இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் நந்தலால் வீரசிங்க தலைமையிலான இலங்கையின் பேராளர்குழு 2025 ஒத்தோபர் 13 – 18 காலப்பகுதியின் போது வோசிங்டன் டி.சி இல் 2025 உலக வங்கிக் குழுமம்/ பன்னாட்டு நாணய நிதிய வருடாந்த கூட்டத்தின் போது தொடரான உயர்மட்ட இருதரப்பு மற்றும் பல்தரப்புச் சந்திப்புக்களில் முனைப்புடன் பங்கேற்றது.
ஆளுநர் முனைவர் நந்தலால் வீரசிங்க வருடாந்தக் கூட்டத்தில் அவரது பங்கேற்பின் போது பன்னாட்டு நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர், உலக வங்கி குழுமத்தின் தலைவர், இரு நிறுவனங்களினதும் மூத்த அலுவலர்கள் மற்றும் ஐக்கிய அமெரிக்க திறைசேரித் திணைக்களத்தின் பிரதிநிதிகள் ஆகியோருடன் சந்திப்புக்களை மேற்கொண்டார். இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகளுக்காக இலங்கை மத்திய வங்கியினதும் நிதி அமைச்சினதும் மூத்த அலுவலர்களை உள்ளடக்கிய இப்பேராளர்குழுவிற்கு வலுவான ஆதரவு கிடைத்தது. ஆற்றல்வாய்ந்த அரசிறை மற்றும் நாணயக் கொள்கைகள், நிதியியல் முறைமை உறுதிப்பாட்டை பாதுகாப்பதற்கான முயற்சிகள், வலுப்படுத்தப்பட்ட சமூகப் பாதுகாப்பு வலைகள் அத்துடன் ஆளுகையில் தொடர்ச்சியான மேம்பாடுகள் என்பவற்றை உள்ளடக்குகின்ற நாட்டின் முன்மதிமிக்க பேரண்டப்பொருளாதார முகாமைத்துவத்திற்கு பரந்தளவிலான அங்கீகாரம் கிடைத்தது.








