தூதுக்குழுவினது விஜயத்தின் இறுதியில் விடுக்கப்பட்ட பத்திரிகை வெளியீடு, ப.நா. நிதிய அலுவலர் குழு நாட்டிற்கு விஜயம் செய்த பின்னர் அது ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட விடயங்களைக் கொண்ட ப.நா.நிதியத்தின் அறிக்கைகளை உள்ளடக்கியுள்ளது. இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் ப.நா.நிதிய அலுவலர்களின் கருத்துக்களேயன்றி அது ப.நா.நிதியத்தின் நிறைவேற்றுச் சபையின் கருத்தினைப் பிரதிபலிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இத்தூதுக் குழு ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட விடயங்களின் அடிப்படையில், அலுவலர்கள் அறிக்கையினைத் தயாரிப்பர். இது முகாமைத்துவத்தின் ஒப்புதலுக்குட்பட்டு, கலந்துரையாடல்களுக்கும் தீர்மானங்களுக்குமாக ப.நா.நிதிய நிறைவேற்றுச் சபைக்குச் சமர்ப்பிக்கப்படும்.
- உள்நாட்டு இறைவரிச் சட்ட உருவாக்கலானது மைல ;கல்லை அடைவதற்கான அடைவுமட்டமாக காணப்படுவதுடன் இது சமூக மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் அரசாங்க இலக்குகளுக்கு உதவியளிக்கும்.
- பேரண்டப் பொருளாதாரச் செயலாற்றமானது வளர்ச்சி மற்றும் பணவீக்கம் தொடர்பில் கடந்த காலத்தில் தாக்கத்தைச் செலுத்திய வரட்சி மற்றும் வெள்ளத்தினால் கலப்பானதாகக் காணப்பட்டது.
- தேறிய பன்னாட்டு ஒதுக்குகளை மீளக் கட்டியெழுப்புதலானது பொருளாதார பின்னடைவுகளை வலுப்படுத்துவதற்காக தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
ஜாவூ லீ லீ அவர்களினால் தலைமை தாங்கப்பட்ட ப.நா.நிதியத்திலிருந்தான அலுவலர் குழுவொன்று, மூன்றாண்டு விரிவாக்கப்பட்ட நிதிய வசதிகளினால் உதவியளிக்கப்பட்டுவரும் இலங்கை அதிகாரிகளின் பொருளாதார நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான இரண்டாவது மீளாய்வு தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்துவதற்காக 2017 செத்தெம்பர் 18 - 29 நாட்கள் வரையான காலப்பகுதியில் கொழும்பிற்கு விஜயம் செய்தது. இலட்சிய சீர்திருத்தத் திட்டம் மூலமாக பொது நிதியை நிலையாக வைத்திருக்க, அதிகாரிகளுக்கு இந்நிகழ்ச்சித்திட்டம் உதவி செய்வதோடு அதன் சமூக மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்திற்கான வசதிகளை உருவாக்குவதற்குமான நோக்கத்தையும் கொண்டுள்ளது. விஜயத்தின் முடிவில் திரு. லீ பின்வரும் அறிக்கையினை வெளியிட்டிருக்கின்றார்:
“விரிவாக்க நிதிய வசதிகளின் மூன்றாவது மீளாய்வினை நிறைவு செய்வது தொடர்பில் குழுவானது அரசாங்கத்துடனான அலுவலர்மட்ட இணக்கப்பாடொன்றினை எய்துவது தொடர்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தினை அடைந்துள்ளது. ஒத்தோபரில் வாஷிங்டன் டி.சியில் இடம்பெறும் ப.நா.நிதியத்தினதும் உலக வங்கியினதும் ஆண்டுக் கூட்டங்களின் போது இக்கலந்துரையாடல்கள் தொடரும்.
