்பாக, வர்த்தகம் மற்றும் புவிசார் அரசியல் அபிவிருத்திகளுடன் தொடர்புடைய உயர்வடைந்த உலகளாவிய நிச்சயமற்றதன்மைகள் மற்றும் 2025இன் பிற்பகுதியில் ஏற்பட்ட பாதகமான வானிலை நிலைமைகள் மற்றும் பேரழிவுமிக்க இயற்கை அனர்த்தங்களின் தாக்கம் என்பன காணப்பட்ட போதிலும், உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்ந்தும் தாக்குப்பிடிக்குந்தன்மையினைக் கொண்டிருந்தன. மேம்பட்ட பேரண்டப்பொருளாதார நிலைமைகள் மற்றும் தொடர்ச்சியான கொள்கை ஒத்திசைவாந்தன்மை என்பன ஒட்டுமொத்த முதலீட்டாளர் நம்பிக்கையினை வலுப்படுத்தி, நீடித்து நிலைபெறத்தக்க பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுத்த வேளையில், காலநிலை அதிர்வுகளினை மிகவும் செயற்றிறன்மிக்க விதத்தில் எதிர்கொள்வதற்குத் தாங்கியிருப்புக்களினைக் கட்டியெழுப்பும் பொருட்டு பொருளாதாரத்தின் இயலுமையினை மேம்படுத்தியது.
உண்மை மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது 5 சதவீதமென மதிப்பிடப்பட்டதுடன் பொருளாதார நடவடிக்கையானது 2025இல் தொடர்ந்தும் வலுவாகக் காணப்பட்டு, தொடர்ச்சியாக இரண்டு ஆண்டு கால விரிவாக்கமொன்றினைக் குறித்துக்காட்டியது. மீட்சியுடன் இணைந்து தொழிலாளர் சந்தை நிலைமைகள் மேம்பட்டதுடன் கேள்வியானது தொடர்ந்தும் உறுதியாகக் காணப்பட்டதுடன் தளர்வடைகின்ற வலுவுடன் தொடர்புடைய விலை வீழ்ச்சிகள் மற்றும் உயர்ந்தளவிலான உணவு விலைகள் என்பவற்றினால் பாரியளவில் உந்தப்பட்டு பணவீக்கமானது பணச்சுருக்கக் காலப்பகுதியொன்றினைத் தொடர்ந்து 2025 ஓகத்திலிருந்து நேர்க்கணியமாகத் திரும்பலடைந்தது. தளர்த்தப்பட்ட நாணய நிலைமைகளினைப் பிரதிபலிக்கின்ற தாழ்ந்தளவிலான வட்டி வீதங்கள் தனியார் துறைக்கான கொடுகடனில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க விரிவாக்கமொன்றிற்கு வழிவகுத்தன. வாகன இறக்குமதிகள் மீதான கட்டுப்பாடுகளின் நீக்கமானது ஆண்டுக் காலப்பகுதியில் உயர்ந்தளவிலான இறக்குமதிகள் மற்றும் கொடுகடன் கேள்விகளிற்குப் பங்களித்தது. விரிவடைகின்ற வர்த்தகப் பற்றாக்குறையொன்றிற்கு மத்தியில் குறிப்பாக, மேம்பட்ட பணிகள் ஏற்றுமதிகளுடன் இணைந்து வரலாற்று ரீதியில் உயர்ந்தளவு மட்டங்களிலான தொழிலாளர் பணவனுப்பல்களினால் ஆதரவளிக்கப்பட்டு, தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக மிகையொன்றினைப் பதிவுசெய்த நடைமுறைக் கணக்குடன் வெளிநாட்டுத் துறைச் செயலாற்றமானது மேலும் வலுவடைந்தது. வெளிநாட்டுப் படுகடன் பணிக் கொடுப்பனவுகளிற்கு மத்தியில், இவ்வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்கள் ஒதுக்குகளின் தொடர்ச்சியான கட்டியெழுப்பலினை இயலச்செய்த வேளையில் இலங்கை ரூபாவானது