தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 2017 ஓகத்தில் 7.9 சதவீதத்திற்கு 2017 யூலையின் 6.3 சதவீதத்திலிருந்து அதிகரித்தது. 2017 ஓகத்தின் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கத்துக்கு உணவு மற்றும் உணவல்லா வகை இரண்டும் முக்கியமாக பங்களித்தன.
ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட சதவீத மாற்றம் 2017 யூலை 6.2 சதவீதத்திலிருந்து 2017 ஓகத்தின் 6.5 சதவீதத்துக்கு அதிகரித்தது.
மாதாந்த மாற்றத்தினை நோக்கும் போது, 2017 ஓகத்தில் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணானது 2017 யூலையின் 122.4 சுட்டெண் புள்ளியிலிருந்து 122.3 சுட்டெண் புள்ளிக்கு வீழ்ச்சியடைந்தது. இம்மாதாந்த வீழ்ச்சிக்கு உணவு வகையிலுள்ள பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியே முக்கிய காரணமாகும்.
இம்மாத காலத்தில் உணவு வகையிலுள்ள காய்கறிகள், சின்னவெங்காயம், வெள்ளைப்பூடு, உடன்மீன் மற்றும் அரிசி என்பனவற்றின் விலைகள் வீழ்ச்சியடைந்தன. இதேவேளை, பெரிய வெங்காயம், சில பழங்கள், தேங்காய்கள் மற்றும் உருளைக்கிழங்கு என்பவற்றின் விலைகள் இம்மாத காலத்தில் அதிகரித்தன. ஆடை மற்றும் காலணி; தளபாடங்கள், வீட்டலகுச் சாதனங்கள், வழமையான வீட்டுப்பேணல்; நலன் (தனியார் வைத்தியசாலை அறைக் கட்டணங்கள்); போக்குவரத்து (எயார்லையின்ஸ் கட்டணம்); கல்வி (தொழிற்பயிற்சி கற்கைக் கட்டணம்) மற்றும் பல்வகைப் பொருட்கள் மற்றும் பணிகள் துணைத் துறைகளில் விலைகள் அதிகரித்தன. வீடமைப்பு, நீர், மின்வலு, வாயு, ஏனைய எரிபொருள் மற்றும் தொடர்பூட்டல் துணைத் துறைகளில் விலைகள் சிறிதளவால் அதிகரித்தன. வெறியக் குடிவகைகள் மற்றும் புகையிலைத் (பாக்கு) துணை வகைகளின் விலைகளும் 2017 ஓகத்தில் அதிகரித்தன. இதேவேளை, பொழுதுபோக்கு மற்றும் கலாச்சாரம்; மற்றும் சிற்றூண்டிச்சாலை மற்றும் சுற்றுலாவிடுதி போன்ற துணை வகைகளின் விலைகள் மாத காலப்பகுதியில் மாற்றமடையாமல் காணப்பட்டது.
பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மையப் பணவீக்கம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 2017 யூலையின் 4.2 சதவீதத்திலிருந்து 2017 ஓகத்தின் 4.8 சதவீதத்திற்கு அதிகரித்து. 2017 ஓகத்தில் ஆண்டுச் சராசரி தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மையப் பணவீக்கம் 2017 யூலையின் 5.9 சதவீதத்திலிருந்து 5.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.