“ஒட்டுமொத்தமாக, பேரண்டப் பொருளாதாரச் செயலாற்றம் கலப்பான செயலாற்றமாகக் காணப்படுகிறது. 2016இன் பிற்பகுதியிலிருந்து காணப்பட்ட வரட்சி ஆண்டின் ஆரம்பத்தில் காணப்பட்ட வெள்ளம் ஆகியவற்றின் பிரதிபலிப்புக்களால் வளர்ச்சியானது மட்டுப்படுத்தப்பட்டிருந்ததுடன் பணவீக்க அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. 2017இற்கான வளர்ச்சியானது 4.5 சதவீதத்திற்குள் மாறாதிருக்கவும் வேளாண்மை உற்பத்திகளை இயல்பாக்கல் மற்றும் உட்கட்டமைப்புச் செயற்றிட்டங்களைப் பெற்றுக்கொள்ளல் போன்றவற்றினால் அடுத்த ஆண்டில் மீள் உத்வேகத்தினை அடைவதற்கு எறிவு செய்யப்பட்டுள்ளது. வரட்சி மற்றும் வெள்ளம் தொடர்பானவற்றிற்காக உணவு மற்றும் எரிபொருள் போன்றவற்றின் உயர்ந்தளவான இறக்குமதிகளின் காரணமாக நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை ஓரளவு விரிவுபடுத்த எறிவு செய்யப்பட்டுள்ளது. சந்தை மீதான நம்பிக்கையை மேம்படுத்தும் சீர்திருத்தச் செயற்பாடுகளினூடாக ஆதரவளிக்கப்பட்டு மூலதனப்பாய்ச்சல்கள் தொடர்கின்றன. காலநிலை தொடர்பான நிரம்பல்பக்கத் தளம்பல்களின் சிதறல்கள் காரணமாக, முதன்மைப் பணவீக்கமானது நடு ஒற்றை இலக்கத்தில் நிலைப்படுத்தப்பட எதிர்பார்க்கப்படுகிறது.
“தூதுக்குழுவானது, அதிகாரிகள் ப.நா.நிதியத்தின் ஆதரவுடனான பொருளாதாரச் சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டங்களை 2017 யூன் மாத இறுதியளவில் அனைத்து இறைக்கணியம்சார் இலக்குகளுடன் நடைமுறைப்படுத்துவதற்கும் பாராளுமன்றத்தால் மைல்கல்லான உள்நாட்டு இறைவரிச் சட்டத்தினை உருவாக்குவதற்கும் வலுவான முயற்சிகளை மேற்கொண்டமைக்காக அவர்களைப் பாராட்டியது. மறுபுறத்தில், குறிப்பாக அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகள் மற்றும் அரச நிதியியல் முகாமைத்துவம் போன்றவை தொடர்பான கட்டமைப்புச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தல் செயற்பாடானது கலப்பானதாகக் காணப்படுகின்றது.
“வலுவான வருமானங்கள் அடிப்படையிலான இறைத்திரட்சியானது உயர்ந்த அரச படுகடன்களைக் குறைப்பதற்கான அவசியப்பாடுகள் மாறாது காணப்படுகின்றன. இந்த வழிமுறையில் தொடர்வதற்கு, வரி அடிப்படையின் மேலதிக விரிவாக்கமானது 2018 வரவு செலவுத்திட்டத்தின் சமூக மற்றும் அபிவிருத்திச் செலவினங்களுக்கு நிதி ஒதுக்கீடு தேவையாகவுள்ளது. இதனை அடைவதற்கு, ஒழுங்குவிதிகள் மற்றும் கைநூல்களுக்கு ஆதரவளித்தல், வினைத்திறனான வரி நிர்வாகம் மற்றும் அதிகளவான விழிப்புணர்வு மற்றும் வரி செலுத்துவோரை ஊடக விரிவாக்க மூலம் தயார்படுத்தல் மற்றும் தகவல் பரப்புதல் போன்றவற்றின் மூலம் உள்நாட்டு இறைவரிச் சட்டத்தினை சுமுகமாக நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். படுகடன் முகாமைத்துவ இயலளவினைப் பலப்படுத்துதல் மற்றும் நடுத்தரகால படுகடன் உபாயத்தினை விருத்தி செய்தல் போன்றவை படுகடன் சுமை முன்னோக்கிச் செல்லுதலின் காத்திரத்தன்மையான முகாமைத்துவத்தினை இயலச்செய்யும்.