நெகிழ்ச்சித்தன்மைவாய்ந்த செலாவணி வீத வீச்சின் கீழ் மிதமான பெறுமதித்தேய்வொன்றினைப் பதிவுசெய்தது. பாதிக்கப்படக்கூடிய குழுக்களிற்கு ஆதரவளிக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான முயற்சிகளுடன் இணைந்து, அரசிறையின் அடிப்படையிலமைந்த இறைத் திரட்சி வழிமுறைகளினால் துணைபுரியப்பட்டு, தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக மிகையொன்றினைப் பதிவுசெய்த முதலாந்தர நிலுவையுடன் இறைச் செயலாற்றமானது தொடர்ந்தும் வலுவடைந்து காணப்பட்டது. வலுவடைந்த பேரண்டப்பொருளாதார நிலைமைகளிற்கு மத்தியில் நிதியியல் துறைச் செயலாற்றமும் மேம்பட்டது. வலுவான கொடுகடன் விரிவாக்கத்தினால் பாரியளவில் ஆதரவளிக்கப்பட்டு, சொத்துத் தரத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுடன் இணைந்து, வங்கிகள் மற்றும் வங்கியல்லாத நிதியியல் நிறுவனங்கள் ஆகிய இரண்டினதும் இலாபத்தன்மையானது 2025இல் மேம்பட்டது. வங்கிகள் மற்றும் நிதிக் கம்பனிகளின் திரவத்தன்மை மற்றும் மூலதனத் தாங்கியிருப்புக்கள் ஒழுங்குமுறைப்படுத்தல் சார்ந்த குறைந்தபட்ச தேவைப்பாடுகளிலும் பார்க்க நன்கு மேலாகத் தொடர்ந்தும் காணப்பட்டமையானது நிதியியல் துறையின் வலுவடைந்த தாக்குப்பிடிக்குந்தன்மையினைப் பிரதிபலித்தது.
மேம்பட்ட பேரண்டப்பொருளாதார நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு, 2025இல் மத்திய வங்கியின் கொள்கைக் கவனம்செலுத்துதலானது விலை உறுதிப்பாடு மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினைப் பேணுதலுடன் தொடர்புடையதாயமைந்தது. மெதுவடைந்த பணவீக்கம் மற்றும் உயர்ந்தளவிலான உலகளாவிய நிச்சயமற்றதன்மையினைக் கொண்ட சூழலொன்றில் நாணயக் கொள்கையானது தளர்த்தப்பட்ட போக்கொன்றில் பேணப்பட்டது. இது குறைந்தளவிலான வட்டி வீதங்களினை நிலைபெறச் செய்வதற்குத் துணைபுரிந்ததுடன் கொடுகடன் விரிவாக்கத்திற்கு ஆதரவளித்தது. வெளிநாட்டுச் செலாவணிக் கொள்வனவுகளின் ஊடாக வெளிநாட்டு ஒதுக்குகளினைக் கட்டியெழுப்புவதற்குத் திட்டமிடப்பட்ட விதத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதுடன் அதன்மூலம், தாங்கியிருப்புக்கள் வலுவடைந்ததுடன் வெளிநாட்டுத் துறைத் தாக்குப்பிடிக்குந்தன்மையானது மேம்படுத்தப்பட்டது. மேலும், மேம்பட்ட வெளிநாட்டுத் துறைச் செயலாற்றமானது மூலதனப் பாய்ச்சல் முகாமைத்துவ வழிமுறைகளினைப் படிப்படியாகத் தளர்த்துவதனையும் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளின் முழுமையான நீக்கத்தினையும் அனுமதித்தது. 