“இலங்கை மத்திய வங்கியானது பணவீக்க அழுத்தங்களைக் கண்காணிப்பதில் தொடர்ந்தும் விழிப்புடன் இருப்பதனை தொடர வேண்டியதுடன் பணவீக்கம் மற்றும் கொடுகடன் வளர்ச்சி போன்றவை கட்டுப்படுத்தப்பட வேண்டிய தேவை காணப்பட்டால், நாணயக் கொள்கையினை இறுக்கமாக்குவதற்கும் தயார்நிலையில் இருத்தல் வேண்டும். ஒதுக்குகளைப் படிப்படியாக கட்டியெழுப்புதல் நோக்கிய இலங்கை மத்திய வங்கியின் உந்துதல் தொடர்ந்திருக்க வேண்டும். இது தொடர்பில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுமைக்கான சட்டக் கட்டமைப்புக்களைப் பலப்படுத்தல், சந்தைச் செயற்பாடுகளை முன்னேற்றல் மற்றும் தொடர்பூட்டலினை மேம்படுத்துதல் போன்றவற்றிற்குத் தேவையான நெகிழ்ச்சித்தன்மையுள்ள பணவீக்க இலக்கிடல் மற்றும் நெகிழ்ச்சித்தன்மையிலுள்ள செலாவணி வீதச் சூழ்நிலை போன்றவற்றிற்கான வழிகாட்டலினை விருத்தி செய்வதற்கான இலங்கை மத்திய வங்கியின் அர்ப்பணிப்பினை இத்தூதுக்குழுவானது வரவேற்கின்றது.
“அரச நிதியியல் முகாமைத்துவத்தினையும் அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் கட்டமைப்பு சீர்திருத்தங்களின் நடைமுறைக்கிடலினை விரைவுபடுத்துதல் முக்கியமான முன்னுரிமையாகக் காணப்படுகிறது. அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் பாரியளவான நிதியியல் கடப்பாடுகள் இறை இடர்நேர்வுகளை உருவாக்குகிறது. ஆகவே, செயலாற்றக் குறிகாட்டிகள் மீதான கண்காணிப்பை மேம்படுத்துதல், அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் விசேட சீர்திருத்த உபாயங்களை விருத்தி செய்தல் மற்றும் எரிபொருள் மற்றும் மின்சார விலையிடல் சீர்திருத்தங்கள் மூலம் முகாமை செய்ய வேண்டியுள்ளது. போட்டித்தன்மையினை மேம்படுத்துதல் மற்றும் தனியார் துறை வளர்ச்சியை மேம்படுத்தல் போன்றவற்றிற்கு உதவிசெய்யும் வர்த்தக மற்றும் முதலீட்டுச் சூழ்நிலைகளை மேம்படுத்துவதற்கான பரந்த அடிப்படையிலான உபாயங்களையும் தூதுக்குழு வரவேற்கின்றது''
தூதுக்குழுவானது, பிரதம மந்திரி விக்கிரமசிங்க, நிதி அமைச்சர் சமரவீர, இராஜாங்க நிதி அமைச்சர் விக்கிரமரத்னே, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் குமாரசுவாமி, ஏனைய அரச அலுவலர்கள் மற்றும் வியாபார சமூகத்தினரின் பிரதிநிதிகள், சிவில் சமூகத்தினர் மற்றும் பன்னாட்டு பங்காளர்கள் ஆகியோரையும் சந்தித்தது.