2025இல், வளர்ச்சியடைந்து வருகின்ற பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான இயக்கவாற்றல்களிற்கு அமைய நிதியியல் முறைமையினைச் சீரமைக்கின்ற வேளையில் முறைமை உறுதிப்பாட்டினை நிச்சயப்படுத்துவதற்கு ஒழுங்குமுறைப்படுத்தல், மேற்பார்வை மற்றும் நிதியியல் முறைமை அபிவிருத்தி சார்ந்த முயற்சிகளின் அனைத்தையுமுள்ளடக்கிய தொகுதியொன்றினை மத்திய வங்கி முன்னெடுத்தது. மேம்படுத்தப்பட்ட பேரண்ட முன்மதியுடைய வழிமுறைகள் மற்றும் வலுவடைந்த மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்புக்கள் என்பன ஊடாக நிதியியல் முறைமைத் தாக்குப்பிடிக்குந்தன்மையானது மேலும் வலுப்படுத்தப்பட்டது. மீட்புத் திட்டமிடல் தேவைப்பாடுகளின் அறிமுகம் மற்றும் தீர்மானம் மற்றும் வைப்புக் காப்புறுதிக் கட்டமைப்பிற்கு மேற்கொள்ளப்பட்ட மேம்பாடுகள் என்பன ஊடாக நெருக்கடிசார் தயார்படுத்தலிற்கான முயற்சிகள் மேம்படுத்தப்பட்டன. டிஜிட்டல் கொடுப்பனவுகளின் ஊக்குவிப்பு, மேம்படுத்தப்பட்ட இணையப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான இடர்நேர்வு முகாமைத்துவம் என்பவற்றுடன் நிதியியல் முறைமை நவீனமயப்படுத்தல் சார்ந்த முயற்சிகள் மேலும் முன்னேற்றமடைந்தன. சட்டவாக்கச் சீர்திருத்தங்களினால் ஆதரவளிக்கப்பட்டு, பணம் தூயதாக்கலிற்கெதிரான, பயங்கரவாதி நிதியளித்தலை ஒழித்தல் மற்றும் பேரழிவுமிக்க ஆயுதப் பெருக்கத்திற்கு நிதியளித்தலினை ஒழித்தல் ஆகியவற்றில் தொடர்ச்சியான முன்னேற்றம் காணப்பட்டது. அதேவேளை, 2025 இறுதியளவில் பொதுப் படுகடன் முகாமைத்துவ அலுவலகத்திற்குப் பொதுப் படுகடன் முகாமைத்துவப் பணிகளின் சீரான மாற்றலினை மத்திய வங்கி வசதிப்படுத்தியது.
அதிகாரிகளினால் நடைமுறைப்படுத்தப்பட்ட உறுதிப்பாட்டிற்கு உகந்த கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் என்பன இலங்கை தாங்கியிருப்புக்களினைக் கட்டியெழுப்புவதற்கும் உறுதியான பேரண்டப்பொருளாதார அடித்தளமொன்றினைப் பேணுவதற்கும் துணைபுரிந்துள்ளன. இருப்பினும், புவிசார் அரசியல் பதற்றங்கள், வர்த்தகத்திற்கான இடையூறுகள் மற்றும் காலநிலையுடன் தொடர்புடைய இடர்நேர்வுகள் என்பன உள்ளடங்கலாக தொடர்ச்சியாக உயர்வடைந்த உலகளாவிய நிச்சயமற்றதன்மைகள் பொருளாதாரத் தோற்றப்பாட்டிற்குத் தொடர்ச்சியான சவால்களினை ஏற்படுத்துவதுடன், இத்தோற்றப்பாடானது மத்திய கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற யுத்தத்தின் கால அளவு மற்றும் தீவிரத்தன்மை அத்துடன் உலகளாவிய வலுச் சந்தைகள், வர்த்தகப் பாய்ச்சல்கள் மற்றும் நிதியியல் நிலைமைகள் ஆகியவற்றிற்கான அதன் சாத்தியமான கசிவுத்தாக்கங்கள் என்பவற்றில் தொடர்ந்து தங்கியுள்ளது. இதுவரையான காலப்பகுதியில் தொடர்ந்து குறைந்தளவில் காணப்பட்டுள்ள பணவீக்கமானது மத்திய கிழக்கு யுத்தத்தின் தாக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற விதத்தில் முன்னர் எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்;க்க விரைவாக இலக்கிற்குத் திரும்பலடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. நெகிழ்ச்சித்தன்மைவாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பின் கீழான நாணயக் கொள்கையானது பணவீக்க எதிர்பார்க்கைகளினை நிலைநிறுத்துதல் மற்றும் விலை உறுதிப்பாட்டினைப் பேணுதல் என்பவற்றிற்கு ஆதரவளிக்கின்ற விதத்தில் முன்னோக்கிய பார்வையிலமைந்ததாகவும் தரவினால் உந்தப்பட்டதாகவும் தொடர்ந்து காணப்படும். கொடுகடன் வளர்ச்சியானது மிகவும் மிதமானதொரு வேகத்திலேனும் தொடருமென எதிர்பார்க்கப்படுகின்ற வேளையில் மத்திய கிழக்கில் நிலவுகின்ற யுத்தத்திலிருந்து தோற்றம்பெறுகின்ற வர்த்தகம், சுற்றுலா மற்றும் நிதியியல் பாய்ச்சல்கள் என்பன மீதான சாத்தியமான அழுத்தங்களிற்கு மத்தியில் வெளிநாட்டுத் துறை நிலைமைகள் தொடர்ந்தும் முகாமைசெய்யக்கூடியதாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. நடுத்தர கால படுகடன் நீடித்துநிலைத்திருக்கும் தன்மையினைப் பாதுகாப்பதற்கு இன்றியமையாததாகக் கருதப்படுகின்ற அரசிறையின் அடிப்படையிலமைந்த இறைத் திரட்சி வழிமுறைகள் முக்கிய கொள்கை முன்னுரிமையொன்றாகத் தொடர்ந்து காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
அரசியல் உறுதிப்பாட்டுடன் இணைந்து பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி நிகழ்ச்சித்திட்டம் மற்றும் படுகடன் மறுசீரமைப்பு ஆகியவற்றின் கீழான குறிப்பிடத்தக்க முன்னேற்றமானது புதுப்பிக்கப்பட்ட உள்ளாற்றல்வாய்ந்த தன்மையுடன் பொருளாதாரமென்றரீதியில் இலங்கையின் நிலைமையினை வலுப்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்தமாக, தொடர்ச்சியான கொள்கை இசைவாந்தன்மை மற்றும் சீர்திருத்தங்கள் என்பவற்றுடன் இணைந்து, பேரண்டப்பொருளாதார உறுதிப்பாட்டினை மீட்டெடுப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமானது முன்னோக்கிச் செல்கையில் நீடித்துநிலைத்திருக்கின்ற மற்றும் அனைவரையுமுள்ளடக்கிய வளர்ச்சிக்கு ஆதரவளிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும், உயர்ந்தளவிலான உலகளாவிய நிச்சயமற்றதன்மை மற்றும் காலநிலை மாற்றத்தின் தணியாத விளைவுகள் என்பவற்றினைக் கொண்ட சூழலொன்றில் கொள்கைத் தாங்கியிருப்புக்களினை நிலைபெறச்செய்தல், கட்டமைப்புசார் சீர்திருத்தங்களினைத் துரிதமடையச்செய்தல் மற்றும் நடைமுறைப்படுத்தலில் தொடர்ந்து உறுதியாகவிருத்தல் என்பன தாக்குப்பிடிக்குந்தன்மையினை வலுப்படுத்துவதற்கும் பேரண்டப்பொருளாதார மற்றும் நிதியியல் உறுதிப்பாடு என்பவற்றினைப் பாதுகாப்பதற்கும் இன்றியமையாதவையாகும்.








